“மெகா முட்டை”.. ஈரோடு கிழக்கில் 12 வேட்பாளர்கள் “டக் அவுட்” - ஒரு ஓட்டு கூட வாங்காத பரிதாபம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 12 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறவில்லை.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் 2 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் 12 வேட்பாளர்கள் ஒரு வாக்கு கூட பெறாமல் பூஜ்ஜியம் என்ற பரிதாபகரமான நிலையில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பன்மடங்கு வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கும் நிலையில் இப்படியும் ஒரு முடிவு வெளியாகி இருக்கிறது.
கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 2 வது இடத்தில் இருந்து வருகிறார். 3 வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்ளார். ஆனால் அதிமுக வேட்பாளருக்கும் நாம் தமிழர் வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசம் பன்மடங்கு குறைவாக உள்ளது.

திருமகன் ஈவேரா மறைவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனான இவரது மரணத்தால் ஈரோடு கிழக்கு தொகுதியை தேர்தல் ஆணையம் காலியானதாக அறிவித்தது. இதனை அடுத்து பிப்ரவரி 27 இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளர்
இந்த தேர்தலிலும் திமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனையே வேட்பாளராக அறிவித்தது. அதே நேரம் அதிமுகவில் உட்கட்சிப் பூசல் காரணமாக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டியது.

அதிமுக வேட்பாளர்
இந்த நிலையில் கே.எஸ்.தென்னரசுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக அறிவித்தது. செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவித்தது. இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தலில் இருந்தே விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்ததால் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார்.

நாம் தமிழர் மற்றும் தேமுதிக
அதேபோல் மேனகா நாம் தமிழர் கட்சி வேட்பாளராகவும், ஆனந்த் தேமுதிக வேட்பாளராகவும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். அவர்களுடன் பல சிறிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேட்சையில் என மொத்தம் 77 வேட்பாளர்களை கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருந்தது.

வாக்கு எண்ணிக்கை
பிரதான எதிர்க்கட்சிகளை கடந்து 77 வேட்பாளர்களும் பல்வேறு காரணங்களுக்கு தேர்தலில் போட்டியிட்டு வித்தியாசமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர். தீவிர தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

12 வேட்பாளர்கள் பூஜ்ஜியம்
சுயேட்சைகளின் பிரச்சாரங்கள் மக்களை திரும்பிப் பார்க்க வைத்தாலும் அது ஓட்டாக மாறவில்லை என்பதையே இன்றைய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குறிப்பாக 2 சுற்று தேர்தல் முடிவுகளில் 12 வேட்பாளர்கள் ஒரு ஓட்டு கூட பெறாமல் பூஜ்ஜியமாக உள்ளார்கள். பல வேட்பாளர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கையே பெற்று உள்ளார்கள். அடுத்தடுத்த சுற்றுகளில் இவர்கள் பூஜ்ஜியத்தை கடப்பார்களா என்று பார்ப்போம்.












Click it and Unblock the Notifications