நோ நோ.. சஞ்சுவை தொடர்ந்து ஆர்சிபி பரத் பற்றி ஸ்ரீகாந்த் கமெண்டரியில் சொன்ன 'அந்த' வார்த்தை சர்ச்சை
துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தமிழ் கமெண்டரி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அதிலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் செய்யும் தமிழ் வர்ணனை அடுத்தடுத்த நாட்களில் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது ஸ்ரீகாந்த் சொன்ன ஒரு கமென்ட் பூதாகரமாக கிளம்பி இருந்தது.
இந்த விஷயத்தை அப்படியே சமூக வலைத்தளத்தில் தூக்கிப்போட்டு இரு நாட்களாக வறுத்து தள்ளினர் நெட்டிசன்கள்.

சஞ்சு என்..
ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேனும், கேப்டனுமான சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்தபோது, கமெண்டரி செய்த ஸ்ரீகாந்த், சிக்சர் வேண்டும், சிக்சர் வேண்டும் என்று கூறியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில், சஞ்சு என் குஞ்சு அடிப்பா.. என்று வர்ணனை செய்ய ரசிகர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. இதனால் அது சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

மலையாள சொல்
அதேநேரம், குஞ்சு என்பது மலையாளத்தில், சின்னப்பையன் என்ற அர்த்தத்தில் வரக்கூடிய சொல். சஞ்சு சாம்சன், மலையாளி என்பதால் ஸ்ரீகாந்த் இவ்வாறு கூறினார். எனவே அதில் தவறு கிடையாது என்று ஸ்ரீகாந்த் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர் .

ஆர்சிபி போட்டி
இந்த நிலையில், நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 149 ரன்கள் எடுத்தது இரண்டாவதாக பேட் செய்த பெங்களூர் அணியின் தொடக்க வீரர்கள் தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி ஆகியோர் குறிப்பிட்ட இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு ஸ்ரீகர் பரத் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை மீட்டு எடுத்தனர் .
Recommended Video

300 ரன்கள் விளாசிய திறமைசாலி
உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆந்திரா அணிக்காக விளையாடுபவர் ஸ்ரீதர் . விக்கெட் கீப்பராகவும் செயல்படுகிறார். 2015ம் ஆண்டு ரஞ்சிக் கோப்பை போட்டியில் முச்சதம் விளாசினார் பரத். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முச்சதம் விளாசியது ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் முதல் முறை. தனது டெஸ்ட் அனுபவத்தை சிறப்பாக பயன்படுத்தி நங்கூரம் பாய்ச்சி அதேநேரம் சரியான நேரத்தில் எளிதான பந்துகளை ரன்னுக்கு விளாசி 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார் பரத்.

மோரிஸ் பந்தில் சிக்சர்
இந்த நிலையில், மோரிசன் வீசிய ஒரு பந்தை அனாயசமாக சிக்சருக்கு விளாசினார் பரத். அப்போது அவரைப் பார்த்து முறைத்தபடி ஏதோ வாய்க்குள் பேசினார் மோரிசன். இந்த சம்பவம் நடந்தபோது, கமெண்ட் செய்யும் இடத்தில் அமர்ந்திருந்தது ஸ்ரீகாந்த் மற்றும் முத்து. "ஒரு சின்ன பையன் அடித்துவிட்டான்.. அதன் பிறகு எதற்கு மோரிஸ் உனக்கு முறைப்பு.." என்று கமெண்ட் அடித்தார் ஸ்ரீகாந்த்.

ஊரு பேரு தெரியாத பையன்
அதுவரை எல்லாம் நல்லாத்தான் போய் கொண்டு இருந்தது. அதோடு விடவில்லை ஸ்ரீகாந்த். மேலும் அவர் கூறுகையில், ஊர் பேரு தெரியாத பையன் சிக்ஸ் அடிக்கிறான் வாங்கிகிட்டு போவியா, அதை விட்டுட்டு பதிலுக்கு பேச்சு வேண்டி கிடைக்கிறதா என்றாரே பார்க்கலாம்.. ரசிகர்கள் அதிர்ந்து போய் விட்டனர். இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வீரர் ஒருவரை ஊரு பேரு தெரியாத பையன் என்று அழைப்பது கமெண்டரி தர்மமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள் .

வர்ணனை தர்மம் இல்லையே
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் ஒரு தொலைக்காட்சியில் ஆங்கில வர்ணனை செய்து கொண்டிருந்தபோது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் ஆம்லாவை தீவிரவாதியுடன் ஒப்பிட்டுப் பேசினார். அவர் நீளமாக தாடி வளர்த்து இருப்பதை ஒப்பிடுகிறேன் பேர்வழி என்று இவ்வாறு அபத்தமாக ஒரு கமென்ட் அடித்தது பெரும் சர்ச்சையானது. இதன்பிறகு அவர் அந்தப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். அந்த அளவுக்கு வர்ணனை பதவி என்பது மிகவும் முக்கியமானது. பொறுப்புடன் பேச வேண்டியது. ஆனால் சஞ்சு, என் குஞ்சு என்பதும், ஊரு பேரு தெரியாத பையன் என்று இந்திய கிரிக்கெட் வீரரை பார்த்து அழைப்பதும், வர்ணனை தர்மம் கிடையாது என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications