அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியத்திற்கே 95% செலவு செய்யும் ஆந்திரா.. தமிழ்நாடு, கர்நாடகா நிலை என்ன
ஹைதராபாத்: எல்லாருமே தமிழ்நாடு அரசை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அரசின் வருமானத்தில் பெரும் பகுதி வெறும் 10 லட்சம் பேர் மட்டுமே உள்ள அரசு ஊழியர்களின சம்பளத்திற்கே போகிறது என்பது தான். அப்படி போன பின்னர் மீதமுள்ள பணத்தில் தான் வளர்ச்சி திட்ட பணிகளை 8 கோடி மக்களுக்கும் செய்ய வேண்டும் என்பது நிச்சயம் பெரும் சுமை தான். தமிழ்நாட்டில் இப்படி என்றால், ஆந்திரா அரசாங்கம் அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் பென்ஷன் கொடுக்க மட்டுமே கடந்த நிதியாண்டில் 1,05,039 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இது அந்த மாநிலத்தின் சொந்த வருவாயில் 95 சதவீதம். நம் மாநிலம் வெறும் 49 சதவீதம் தான்.. கர்நாடகா 33 சதவீதம் மட்டுமே. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
பொதுவாக நம்முடைய சம்பளம் ஒரு லட்சம் என்று வைத்து கொள்வோம்.. அதில் 95 ஆயிரம் கடனுக்கே போய்விடுகிறது அல்லது வீட்டில் உள்ள ஒரு சிலருக்கே போகிறது... மற்றவர்களுக்கு 5 ஆயிரத்தை வைத்து தான் செலவு செய்ய வேண்டும் என்பது எவ்வளவு தவறு.. அது ஒரு மாநிலத்திற்கே நடந்தால் எப்படி இருக்கும். மாநில அரசு தனது சொந்த வருவாயில் 95 சதவீதத்தை அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு மட்டுமே செலவழிக்கிறது என்றால், பொருளாதார ரீதியாக மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அர்த்தம். அப்படியான ஒரு நிலையில் தான் ஆந்திரா அரசு உள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசாங்கம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் கொடுக்க மட்டுமே கடந்த நிதியாண்டில் 1,05,039 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இது அந்த மாநிலத்தின் சொந்த வருவாயில் 95 சதவீதம் ஆகும். அதாவது ஆந்திர அரசு ஒவ்வொரு 100 ரூபாயிலும் 95 ரூபாய் அங்க வேலை செய்யும் 10-12 லட்சம் ஊழியர்களுக்கும், 3.59 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் மட்டுமே தந்துள்ளது.
மீதமுள்ள வெறும் 5 ரூபாயை மட்டுமே வைத்து பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டுவது, சாலை அமைப்பது, மானிய திட்டங்களை செயல்படுத்துவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது என்பது சாத்தியமா என்பது யோசியுங்கள்.. நிச்சயம் வாய்ப்பு குறைவு.. அப்புறம் எப்படி ஆந்திரா சமாளிக்கிறது. வெளியில் கடன் வாங்குகிறது. மத்திய அரசு தரும் நிதியை வைத்து சமாளிக்கிறது. ஆந்திராவின் இந்த நிலைக்கு காரணம், மாநில பிரிவினையின் போது, ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்திற்கு போனது.. அதனால் ஆந்திராவிற்கு வருமானம் பெரிய அளவில் சரிந்தது. ஆந்திரா, தெலுங்கானா இரண்டுமே சேர்ந்து, அதாவது ஒருங்கிணைந்த ஆந்திராவில் வளர்ச்சி என்பது ஹைதராபாத் மற்றும் அதனை சுற்றி மட்டுமே நடந்தததால், மற்ற பகுதிகளில் வளர்ச்சி பரவலாகவில்லை. இதுதான் ஆந்திரா இன்று கஷ்டப்படுவதற்கு காரணம். அதனால் தான் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஆந்திர அரசுக்கு உள்ளே ஒரே வழி, உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து ஏற்றுமதி மையமாக மாற்றுவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். வருமானம் உயர்த்தால் மக்களின் வாழ்க்கை தரமும், அரசுக்கு வருமானமும் உயரும், கடனும் படிப்படியாக குறையும். அதனை தான் சந்திரபாபு நாயுடு செய்ய முற்படுகிறார் .
எனினும் பணம் இல்லாததால் ரிடையர்மென்ட் வயதை 58-ல் இருந்து 62 ஆக உயர்த்தி உள்ளார். செட்டில்மென்ட் செய்ய பணம் இல்லை என்பதால் ஊழியர்களை வேலையிலேயே வைத்திருக்கும் நிலை உள்ளது. சரி நம்ம ஊர் பக்கம் வருவோம். அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு தமிழ்நாடு 49 சதவீதம் செலவு செய்கிறது, கர்நாடகா 33 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் செலவு செய்கிறது. தமிழ்நாடும் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அவர்களை ரியர்ட் ஆக செய்கிறது. இங்குமே ஓய்வூதியம் தருவதற்கு நிதி சிக்கல் இருப்பது உண்மை தான். ஆனால் ஆந்திரா அளவிற்கு இல்லை.. தமிழ்நாடு ஆந்திரா போல் கடினமான நிலையில் இல்லை..
அதேநேரம் கர்நாடகா போலவும் இல்லை.. கர்நாடகாவே தென்னிந்தியாவில் வலுவான நிலையில் உள்ளது (அரசு ஊழியர்களுக்கு மொத்த பட்ஜெட்டில் 33 சதவீதமே செலவு செய்கிறது). பெங்களூரின் ஐடி பொருளாதாரம் மற்றும் தொழில் துறைகள் அந்த மாநிலத்தையே காக்கிறது. அதேநேரம் ஆந்திரா, தெலுங்கானா ஹைதராபாத்தை நம்பியிருப்பது போல், கர்நாடகா பெங்களூரை மட்டும் நம்பி இருப்பது போல், தமிழ்நாடு சென்னையை மட்டும் நம்பியிருக்கவில்லை. சென்னையின் பங்கு சற்றே அதிகம். தமிழ்நாட்டில் இருப்பது பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்பதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து அரசுக்கு கணிசமான வருவாய் வருகிறது. தமிழ்நாடு இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
