2 தமிழர்கள் உட்பட.. 19 பேரை பலி வாங்கிய கர்னூல் பேருந்து தீ விபத்து! காரணம் இதுதான்!
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இருந்து, பெங்களூருக்கு சென்ற வால்வோ சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த விபத்தில் 2 தமிழர்கள் உட்பட, 19 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது.
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு சென்ற இந்த பேருந்தில் மொத்தம் 45 பேர் பயணித்தனர். பேருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக்குடன் மோதியது. இதனால் பேருந்து உடனே தீ பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 19 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 26 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானவை சேர்ந்தவர்கள் தலா 6 பேர் என்றும், தமிழகம், கர்நாடகாவை சேர்ந்தவர்கள் தலா 2 பேர் என்றும், பீகார், ஒடிசாவை சேர்ந்தவர்கள் தலா ஒருவர் என மொத்தம் 19 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில் தீ விபத்து ஏற்பட்டு 10-15 நிமிடங்களில் பேருந்து முழுமையாக எரிந்து சாம்பலாகி இருக்கிறது என்பதும், தீ விபத்தை அதிகரிக்க பேருந்தில் இருந்த செல்போன் பேட்டரிகளும் காரணம் எனவும் தெரிய வந்திருக்கிறது.
அதாவது பேருந்தில் லித்தியம்-அயன் பேட்டரிகளைக் கொண்ட சுமார் 400 மொபைல் போன்கள் அடங்கிய சரக்கு இருந்திருக்கிறது. பெங்களூரில் உள்ள ஒரு இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு இந்த மொபைல்கள் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. பேருந்து தீ பிடித்தபோது இந்த பேட்டரிகளும் வெடித்து தீ பிடித்துள்ளன. இதனால் தீ வேகமாக பரவி, பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
பேருந்துகளில் ஏற்படும் தீ விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு பொதுவான சில காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் அவசரகால வெளியேறும் வழிகள் செயல்படாமல் இருப்பதும், அங்கீகரிக்கப்படாத மின் மாற்றங்களும் இத்தகைய விபத்துக்களுக்கு காரணமாகின்றன. சொகுசு அம்சங்களை சேர்க்கும் நோக்கில் பேருந்தின் வயரிங் சிஸ்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்கள், வாகனத்தின் அசல் மின் அமைப்பை அடிக்கடி ஓவர்லோடு செய்கின்றன. இதுவும் விபத்துக்கான காரணமாகும். இது எல்லாமும் வால்வோ பேருந்தில் நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
பைக் மீது பேருந்து மோதியவுடன், பேருந்துக்கு அடியில் பைக் சிக்கிக்கொண்டது. பைக்கின் பெட்ரோல் டேங்க் முதலில் தீ பிடித்திருக்கிறது. இதனையடுத்து, தீ பரவியிருக்கிறது. எதிர்பார்த்ததை விட தீ வேகமாக பரவியதே, பயணிகள் வெளியேறாமல் சிக்கிக்கொள்ள காரணமாக அமைந்துவிட்டது என்றும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. லித்தியம்-அயன் பேட்டரிகள் தீப்பற்றினால் அதன் பாதிப்பு தீவிரமாக இருக்கும். எளிதில் இந்த தீயை அணைக்க முடியாது. சாதாரண தண்ணீரை கொண்டும் இந்த தீயை அணைக்க முடியாது. இதற்கென பிரத்யேக ரசாயன கலவை தேவைப்படுகிறது.
மட்டுமல்லாது இது எரியும்போது அதிக அளவில் வெப்பத்தை வெளியேற்றுகிறது. சாதாரணமாக மற்ற பொருட்கள் எரிவதை காட்டிலும் இது அதிக வெப்பத்தை வெளியிடும். மட்டுமல்லாது ஹைட்ரஜன் ஃப்ளோரைடு எனும் நச்சு வாயுவையும் வெளியேற்றும். இந்த வாயுவுக்கு நிறமோ, மனமோ கிடையாது. ஆனால் சுவாசிக்கும்போது மூச்சுத்திணறலை ஏற்படுத்தி சுவாசிப்பதை நிறுத்திவிடும். இதுவே உயிரிழப்பை ஏற்படுத்த போதுமானதாகும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எனவே பேருந்துகளில் இதுபோன்ற பேட்டரிகளை எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், இதற்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் எனவும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications