சத்தீஸ்கரில் கடும் துப்பாக்கி சண்டை.. 30 மாவோயிஸ்ட்டுகளை சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை.. பரபரப்பு
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர்.
சத்தீஸ்கரில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக விஷ்ணு தேவ் சாய் உள்ளார். இந்த மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் என்பது இருந்து வருகிறது. மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாட்டை தடுக்க மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இன்னும் சில ஆண்டுகளில் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் இல்லாத நிலை உருவாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளார். மேலும் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று 30 மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபுரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது பாஸ்டார் பிராந்தியத்தில் அபுஜ்மாத் என்ற வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டு நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் அம்மாநில போலீசார், பாதுகாப்பு படையினர் மதியம் 1 மணிக்கு ஈடுபட்டனர்.
இந்த வனப்பகுதி என்பது நாராயணபுர் - தாண்டிவாடா மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது. இந்த கண்காணிப்பு பணியின்போது பாதுகாப்பு படையினரை பார்த்த மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர்.இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்டுகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 30 மாவோயிஸ்ட்டுகள் இறந்தனர். அதன்பிறகு அவர்களிடம் இருந்து ஏகே - 47 ரக துப்பாக்கி உள்பட பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிபிஐ (மாவோயிஸ்ட்) ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஒரே நேரத்தில் 30 மாவோயிஸ்ட்டுகளை பாதுகாப்பு படையினர் வேட்டையாடியிருப்பது பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 16ம் தேதி கன்கேர் மாவட்டத்தில் 29 மாவோயிஸ்ட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். அதன்பிறகு இன்று 30 பேர் வரை சுட்டு கொல்லப்ட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் பாஸ்டர் பிராந்தியத்தில் மொத்தம் 194 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று துப்பாக்கிச்சண்டை நடந்த அபுஜ்மாத் வனப்பகுதி என்பது ஒரு அடர் காடாகும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் அபுஜ்மாத் வனப்பகுதி என்பது சத்தீஸ்கரில் இருந்து மகாராஷ்டிரா வரை சுமார் 6 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. அடர் வனப்பகுதி என்பதால் இங்கு பதுங்கி மாவோயிஸ்ட்டுகள் நாச வேலைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications