For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக அதிமுக 'போர்'.. ஸ்தம்பித்தது நாடாளுமன்றம்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற இரு சபைகளையும் நடத்தவிடாமல் அதிமுக எம்.பி.க்கள் இன்று முடக்கினர்.

வெளிநாடு வாழ் தொழிலதிபரான சிவசங்கரனின் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க 2004-ம் ஆண்டு முதல் 2007 வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்தார் என்பது புகார். இது தொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நீதிபதி ஓபி ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இதில் அன்னிய செலாவணி மோசடியும் நடந்துள்ளதாக அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளன.

இந்த ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் காரணமாக, கார்த்தி சிதம்பரம் நடத்திய 'அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங்' என்ற நிறுவனத்திற்கு, பங்குகள் அடிப்படையில் நிறைய லாபம் கிடைத்துள்ளது என்பது மற்றொரு புகார். அதாவது ஏர்செல்- மேக்சிஸ் இடையேயான சுமார் ரூ.4000 கோடி வர்த்தகத்திற்கு அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அனுமதி கொடுத்துள்ளார். இந்த அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பாக, ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஏர்செல்லின் குறிப்பிட்ட அளவு பங்குகள் மாற்றப்பட்டது என்பதும் குற்றச்சாட்டு.

ADMK MPs distrub Parliament against P Chidambaram on Aircel Maxis case

இதனால் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்கு சிதம்பரம் அனுமதி கொடுத்த போது கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களும் ஆதாயமடைந்தன; இதற்கு ப.சிதம்பரம் உதவினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. அத்துடன் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனங்கள்; நண்பர்கள் நிறுவனங்களில் சோதனை நடத்தியது.

இதனிடையே ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மூலம் கிடைத்த ஆதாய பணத்தை 14 நாடுகளில் கார்த்தி சிதம்பரம் முதலீடு செய்துள்ளதாகவும் சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனம் மூலம் இம்முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்துக்குப் பின்னரே இம்முதலீடுகள் செய்யப்பட்டதாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் இன்று எழுப்பினர். ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து இரு சபைகளிலும் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கோரி அவர்கள் நோட்டீஸ் கொடுத்தனர்.

பின்னர் காலையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா சபை கூடியதும் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக் கோரி அதிமுக எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன், அதிமுக எம்பிக்கள் முழக்கங்களை கைவிட்டால் அவர்களது கோரிக்கை குறித்து விவாதிக்கலாம் என்றார். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும், அதிமுகவினர் அமைதியாக இருந்தால் ப.சிதம்பரத்துக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதிக்க அரசு தயார் என்றார். ஆனாலும் அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

ADMK MPs distrub Parliament against P Chidambaram on Aircel Maxis case

ராஜ்யசபா துணைத் தலைவர் குரியனோ, அதிமுகவினர் தங்களது கோரிக்கையை மத்திய அரசிடம்தான் சொல்ல வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். ஆனால் அதிமுகவினரின் அமளி தொடர்ந்தது. அதிமுகவினரின் இந்த அமளியால் நாடாளுமன்ற இரு சபைகளும் பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன.

மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு- முடக்கம்

இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சபை தொடங்கிய போது ஸ்மிருதி இரானி மீதான உரிமை மீறல் பிரச்சனை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டனர். அதிமுக எம்பிக்களும் ப.சிதம்பரம் குறித்து விவாதிக்க கோரி முழக்கமிட்டனர்.

இந்த அமளிகளுக்கு இடையே சபை நடவடிக்கைகளை சில நிமிடங்கள் நடத்தினார் சுமித்ரா மகாஜன். இதனைத் தொடர்ந்து அதிமுக எம்பி வேணுகோபாலிடம் உங்கள் கருத்தை தெரிவியுங்கள் என சபாநாயகர் கூறினார். ஆனால் வேணுகோபாலால் பேச முடியாத அளவுக்கு ஸ்மிருதி இரானி விவகாரத்தை எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பினர்.

இதனால் லோக்சபா நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார். இதேபோல் ராஜ்யசபாவிலும் அதிமுகவினர் அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

பிற்பகல் 2 மணிக்கு ராஜ்யசபா கூடிய போதும் அதிமுக எம்பிக்கள் அமளியில் தொடர்ந்தும் ஈடுபட சபை நடவடிக்கைகள் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. லோக்சபாவில் ஸ்மிருதி இரானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பிய போதும் சபை நடவடிக்கைகள் தொடர்ந்தன.

பின்னர் லோக்சபா நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. ராஜ்யசபாவும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அதிமுகவினர் அமளியால் இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாகவே முடங்கியது.

சிதம்பரத்துக்கு இத்தனை பெயர்களா?

அதிமுகவினர் தங்களது முழக்கங்களில் "அரெஸ்ட் சிதம்பரம்" "ஏர்செல் சிதம்பரம்" "யுபிஏ சிதம்பரம்" என பல பெயர்களில் சிதம்பரத்தை விமர்சித்தனர்.

சிதம்பரம் பதிலளிக்க மறுப்பு

இதனிடையே இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று செய்தியாளர்கள் கேள்விக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

English summary
ADMK MPs raising slogans in Parliament to demanding action against P Chidambaram and Karti Chidambaram in Aircel-Maxis case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X