கணவனுக்கு ஆண்மைக்குறைவு.. விமான நிலையத்தில் 8 நாட்கள் தங்கிய பெங்களூர் பெண் மீட்பு!
பெங்களூர்: கணவருக்கு, ஆண்மை குறைவு இருப்பதாக குறைசொல்லி வீட்டை விட்டு வெளியேறிய பட்டதாரி பெண், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வருபவர், கம்ப்யூட்டர் இன்ஜினியரான கவுதம். இவருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த நம்ரதா (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

நம்ரதா பி.டெக் பட்டதாரி ஆவார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நம்ரதா சமீபத்தில் தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்த நிலையில், கடந்த 19ம் தேதி காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நம்ரதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம், நம்ரதாவின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது செல்போன் ‘சுவிட்ஸ் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.
பயந்துபோன கவுதம், தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஹெச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்ரதாவை தேடிவந்தனர்.
இந்த நிலையில், கடந்த 8 நாட்களாக பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் ஒரு இளம்பெண் வாழ்ந்து வருவதாக தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் கடந்த 26ம் தேதி விமான நிலையத்திற்கு சென்று அந்த இளம்பெண்ணை மீட்டு பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்திற்கு அழைத்து சென்றனர்.
உதவி மையத்தில் உள்ள ஆலோசகர் சரஸ்வதி, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போதுதான் அவர் மாயமான நம்ரதா என்பது தெரியவந்தது. நம்ரதாவிடம் விசாரணை நடத்தியபோது, வீட்டை விட்டு வெளியேறியதற்கான காரணத்தை ஒரு தாளில் எழுதி காண்பித்தார். அதில் எழுதப்பட்டு இருப்பதை பார்த்து ஆலோசகர் அதிர்ச்சி அடைந்தார்.
‘எனது கணவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது. இதனால்தான் நான் அவருடன் வாழ பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினேன்' என எழுதப்பட்டு இருந்தது.
இதுகுறித்து உதவி மையத்தினர் கவுதம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. நம்ரதா கடந்த 8 நாட்களாக உணவில்லாமல் பான் மசாலாவை உணவாக சாப்பிட்டு வாழ்ந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது மனநிலை சரியில்லாதது போல தெரிவதால் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.












Click it and Unblock the Notifications