இதைத்தான் கவனிக்கணும்.. அண்ணாமலை ஏன் "அப்படி" சொன்னார்? அப்போ இனி எல்லாம் எடப்பாடிதானா? போச்சே!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் பாஜக என்ன நிலைப்பாடு எடுக்கும், அண்ணாமலை யாருக்கு ஆதரவு கொடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான கேள்விகளுக்கு மூத்த பத்திரிகையாளர் பா.கி பதில் அளித்துள்ளார்.
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என்று அதிமுகவின் இரண்டு அணியும் இதில் மோதுவதால் எங்கே சின்னம் முடங்கிவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் இரண்டு தரப்பும் அடுத்தடுத்து பல்வேறு மீட்டிங்குகளை நடத்தி வருகின்றன.
இந்த இடைத்தேர்தலில் பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலையே, ஈரோடு கிழக்கில் திமுக கூட்டணியின் பவர் + பண பலம் இரண்டையும் சமாளிக்க வேண்டும் என்பதால், வலிமையான கட்சிதான் களமிறங்க வேண்டும். எங்கள் கூட்டணியில் வலிமையான கட்சி என்றால் அது அதிமுகதான்.
நாங்கள் தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்போம் என்பதை விரைவில் அறிவிப்போம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இதில் முடிவு எடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் அண்ணாமலை அதிமுகவிற்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேட்டி
இந்த நிலையில் அண்ணாமலையின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான கேள்விக்கு மூத்த பத்திரிகையாளர் பா.கி பதில் அளித்துள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அண்ணாமலை சொன்னதை கவனிக்க வேண்டும். இது பலப்பரீட்சை அல்ல என்று அண்ணாமலை கூறி உள்ளார். திமுகவை எதிர்க்கும் தீவிர எதிர்க்கட்சி, செயல்துடிப்புள்ள எதிர்க்கட்சி நாங்கள்தான் என்று அண்ணாமலை கூறி வந்தார். ஆனால் அவரே இந்த தேர்தல் பலப்பரீட்சை இல்லை என்று கூறுகிறார். அவர் அப்படி கூறுவதற்கு பல அர்த்தங்கள் எடுத்துக்கொள்ள முடியும். எனக்கும் திமுகவிற்கு உண்டான பலப்பரீட்சை இது அல்ல என்று அவர் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். கூட்டணியில் நாங்கள் பெரிய ஆள் இல்லை என்று அவர் சொன்னதாக எடுத்துக்கொள்ள முடியும். அதோடு கூட்டணியில் அதிமுகவை அவர் பெரிய ஆளாக அங்கீகரித்துவிட்டார்.

அண்ணாமலை
இதை கவனிக்க வேண்டும். ஆனால் அதே சமயம் அதிமுகவில் எந்த அதிமுகவை ஆதரிக்கிறோம் என்பதையும் அவர் சொல்லவில்லை. அதிமுக பெரிய கட்சி என்று அவர் சொல்வதை பார்த்தால், அவர் எடப்பாடி கீழ் இருக்கும் எம்எல்ஏக்கள் அடிப்படையில் அந்த தரப்பைதான் சுட்டிக்காட்டுகிறார் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இப்போது எடப்பாடி ஒரு வேட்பாளரை களமிறக்கிறார் என்றால் அவரை தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரிக்கும், அதிமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் ஆதரிக்கும். அப்படி என்றால் பாஜகவும் எடப்பாடி தரப்பை ஆதரிக்கும்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ் மட்டுமே எடப்பாடி தரப்பு வேட்பாளரை எதிர்க்க வாய்ப்பு உள்ளது. இதனால் வாக்கு வங்கி பிரியும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு என்ன வாக்கு வங்கி உள்ளது. அவருக்கு அரசியல் செல்வாக்கு, மக்கள் ஆதரவு எவ்வளவு இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களே பெரிதாக வெற்றிபெறவில்லை. இந்த விவகாரத்தில் பாஜக ஸ்மார்ட்டாக இருக்கிறது. டெல்லியில் ஓபிஎஸ்ஸை பாஜக கொஞ்சம் ஆதரிக்கிறது. இங்கே தமிழ்நாட்டில் எடப்பாடியை பாஜகவினர் சிலர் ஆதரிக்கிறார்கள். யார் வழக்கில் வெற்றிபெறுகிறார்களோ அவர்களுடன் நெருக்கம் காட்ட பாஜக விரும்புகிறது.

எடப்பாடி
ஜெயிக்கிற குதிரையில் பந்தயம் கட்ட முடிவு செய்துள்ளனர். இந்த தேர்தலில் யார் போட்டியிடுவார் என்று தெரியவில்லை. எடப்பாடி தரப்பில் கேபி ராமலிங்கம் போட்டியிடுவார் என்று பேச்சு அடிபடுகிறது. அனைத்து தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொங்கு தலைவர்தான் எடப்பாடி மூலம் களமிறக்கப்படுவார். இந்த களத்தை முடிந்த அளவு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி உறுதியாக இருக்கிறார். இதனால் விமர்சனம் இல்லாத, நல்ல பெயர் இருக்க கூடிய, பிரபலமான, களநிலவரத்தை புரிந்து கொண்டு, தொகுதியை நன்கு அறிந்தவராக, சமுதாயத்தை அறிந்தவராக, சமுதாய ரீதியாக பிரபலமாக இருக்க கூடிய நபரை எடப்பாடி பரிசீலனை செய்ய வாய்ப்பு உள்ளது.

தென் மண்டலம்
இந்த தேர்தல் தென் மண்டலத்தில் நடந்து இருந்தால் கூட அது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருந்திருக்கும் என்று சொல்ல முடியாது. சமீபத்தில் கூட தேனியில் கூட்டம் நடத்தினார். அதனால் கொங்கு மண்டலத்தில் மட்டும் எடப்பாடி பலமாக இருக்கிறார் என்று சொல்ல முடியாது. தென் மண்டலத்திலும் இடைத்தேர்தல் வந்து இருந்தால் எடப்பாடி இப்படித்தான் செயல்பட்டு இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று மூத்த பத்திரிகையாளர் பா. கி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications