பணம் பாதாளம் வரை சென்றாலும்.. ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி.. ஆர்பி உதயகுமார்!
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிமுக நிச்சயம் வெற்றிபெறும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல் பல்வேறு துரோகங்களை கடந்து எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை மீட்டெடுத்துள்ளதாக கூறிய அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதாக கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த மாதம் 4ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கேஎஸ் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் களத்தில் இருக்கிறார்கள். இதில் ஆளுங்கட்சியை வீழ்த்தும் முனைப்புடன் அதிமுக பணியாற்றி வருகிறது.

ஆர்பி உதயகுமார் பேட்டி
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரு தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஆர்பி உதயகுமார் கூறுகையில், இந்த தேர்தலை ஆளும் கட்சியின் பண பலம், அதிகார பலம் கொண்டு சந்தித்து வருகிறது. நாங்கள் சத்தியத்தையும், உண்மையையும் சொல்லி மக்களை சந்தித்து வருகிறோம்.

திமுக மீது கோபம்
இதனால் எங்கள் பிரச்சாரம் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதை உணர முடிகிறது. மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசு எத்தனை சுமைகள் வந்தாலும் அதனைத் தாங்கிக் கொண்டு மக்கள் மீது சுமைகளை சுமத்தாமல் இருந்தது.

தேர்தல் வாக்குறுதிகள்
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தான் திமுக அரசு ரிப்பன் வெட்டி திறந்து வைத்துக் கொண்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்று 520 திட்டங்களில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை.

மாற்றத்தை விரும்புகிறார்கள்
மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறினார்கள். இதுவரை ஒன்றும் செய்யவில்லை. முதல் தலைமுறையினர் அதிமுகவுக்கு ஓட்டு போட முடிவு செய்து விட்டனர் . ஈரோடு நகர் பகுதியில் சொத்து வரி உயர்வு, மின்சார உயர்வு, விலைவாசி உயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

திண்டுக்கல் இடைத்தேர்தல்
அதேபோல் பல்வேறு தடைகளையும், துரோகங்களையும் கடந்து எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ளார். திண்டுக்கல், மருங்காபுரி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தையும் தாண்டி அதிமுக வெற்றி பெற்றது. அதேபோன்று இந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தில் பணம் பாதாளம் வரை சென்றாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும், அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications