அடிச்சுத் தூக்குது அரசு கேபிள்.. சாரை சாரையாய் வரும் ஆபரேட்டர்கள்! மக்களும் செம ஹேப்பி! என்னவாம்?
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் குறைந்த கட்டணம் மற்றும் மானிய விலையில் எச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க துரிதமாக வங்கி கடன் வழங்கப்பட்டு வருவதாலும், பல தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஆர்வமுடன் இணைய தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்து வருகிறது என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கூறியுள்ளார்.
தமிழகத்தில் கலைஞர் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பல ஆண்டுகால கோரிக்கையான வாரியத்தை அமைத்துக் கொடுத்து.
அதற்கு முதல் வாரிய தலைவராக தஞ்சை ஜீவா என்பவரை நியமித்தார். கேபிள் தொழிலில் நல்ல அனுபவம் வாய்ந்த அவர் பல்வேறு சீர்திருத்தங்களையும் தொழில் நுட்பக் கோளாறுகளையும் சரி செய்து மேம்படுத்தி வருகிறார் என்கின்றனர் வாரிய உறுப்பினர்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி 16 லட்சம் இணைப்புகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், தஞ்சை ஜீவா சுற்றுப்பயணமாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று தமிழ்நாடு அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்து ஆப்பரேட்டர்களை சந்தித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல்லில் அரசு கேபிள் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். அப்போது அவருடன் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி திண்டுக்கல் மாவட்ட தாசில்தார் ஸ்ரீ காந்தி, தொழில்நுட்ப உதவியாளர் பூசாரி குமார், உதவி தொழில் நுட்ப உதவியாளர்கள், அலுவலர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களின் எட்டு ஆண்டு கால கோரிக்கையான எச்டி உயர் வரையறை செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட்டு வருவதையும், தடையில்லா சிக்னல் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு நிகராக உள்ளூர் சேனல்கள் ஆகியவற்றை வழங்கி வருவதையும், அவர் ஆய்வு செய்தார். அரசு கேபிள் டிவியில் இருந்து பல்வேறு காரணங்களுக்காக வெளியேறி, தனியார் நிறுவனத்திற்கு சென்ற ஆபரேட்டர்கள், தற்போது அரசு கேபிளில் சேவை மற்றும் குறைந்த கட்டணம் ஆகியவற்றால் ஆர்வத்துடன் மீண்டும் அரசு கேபிள் டிவியில் இணைந்து, கேபிள் டிவி சேவையைப் பெற்று பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருவதாக, கேபிள் ஆபரேட்டர்கள் தெரிவித்தனர்.
மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வழங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து ஆப்பரேட்டர்களுக்கு உடனடியாக கடனுதவி 25 ஆயிரம் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு புதிய எச்டி செட்டாப் பாக்ஸ் வாங்க ரெண்டு லட்ச ரூபாய் வீதம் 500 கோடி வழங்க ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆபரேட்டர்களுக்கு தாமதம் இன்றி வங்கி கடன் மூலம் எச்டி செட்டாப் பாக்ஸ் வழங்கி வருவதற்கும், நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா மற்றும் கேபிள் டிவி மேலாண்மை இயக்குனராக கூடுதல் பொறுப்பாக செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் ஆகியோருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நன்றி தெரிவித்தனர்.
ஆய்வை தொடர்ந்து பேசிய வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கூறுகையில், "அரசு கேபிள் டிவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு தேவைக்கேற்ப உள்ளூர் சேனல்களும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆபரேட்டர்களுக்கு தடையில்லாத சிக்னலை உறுதி செய்ய தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மிகவும் எளிதாக வங்கி கடன் பெற்று தந்து புதிய எச்டி செட்டாப் பாக்ஸ் துரிதமாக வழங்கி வருவதால், படிப்படியாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விரைவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெற்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலுடன் அரசு கேபிள்டிவி விநியோகஸ்தர்களையும் ஆபரேட்டர்களையும் பங்குதாரர்களாக்க மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications