மோடியிடம் மோதும் கேசிஆர்.. சுத்துப்போட்ட சிபிஐ.. மகள் கவிதாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை.. ஏன்?
ஹைதராபாத்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில்தான் டெல்லி மதுபான ஊழல் கொள்கையில் ரூ.100 கோடி கைமாறியது தொடர்பாக அவரது மகள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணையை துவங்கிஉள்ளனர்.
டெல்லியில் ஆம்ஆத்மி அரசு நடக்கிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ளார். துணை முதலமைச்சராக மணிஷ் சிசோடியா உள்ளார்.
இந்நிலையில் தான் டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது பாஜக, ஆம்ஆத்மி இடையே பெரும் வார்த்தை போரை ஏற்படுத்தியது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல்
இதுதொடர்பாக சிபிஐ அதிகாரிகள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா உள்பட பலரது வீடுகளில் சோதனை செய்தனர். டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் எதுவும் ஏற்படவில்லை. உள்நோக்கத்துடன் சிபிஐ சோதனை நடத்துவதாக ஆம்ஆத்மி கட்சியின் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்கு நெருக்கமானவர்களாக கூறப்படும் விஜய் நாயர், 9 தொழிலதிபர்கள், 2 மதுபான ஆலை மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது நடவடிக்கை
மேலும் விஜய் நாயர் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து விசாரணை சூடுபிடிக்க துவங்கியது. இந்த விஷயத்தில் சட்டவிரோதமாக கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கா ரூபாய் கைமாறியிருப்பதாக கூறப்பட்டது. இதனால் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக அமித் அரோரா என்பவர் கைது செய்யப்பட்டது.

ரூ.100 கோடி கைமாறியதா?
கைதானவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. அதாவது டெல்லி புதிய மதுபான கொள்கையில் ‛‛சவுத் குரூப்'' என்ற தொழிலதிபர்களுடன் இணைந்து ஆம்ஆத்மி தலைவர்கள் லாபம் சம்பாதிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இந்த குழு சார்பில் ரூ.100 கோடி வரை ஆம்ஆத்மி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சந்திரசேகரராவ் மகள்
அதோடு இந்த குழுவை கட்டுப்படுத்தும் நபர்களில் கவிதா என்ற பெயர் இருந்ததும், அவர் தெலங்கான முதலமைச்சர் சந்திர சேகரராவின் மகள் என்பதும் தெரியவந்தது. இதனால் டெல்லி மதுபான ஊழலில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டினார். தெலங்கானாவில் தற்போது சந்திரசேகரராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடக்கும் நிலையில் கவிதா எம்எல்சியாக உள்ள நிலையில் வழக்கில் அவரும் இணைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ அனுப்பிய சம்மன்
அதன்படி டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனக்கூறி கவிதாவுக்கு கடந்த மாதம் 6ம் தேதி சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை தொடர்ந்து விசாரணையை கொஞ்சம் தள்ளி வைக்க வேண்டும் எனவும், டிசம்பர் 11 முதல் டிசம்பர் 15ம் தேதிக்குள் விசாரணைக்கு தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், விசாரணையை ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வைத்து கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

சிபிஐ விசாரணை
அதன்படி இன்று காலையில் சிபிஐ அதிகாரிகள் ஹைதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு சென்றனர். மொத்தம் 6 சிபிஐ அதிகாரிகள் கவிதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிபிஐ விசாரணையை தொடர்ந்து கவிதாவின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு வீட்டை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில், ‛‛கவிதா விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்'' என கூறப்பட்டுள்ளது.

மோதலுக்கு நடுவே விசாரணை
தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ், பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் முனைப்பில் சந்திரசேகரராவ் பாரத் ராஷ்ட்ரிய சமிதி எனும் தேசிய கட்சியை துவங்கியுள்ளார். இந்தியா முழுவதும் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சி தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்க அவர் முடிவு செய்து வருகிறார். இந்நிலையில் தான் டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அவரது மகள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications