பஹல்காம் தாக்குதல்.. யாரையும் சும்மா விட மாட்டோம்! அனைவரும் வேட்டையாடப்படுவார்கள்! அமித் ஷா சூளுரை
திஸ்பூர்: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா முதல்முறையாகப் பொதுவெளியில் பேசியுள்ளார். பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்ற அவர், பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் மிக மோசமான தாக்குதல் நடந்தது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமித் ஷா
இதற்கிடையே பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு இந்தியா சரியான மற்றும் துல்லியமான பதிலடி கொடுக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அமைச்சர் அமித் ஷா பொதுவெளியில் பேசுவது இதுவே முதல்முறையாகும்.
அசாம் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, "இந்தக் கோழைத்தனமான தாக்குதல் அவர்களின் வெற்றி என்று யாராவது நினைத்தால்.. இது நரேந்திர மோடியின் இந்தியா என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.. இதற்குக் காரணமான அனைவரும் ஒவ்வொருவராகத் தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொருவரையும் நிச்சயம் தேடிப் பிடித்து வேட்டையாடுவோம். நாட்டில் எந்தவொரு மூலையில் இருந்தாலும் பயங்கரவாதத்தை வேரோடு அகற்ற வேண்டும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுவே எங்களின் உறுதிப்பாடு.
உலக நாடுகள் துணையாக நிற்கிறது
எந்தவொரு பகுதியில் இருந்தாலும் பயங்கரவாதத்தை முழுமையாக அகற்றுவோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்குச் சர்வதேச அளவில் ஆதரவு இருக்கிறது.. இந்தப் போராட்டத்தில் 140 கோடி இந்தியர்களுடன் ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உலக நாடுகள் இந்திய மக்களுடன் நிற்கிறது.
இது முடிவல்ல
பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை, நமது போராட்டம் தொடரும்.. பயங்கரவாத செயல்களைச் செய்தோருக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்பதை நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன். தீவிரவாதத்தை எந்தவொரு வடிவிலும் இந்தியா ஏற்றுக் கொள்ளாது.. இன்று அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது மக்களைக் கொன்று அதன் மூலம் போரில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கக்கூடாது. பயங்கரவாதத்தைப் பரப்பும் அனைவருக்கும் நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.. இது போரின் முடிவு அல்ல; ஒவ்வொரு நபருக்கும் தகுந்த பதில் வழங்கப்படும்" என்றார்.
காஷ்மீர் தாக்குதல்
கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தினர். அந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் குறித்த தகவல் கிடைத்தவுடன் அமித் ஷா சம்பவ இடத்திற்கு விரைந்தார். மறுநாளே தாக்குதல் நடந்த பஹல்காம் பகுதிக்கும் சென்றார். அங்குப் படுகாயமடைந்தவர்களை நேரில் சந்தித்தார். அதன் பிறகு தொடர்ச்சியாகப் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களையும் அமித் ஷா நடத்தியிருந்தார்.
காஷ்மீர் தாக்குதலைப் பொறுத்தவரை அதில் 3 முதல் 5 தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சம்பவத்தை நேரில் பார்த்தோர் அளித்த தகவல்களை அடிப்படையாக வைத்து வரைபடம் மற்றும் போட்டோ தயாரிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications