எங்களுக்கு பெரிய வீடு வேண்டும் – குடைச்சல் தரும் "ஆம் ஆத்மி" எம்.பிக்கள்!
டெல்லி: சாமானிய மக்களின் கட்சி, சாமானிய மக்களுக்கான கட்சி என்று கூறி நாட்டில் பெரும் அலையை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சி சார்பில் லோக்சபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பிக்கள் இப்போது கேட்டு வருவது முரண்பட்ட காட்சியாக மாறியுள்ளது.
தங்களுக்கு அரசு ஒதுக்கும் வீடுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
லோக்சபாவில் நேற்று பேசிய ஆம்ஆத்மி எம்.பிக்கள் 3 பேர் தங்களுக்கு இப்போது அரசு அளித்துள்ள வீடு வசதியாகவும், போதுமானதாகவும் இல்லை எனவும், அதனால் தங்களுக்கு இதை விட நல்லதாகவும், பெரியதாகவும் உள்ள வீட்டை ஒதுக்கித்தர வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
ஆம் ஆத்மியின் ஒரு எம்.பியான சாது சிங் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வீட்டை ஒரு ஸ்டோர் ரூம் என்று வர்ணித்துள்ளார். "அது வீடல்ல... ஒரு சிறிய ஸ்டோர் ரூம். 3 தடவை நான் வீட்டுவாரியத்துறைக்கு எழுதியும் அதற்கு சரியான பதிலில்லை" என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முதல்வராக இருந்தபோது அவருக்கு அரசு பெரிய பங்களாவைக் கொடுத்திருந்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகும் கூட அவர் அதைக் காலி செய்யாமல் இருந்து வந்தார். தனது மகள் அரசுத் தேர்வை எழுதுவதால் அதுவரை தன்னை இங்கே தங்கியிருக்க அனுமதி கோரியிருந்தார்.
சமீபத்தில்தான் அவர் தனது வீட்டைக் காலி செய்து தனது பழைய வீட்டுக்குக் கிளம்பிப் போனார். இந்த நிலையில், அவரது அக்கட்சி எம்.பிக்கள் தங்களுக்கு பெரிய வீடு வேண்டும் என்ற கேட்டுள்ளது மத்தியில் புதிய சிக்கலை தோற்றுவித்துள்ளது.
ஓட்டுப் போட்ட மக்கள் சிறிய குடிசைகளிலும், பிளாட்பார்ம்களிலும் கஷ்டப்படும் நிலையில் மக்கள் பிரதிநிதிகளான இவர்களின் இந்த கோரிக்கைகளைக் கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.