"வாடகைக்கே சொத்தை எழுதி வைக்கணும்.." துபாயில் இவ்வளவு பிரச்சனை இருக்கா? கதறும் இந்தியர்
துபாய்: ஐக்கிய அமீரகம் என்றவுடன் பலருக்கும் ஒரு சொர்க்கம் போன்ற நகரமே நினைவுக்கு வரும். ஆனால், உண்மையில் துபாயில் பல சிக்கல்கள் இருப்பதாக அங்கு வாழும் இந்தியர் சொல்கிறார். அங்கு வாய்ப்புகள் அதிகம் என்றாலும் யதார்த்தச் சிக்கல்கள் மறைக்கப்படுவதாகவும் துபாய் வரும் முன்பு அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியர்கள் பலரும் வேலைக்காகச் செல்லும் நாடுகளில் ஒன்று ஐக்கிய அமீரகம். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பலரும் வேலைக்காக துபாய் உள்ளிட்ட அமீரக நகரங்களுக்குச் செல்கிறார்கள்.

துபாய்
பிரகாசமான விளக்குகள், அதிகச் சம்பளம் என்று அனைத்துத் தரப்பு மக்களையும் வசீகரிக்கும் ஒரு இடமாக துபாய் சித்தரிக்கின்றன. ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள், உயர்தர உணவுகள், வேகமான வாழ்க்கை முறை ஆகியவையே துபாய் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், அங்கு இரண்டு ஆண்டுகள் வசித்த ஓர் இந்தியர், அந்நகர வாழ்க்கை குறித்த வேறு ஒரு பார்வையை நமக்கு வழங்கியுள்ளார்.
வாய்ப்புகள் அதிகம்
இது தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோ இன்ஸ்டாகிராம் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. தான் துபாயை விமர்சிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிடவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ள அவர், துபாய் செல்வோர் யதார்த்தத்தை உணர்ந்து திட்டமிட வேண்டும் என்றும் அதற்காகவே இந்தத் தகவல்களைப் பகிர்வதாக அவர் குறிப்பிட்டார். தான் முதலில் வந்தபோது, இணையத்தில் பார்த்தவற்றால் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறினார். வாழ்க்கை முறை, அனுபவம், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் வாய்ப்புகள் அதிகம் இருந்தது உண்மை தான் என்றும் அவர் சொல்கிறார்.
சிக்கல்கள்
அதேநேரம் துபாய் சவால்கள் மற்றும் சிக்கல்கள் குறித்து மிக அரிதாகவே பேசப்படுவதாக அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பு அதிகம் என்றாலும் சீக்கிரம் கிடைக்காது.. ஏகப்பட்ட நிறுவனங்களுக்கு விண்ணப்பித்தாலும் கூட மிகக் குறைந்த அளவிலேயே ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்கிறார். இதனால் வேலை தேடுவது சீக்கிரமே மனச்சோர்வைக் கொடுப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும், துபாயில் வாழ்க்கை நடத்த அதிகச் செலவாவதாகக் குறிப்பிட்ட அவர், ஒருவரின் சம்பளத்தில் பெரும்பகுதியை வாடகையே சாப்பிட்டுவிடுவதாகவும் கூறுகிறார். எதிர்பாராத அபராதங்கள், கூடுதல் செலவுகளையும் சேர்த்தால் சேமிப்பதே கடினமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். நிதிச் சிக்கல்கள் மட்டுமே பிரச்சினை எனச் சொல்லவிட முடியாது.
துபாய் நகரம்
வேறு பல அழுத்தங்களும் உள்ளதாம். குறிப்பாக மற்றவர்கள் அதிகத் தொகை செலவழிக்கும்போது, நாம் மட்டும் எண்ணி எண்ணிச் செலவழிப்பதே கூட மனச்சோர்வைத் தருவதாகச் சொல்கிறார். மேலும், எவ்வளவு வேலை செய்தாலும் அது போதாததாகவே இருக்கும் என்றும் அது மனக்குறையாகவே இருக்கும் என்றும் அவர் சொல்கிறார். அதேநேரம் நகரத்தின் பாதுகாப்பு, பல நாடுகளைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஆகியவை துபாயில் மட்டுமே சாத்தியம் என்கிறார்.
அதாவது அவர் சொல்ல வருவது ஒன்று தான். துபாய் ஒரு கவர்ச்சியான நகரமாக இருந்தாலும் அதில் சில பல சிக்கல்கள் இருக்கவே செய்கிறது. துபாயில் இருக்கும் வாய்ப்புகளை மட்டும் பார்த்து அங்குச் செல்லாமல் அதில் இருக்கும் சிக்கல்களையும் யதார்த்தப் பிரச்சினைகளையும் கூட நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications