சிதைந்த உடல்கள்.. சிதறிய இரத்தம்! நத்தமே நடுநடுங்கிப் போச்சு.. அதென்ன உருண்டை உருண்டையாய்?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகள் கிடந்தது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியை சேர்ந்தவர் சின்னு மகன் செல்வம். இவர் ஆவிச்சிபட்டி அருகே பூலாமலை அடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் அனுமதியின்றி வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.

இந்த ஆலையில் அரியலூர் மாவட்டம் மணிமேகலை நகரை சேர்ந்த ஆனந்தன் மகன் அருண் பிரசாத் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெடி தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் சிவகாசி அருகே திருத்தங்கல் முத்துமாரியம்மன் கோவில் காலணி தெருவை சேர்ந்த குருசாமி மகன் கண்ணன் என்ற சின்னன் , சிவகாசி அருகே விஸ்வ நத்தம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் முனீஸ்வரன் என்ற மாசா இருவர் உடல் சிதறி பலியாகினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நத்தம் போலீசார் ஆங்காங்கே சிதறிக்கிடந்த இருவரின் உடல் பாகங்களையும் சாக்கு பையில் கட்டி ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூராய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து வெடி விபத்தில் தொடர்புடைய பட்டாசு ஆலை உரிமையாளர் செல்வம் என்பவரை நத்தம் அருகே ஏரக்காபட்டியில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். மற்றும் பட்டாசு ஆலை மேலாளர் அருண் பிரசாத் என்பவரை நத்தம் வேம்பரளி அருகே காவலர் சோதனை சாவடியில் சோதனையின் போது போலீசார் கைது செய்து இருவரையும் விசாரணை செய்து வருகின்றனர். இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை கலைநகர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சாலையின் அருகே உள்ள முள் புதருக்குள் 20க்கும் மேற்பட்ட சணலால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள் சிதறி கிடந்தது. இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி தலைமையிலான போலீசார் சிதறி கிடந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்றனர். மேலும் நாட்டு வெடிகள் சிதறிக்கிடந்த இடத்தின் அருகில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகள் உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் நத்தம் அருகே வெடி விபத்தில் உடல் சிதறி இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குடியிருப்பு மற்றும் பள்ளிக்கு அருகிலேயே நாட்டு வெடிகள் கிடந்தது அப்பகுதி பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே குடியிருப்பு பகுதிக்குள் நாட்டு வெடிகளை வீசி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திண்டுக்கல்லில் சில இடங்களில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகள், நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறுகின்றனர் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications