ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் செலவு! நொந்து நூடுல்ஸ் ஆகும் பொறுப்பாளர்கள்! கள நிலவரம் என்ன?
தேர்தல் பணியில் ஈடுபடும் கட்சிக்காரர்களுக்கு செலவு செய்யும் பொறுப்பாளர்கள்
ஈரோடு: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களும், திமுக மாவட்டச் செயலாளர்களும், செலவுகளால் நொந்து நூடுல்ஸ் ஆகி வருகின்றனர்.
தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள திமுக காரர்களுக்கு மட்டுமின்றி ஒரு சில இடங்களில் காங்கிரஸ்காரர்களுக்கும் சேர்த்து செலவு செய்ய வேண்டியிருப்பதால் தவித்து வருகின்றனர்.
அமைச்சர்கள் பரவாயில்லை செலவுகளை சமாளித்துக் கொள்கிறார்கள், ஆனால் திமுக மாவட்டச் செயலாளர்கள் நிலைமை தான் திண்டாட்டமாக உள்ளது.

ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா அண்மையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டதுடன் இடைத்தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

12 அமைச்சர்கள்
காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டதில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு அதிக பங்கு உள்ளது. இந்நிலையில் குறைந்தபட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்திலாவது இளங்கோவனை ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற இன்ஸ்ட்ரக்ஷனுடன் 12 அமைச்சர்களையும், 19 மாவட்டச் செயலாளர்களையும் தேர்தல் பொறுப்பாளர்களாக பணியமர்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மொத்த பேரும்
இது மட்டுமல்லாமல் அந்த லிஸ்டில் இடம்பெறாத அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களையும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் களமிறக்கி தேர்தல் பணிகளை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது கட்சித் தலைமை. இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திரும்பிய பக்கமெல்லாம் விஐபிக்களை காண முடிகிறது. ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தன்னுடன் தங்கள் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகளை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அழைத்து வந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறாகள்.

செலவுக்கு திண்டாட்டம்
அவ்வாறு தங்களுடன் அழைத்து வந்தவர்களுக்கு டீ, சாப்பாடு, விடுதி முதல் நாள் செலவு வரை எல்லாவற்றையும் மாவட்டச் செயலாளர்களே கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. அமைச்சர்கள் ஓரளவு செலவுகளை சமாளித்துக் கொள்கிறார்கள் என்றால் மாவட்டச் செயலாளர்கள் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை திண்டாட்டமாக உள்ளது. இதனை வெளியே சொன்னால் கவுரவம் குறைந்துவிடும் என்பதால் பலரும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்து வருகிறார்கள்.

ஒரு வாரம் தான்
பிரச்சாரம், களப்பணி தொடங்கி ஒரு வாரம் தான் ஆகிறது, அதற்குள் இந்த நிலை என்றால் இன்னும் இந்த மாதம் முழுவதும் 25ஆம் தேதி வரை ஈரோடு கிழக்கில் தான் தேர்தல் பணியாற்ற வேண்டியிருக்கும். இதனால் செலவுகளை எண்ணி பலரும் நொந்து நூடுல்ஸ் ஆகி வருகிறார்கள் என்பது கள யதார்த்தமாகும்.












Click it and Unblock the Notifications