இந்தியாவில் தங்கத்திற்கு தட்டுப்பாடு? அமீரக கோல்ட்டை இறக்குமதி செய்வதில் திடீர் குழப்பம்
துபாய்: இந்தியா - ஐக்கிய அமீரகம் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் தங்க இறக்குமதிக்கான புதிய ஒதுக்கீட்டை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதனால் இந்திய இறக்குமதியாளர்கள் புதிய ஆர்டர்களை உறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தங்க வர்த்தகமும் மந்தமாகியுள்ளது. இதே நிலை நீடித்தால் தங்க கடத்தல் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியா - ஐக்கிய அமீரகம் இடையே 2022ஆம் ஆண்டு விரிவான பொருளாதார ஒப்பந்தம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி கீழ் அமீரகத்தில் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு சுங்க வரியில் 1 சதவீத சலுகை வழங்கப்படுகிறது. அதேநேரம் இந்த சலுகை அனைவருக்கும் கிடைக்காது. சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

தங்கம்
இதன் கீழ் வழக்கமாக 15 சதவீதம் விதிக்கப்படும் இறக்குமதி வரி, சில தகுதியான இறக்குமதி நிறுவனங்களுக்கு மட்டும் 14 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் இதற்காக ஒவ்வொரு ஆண்டும் டி.ஆர்.க்யூ (Tariff Rate Quota) என்ற ஒதுக்கீட்டை அறிவிக்கும். அதில் தகுதி வாய்ந்த இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் அவர்கள் எவ்வளவு இறக்குமதி செய்யலாம் என்பது குறித்த விவரம் இடம்பெற்றிருக்கும்.
மவுனம்
கடந்த 2025-26 நிதியாண்டில் 180 டன் தங்கத்திற்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 2026-27 நிதியாண்டுக்கான புதிய ஒதுக்கீடு இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கடந்த ஆண்டுக்கான உரிமங்களின் காலாவதியை செப்டம்பர் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது கடந்தாண்டு உரிமம் கிடைத்தவர்கள் இந்தாண்டு செப்டம்பர் வரை இறக்குமதி செய்யலாம். ஆனால், புதிய ஒதுக்கீடு இல்லை என்பதால் கடந்தாண்டு ஒதுக்கீடு செய்து பயன்படுத்தப்படாமல் இருக்கும் தங்கத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். இது பல நிறுவனங்களுக்கு குறைவாகவே இருப்பது தான் இப்போது பிரச்சினை!
என்ன காரணம்!
TRQ ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து சில இறக்குமதி நிறுவனங்கள் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், புதிய ஒதுக்கீடு தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், வழக்கை தாண்டி சில காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது இப்போது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.
இதற்கு தங்க இறக்குமதியும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதாவது தங்கத்தை நாம் இறக்குமதி செய்யும்போது, டாலரில் தான் பணம் தர வேண்டும். இதனால் அந்நிய செலாவணி குறைகிறது. எனவே, அதை கட்டுப்படுத்தவே புதிய ஒதுக்கீட்டை தாமதப்படுத்தி இருக்கலாம் என சிலர் கருதுகிறார்கள். இருப்பினும், என்ன காரணம் என்பது தொடர்பாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அவதி
இந்த தாமதம் துபாயை சேர்ந்த தங்க ஏற்றுமதியாளர்களையும் சரி, இந்தியாவில் தங்க இறக்குமதியாளர்களையும் சரி நேரடியாக பாதித்துள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் விரைந்து தலையிட்டு புதிய TRQ ஒதுக்கீட்டை அறிவிக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக இருக்கிறது. ஒருவேளை இந்த ஒதுக்கீட்டை அறிவிக்க மேலும் தாமதம் ஆனால் தங்க கடத்தல் ஆபத்து இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
மத்திய அரசை பொறுத்தவரை இக்கட்டான ஒரு சூழலில் இருக்கிறது. தங்க இறக்குமதியால் நாட்டின் அந்நிய செலாவணி தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் ஒதுக்கீட்டை அறிவிக்காமல் இருந்தால் தங்க கடத்தல் ஆபத்தும் இருக்கவே செய்கிறது.


Click it and Unblock the Notifications
