கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகன்.. கட்டி வைத்து முகத்தில் மிளகாய் பொடி தேய்த்து தாய் வினோத தண்டனை
ஹைதராபாத்: 15 வயது மகன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் கொதித்து போன தாய், சிறுவனை கம்பத்தில் கட்டி வைத்து மிளகாய் தூளை முகத்தில் தேய்த்து விட்டு வித்தியாசமான தண்டனையை கொடுத்தார்.
தெலுங்கானா மாநில அரசுக்கு போதை பொருளை ஒழிப்பது என்பது முக்கிய சவாலாக உள்ளது. போதை பொருள் கடத்தலையும் போதை பொருள் உட்கொள்பவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் கேட்டுக் கொண்டார்.
அண்மையில் பிடெக் படித்து வந்த மாணவர் ஒருவர் அளவுக்கு அதிகமாக போதை பொருளை உட்கொண்டதால் உயிரிழந்தார். அது போல் இந்த வாரம் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் போதை பார்ட்டி நடைபெற்றது.

போதை பார்ட்டி
இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட 150 க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதில் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் நிஹாரிகாவும் இருந்தார். போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் ராகுல், ஐபிஎஸ் அதிகாரிகளின் மகன்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

போதை பழக்கம்
இந்த போதை பழக்கம் இளைஞர்கள், மாணவர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையை கடுமையாக பாதித்து வருகிறது. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இந்த நிலையில் போதைக்கு அடிமையான 15 வயது சிறுவன் ஒருவருக்கு அவரது தாய் வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளது வைரலாகி வருகிறது.

தெலுங்கானாவில் சிறுவனுக்கு போதை பழக்கம்
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ராம்னா. இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு 15 வயதில் மகன் உள்ளார். கடந்த ஓராண்டாக கஞ்சா குடித்து வருகிறார். இவரது தாய் எத்தனையோ முறை அறிவுறுத்தியும் இவர் கேட்ட பாடில்லை. கஞ்சாவை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் சிறுவனின் நிலை நாளுக்கு நாள் மோசமானது.

மகனின் செயல்கள்
ஒரு கட்டத்தில் போதையால் மகனின் செயல்களை சகித்து கொள்ள முடியாத ராம்னா, இனி சிறுவனுக்கு அட்வைஸ் கொடுப்பதை விட்டுவிட்டு தண்டனை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்படி சிறுவனை தெருவில் உள்ள ஒரு போஸ்ட் கம்பத்தில் கட்டி வைத்தார். நன்றாக அடித்து உதைத்தார்.

மிளகாய்த் தூள் தண்டனை
பின்னர் வீட்டுக்குள் சென்ற ராம்னா மிளகாய்த் தூளை கொண்டு வந்தார். இதை பார்த்து அரண்ட சிறுவன் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சினார். இதையடுத்து அந்த மிளகாய்த் தூளை சிறுவனின் முகத்தில் தேய்த்து விட்டார். கண்கள் எரிகின்றன என சிறுவன் கெஞ்சியும் கட்டை அவிழ்த்துவிடவில்லை. இனிமேல் கஞ்சா பக்கம் போக மாட்டேன் என சத்தியம் செய்த பிறகுதான் சிறுவன் கம்பத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications