This is South India Story.. கர்நாடகா பாஜக படுதோல்விக்கு தெலுங்கானா அமைச்சரின் நச் பதில்
ஹைதராபாத்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவின் படுதோல்வியை This is South India Story என குறிப்பிட்டுள்ளார் பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும் தெலுங்கானா அமைச்சருமான ஹரீஷ் ராவ்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது காங்கிரஸ். தென்னிந்தியாவில் ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் கர்நாடகா என்பதை இழந்துவிட்டது பாஜக.

கர்நாடக பாஜகவின் தோல்வியை தென்னிந்திய மாநில எதிர்க்கட்சிகள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கூறுகையில், கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். கர்நாடக மக்கள் வாக்களித்தபோது, நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்குத் தக்க பாடம் புகட்டி அவர்கள் தங்கள் கன்னடிகப் பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம் என கூறியிருந்தார். இதேபோல தென்னிந்திய மாநில பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
கர்நாடகா பாஜக தோல்வி குறித்து தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் கூறியதாவது: This is the South India Story. பாஜகவின் பிடியில் இருந்து தென்னிந்தியா விடுபட்டுவிட்டது. பாஜகவின் வீழ்ச்சி தென்னிந்தியாவில் இருந்து தொடங்கிவிட்டது. தெலுங்கானாவில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் சொல்வதைப் போல கர்நாடகா தேர்தல் முடிவுகள் தெலுங்கானாவில் எதிரொலிக்கப் போவது இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications