துபாய் போயும் விடல.. சொகுசு ஹோட்டல் பால்கனியில் துணியை காய வைத்த பெண்.. அதுக்கு ஒரு விளக்கம் வேற
துபாய்: துபாயில் உள்ள சொகுசு விடுதியின் பால்கனியில் அம்மா துணிகளை உலர்த்தும் வீடியோவை பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த ஒரு வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் ஒரு விவாதத்தையே கிளப்பிவிட்டுள்ளது. ஒரு தரப்பு அதற்கு ஆதரவாகக் கருத்துச் சொன்னாலும் மற்றொரு தரப்பு அதைச் சரமாரியாக விமர்சித்தே வருகிறார்கள்.
முன்பெல்லாம் மிகப் பெரிய பணக்கார இந்தியர்களால் மட்டுமே வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

வீடியோ: இதற்கிடையே இன்ஸ்டாகிராம் தளத்தில் பல்லவி வெங்கடேஷ் என்ற யூசர் இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். துபாயில் உள்ள அட்லாண்டிஸ், தி பாம் நட்சத்திர விடுதியின் பால்கனியில் தனது தாயார் துணிகளை உலர வைக்கும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அங்கே மற்றொரு பால்கனியிலும் இதேபோல துணிகள் உலர வைக்கப்பட்டு இருப்பதும் வீடியோவில் உள்ளது. பாம் அட்லாண்டிஸ் விடுதியில் அம்மா தனது வழக்கமான வேலைகளைச் செய்கிறார் என்று பதிவிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அது தான் இப்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.. ஒரு தரப்பினர் இந்த அந்த பெண்ணை புகழ்ந்து வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பினர் அந்த பெண்ணுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.
ஹோட்டல் நிர்வாகம்: குறிப்பாக அந்த ஹோட்டல் நிர்வாகமே இந்த வீடியோவுக்கு கமெண்ட் பதிவிட்டுள்ளது. அதில், "உங்களுக்கு எங்கள் ஹோட்டலில் மிகவும் சிறப்பான ஒரு அனுபவம் கிடைத்திருக்கும் என நம்புகிறோம்.. ஒவ்வொரு குளியலறையிலும் உலர்த்தத் தனியாக ஒரு கருவியை வைத்து உள்ளோம். குளிக்கும் போது அதில் நீங்கள் உங்கள் ஆடைகளை உலர வைக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
அதற்கு இந்த வீடியோவை பகிர்ந்த பல்லவி வெங்கடேஷ் பதிலும் அளித்திருந்தார். அதாவது ஹோட்டல் ரூமை ஒரு மணி நேரத்தில் காலி செய்ய வேண்டி இருந்ததாகவும் அது அந்த கருவியில் ஆடைகளை உலர்த்த போதுமானதாக இல்லை என்று பதிவிட்டிருந்தார். துபாய் வெப்பத்திற்கு வெளியே 10 நிமிடங்களில் காய்ந்துவிடும் என்பதாலேயே தனது தாயார் இப்படிச் செய்ததாக அவர் அதற்குப் பதிலளித்திருந்தார்.
நெட்டிசன்கள்: ஹோட்டல் நிர்வாகத்திற்கும் அந்த பெண்ணுக்கும் நடந்த உரையாடல் அவ்வளவு தான்.. ஆனால் நெட்டிசன்கள் இதை விடுவதாக இல்லை. சில நாட்களாகவே இது குறித்துப் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் தாய்- மகள் செயலை பாராட்டும் அதேநேரம் மற்றொரு தரப்பினர் அவர்களை விமர்சிக்கும் வகையிலான கருத்துகளையும் கூறி வருகிறார்கள்.
ஒரு யூசர், "நீங்கள் பாம் அட்லாண்டிஸில் ஹோட்டல் புக் செய்து தங்கும் அளவுக்குப் பணக்காரராக இருக்கும்போது, மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் அல்லது உங்களை எப்படி மதிப்பிடப் போகிறார்கள் என்பது குறித்துக் கவலைப்படக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
விமர்சனம்: மற்றொருவர் அம்மாக்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் சில விஷயங்களை அவர்களிடம் இருந்து பிரிக்கவே முடியாது என்று பதிவிட்டுள்ளார். அம்மாவின் செயல் க்யூட்டாகவே இருக்கிறது. இதில் யாருக்கும் பிரச்சினை இல்லை.. அப்படி இருக்கும் போது ஏன் இதைப் பலரும் விமர்சிக்கிறார்கள் எனப் புரியவில்லை என்று மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், சில யூசர்கள் இந்த செயலை கண்டித்துள்ளனர். ஒருவர் "இதை மற்ற நாடுகளில் மோசமான நடத்தையாகவே கருதுவார்கள். ஹோட்டலுக்கு ரூல்ஸ் இருக்கும் போது அதை நீங்கள் பின்பற்ற வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு நபர் துபாயில் இதைச் செய்வது சட்டவிரோதமானது என்றும் இதற்காக மிகப் பெரிய அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications