கருப்பா.. கொலை கொள்ளை நடக்காம காப்பாத்து! போலீஸ் நடத்திய கிடா வெட்டு..அன்னிக்கு நைட் அரிவாள் வெட்டு!
திண்டுக்கல் : புதிய ஆண்டில் கொலை, கொள்ளை, குற்ற சம்பவங்கள், அடிதடி, விபத்து போன்ற எதுவும் நடக்காமல் இருக்க வேண்டும் என்று வண்டிகருப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து திண்டுக்கல் போலீசார் வழிபாடு நடத்திய நிலையில், அன்றிரவே திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகாவில் திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூரில் காவல் தெய்வமான வண்டி கருப்பணசாமி கோவில் உள்ளது.
அப்பகுதியை சேர்ந்த மக்களின் காவல் தெய்வமாக இந்த கோவில் கருதப்படுகிறது. மேலும் இந்தகோவிலில் இங்கு புதிதாக வாகனம் வாங்குவோர் தங்கள் வாகனங்களை கொண்டுவந்து வழிபாடு செய்துவிட்டு பயன்படுத்த தொடங்குவர்.

கிடா வெட்டு
அதேப்போல ஒவ்வொரு ஆண்டும் வாகன ஓட்டிகள் இங்கு வந்து வழிபாடு செய்துவிட்டு தங்கள் பயணத்தை தொடங்குவர். இந்நிலையில் 2023ஆம் புது வருடத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கவும், கொலை, கொள்ளை, விபத்து போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டியும் வடமதுரை காவல்துறையினர் அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோவிலில், பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

போலீசார் பங்கேற்பு
அதன்பின்னர் அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்காதேவி மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், வடமதுரை காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், குற்றப்பிரிவு, தனிப்படை போலீசார் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கிடா வெட்டு நடந்த அன்றிரவே அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

முதல் நாளிலேயே கொலை
நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டியை சேர்ந்த அஜித் குமார் நேற்று, மதுபோதையில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆரோக்கிய மாதா தெருவில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அஜித் குமாரை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்துடன் உயிருக்கு பயந்து அங்கிருந்து ஓடி வந்த அஜித் குமார் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள நத்தம் பேருந்து நிறுத்தம் அருகே மயங்கி கீழே விழுந்தார்.

முதல் கொலை
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் அந்த நபரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 2023 ஆண்டு முதல் நாள் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் படுகொலை சம்பவம் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் எல்லைக்குட்பட்ட பகுதியில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

கொள்ளை
வேடசந்தூர் அருகே சீதமரம் நால்ரோட்டில் 43 பவுன் நகை மற்றும் 18 லட்சம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும், காவல்துறை தற்போது குற்ற செயல்கள் நடைபெற கூடாது என்பதற்காக வினோத வழிபாடு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் எல்லைகள் மாறினாலும், குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது காவலர்கள் தானே தவிர காவல் தெய்வங்கள் இல்லை என்பதையும் போலீசார் உணர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Click it and Unblock the Notifications
