விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. ஈரோடு சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஈரோடு: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஈரோடு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் பேருந்துகள், வாகனங்கள் வெள்ளநீரில் மிதந்து செல்கின்றன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் அந்தமான் அருகே குறைத் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் பிற்பகலுக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டி வருகிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்தது.
கொட்டும் கனமழை..ஓடைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..சதுரகிரி மலையேற தடை விதித்த வனத்துறை

விடிய விடிய மழை
வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே ஈரோட்டில் நேற்றிரவு பெய்த கனமழை கொட்டியது. விடாமல் பெய்த
கனமழையால் ஈரோடு ரயில் நிலையம் அருகே உள்ள டோனி பிரிட்ஜ் மற்றும் அதன் சுற்றுப்புற வீடுகளில் புகுந்த மழை நீரால் பெருமளவு வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கட்டில் மெத்தை டிவி உள்ளிட்ட முக்கிய பொருள்கள் மழை வெள்ள நீரில் மூழ்கின.

சாலைகளில் ஆறு
கனமழையால் சாலைகளை மூழ்கடித்துக்கொண்டு வெள்ள நீர் ஆறாக ஓடியது. சாலைகளை கடந்து சென்ற மக்கள் கண்டு ரசித்தனர். பேருந்து, இருசக்கர வாகனங்கள், கார்கள் வெள்ள நீரில் மிதந்து கொண்டு சென்றன.

வீடுகளுக்குள் வெள்ள நீர்
ஈரோட்டில் சாலை ஒரங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது.
ஈரோடு ரங்கம்பாலையம், சத்யா நகர், மூலப்பாலையம், சேனாதிபதி பாளையம், செட்டிப்பாலையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பெய்த கன மழை காரணமாக சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்து உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.

மூதாட்டி பலி
ஈரோட்டில் மழை வெள்ளத்தில் மூழ்கி 75 வயது மூதாட்டி ரங்கம்மாள் உயிரிழந்தார். ஈரோடு பெரும்பள்ளம் ஓடையில் பெருக்கெடுத்த தண்ணீர் அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீரில் சிக்கி மூதாட்டி ரங்கம்மாள் பலியாகியுள்ளார்.

வியாபாரம் பாதிப்பு
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று தொடங்கிய நான்கு நாட்கள் ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சொன்ன முதல் நாளிலேயே இது போன்ற பெய்த மழையால் மீதமுள்ள மூன்று நாட்கள் மேலும் தீபாவளி பண்டிகை தினம் என்பதால் வழக்கமான மழைக்கு மற்றும் அஞ்சாத பொதுமக்கள் தற்பொழுது ஈரோட்டில் நிலவும் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சத் தொடங்கியுள்ளனர்.

தாளவாடியில் கனமழை
தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பெய்த கனமழையால் வெள்ளநீர் பாலத்தை மூழ்கடித்துள்ளது. தாளவாடியை அடுத்த திகனாரை ஏரகனள்ளி, கெட்டவாடி, பனக்கள்ளி, நெய்தாளபுரம், கோடிபுரம், தலமலை, தமிழ்புரம் ஆகிய பகுதிகளில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

போக்குவரத்து பாதிப்பு
இதன்காரணமாக தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் ஒரு சில வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் தரைப்பாலத்தில் கரைபுரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றனர். பின்னர் மீண்டும் இரவு 7 மணி அளவில் தாளவாடி, தொட்டகாஜனூர், இரியாபுரம், சிக்கள்ளி, ஓசூர், சூசைபுரம், மெட்டல்வாடி ஆகிய பகுதியில் பலத்த மழை கொட்டியதால் வெள்ள நீர் சூழ்ந்தது.