சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி.. அமீரக அரசுக்கு அழைப்பிதழ் கொடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்
துபாய்: துபாய்க்கு அரசுப் பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ள நிலையில், இன்று அவர்கள் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சிக்குச் சென்றனர்.
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல புதிய திட்டங்களும் கூட இதற்காகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி சிறந்து விளங்கும் மாணவர்களைக் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு 68 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களைத் துபாய்க்கு கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமை அவர்கள் விமானம் மூலம் துபாய் அழைத்துச்செல்லப்பட்டனர்ய
அவர்களுடனேயே அமைச்சர் அன்பில் மகேஷும் உடன் சென்றார். அங்கு பல்வேறு இடங்களை அரசுப் பள்ளி மாணவர்கள் சிற்றி பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.
குறிப்பாகத் துபாயின் ஜெபல் அலி உள்ள பிரம்மாண்ட இந்து கோயில், லூவர் மியூசியம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து கஸ்ர் அல் வதன் அரண்மனைக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரண்மனையை அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷும் சுற்றிப் பார்த்தார்.

மூன்றாவது நாளான இன்று ஷார்ஜாவில் நடைபெறும் உலக புகழ்பெற்ற புத்தகக் கண்காட்சிக்கு மாணவ மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷை அங்கிருந்த அதிகாரிகள் வரவேற்றுக் கவுரவித்தனர். அதைத் தொடர்ந்து அங்கு நடைபெற்ற கா\லாசார நிகழ்விலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். பல்வேறு தமிழ் கலாசார நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், அதை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆர்வமாகக் கண்டு ரசித்தார்.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி நடைபெறும். அதன்படி அடுத்தாண்டு நடைபெறும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு துபாய் அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பிதழ் வழங்கினார்.