பாக். மீது இந்தியா தாக்குதல்?.. வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும்.. Ex ராணுவ தலைவர்
ஜம்மு காஷ்மீர்: பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் என்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என்று வங்கதேச ராணுவத்தின் முன்னாள் தலைவர் ஃபஸ்லுர் ரஹ்மான் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு நடத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராணுவம், கப்பற்படை, விமானப் படையினர் தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அரபிக்கடலில் போர் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. விமானப் படை விமானங்களும் அவசர கால பயிற்சியைத் தொடங்கியுள்ளன. பயங்கரவாத சம்பவம் காரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் சூழல் உள்ளதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்தியாவுக்கு உலக நாடுகள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத் துறை மற்றும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பிருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது. உளவுத் துறை மற்றும் ராணுவத்தின் அறிவுரைப்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலையடுத்து, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவர் ஃபஸ்லுர் ரஹ்மான் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என்று முகமது யூனுஸுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் அந்நாட்டின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது, பிரதமர் பதவியில் இருந்த ஷேக் ஹசீனா போராட்டம் வெடித்ததால், அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் கடந்த மார்ச் மாதத்தில் சீனாவுக்குச் சென்றிருந்த நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் நிலத்தால் சூழப்பட்ட பகுதி என்றும், அவை கடல் பகுதியை அடைய முடியாது, கடல் பகுதிக்கு பாதுகாப்பாக வங்கதேசமே உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
தற்போது, பஹல்காம் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும்பட்சத்தில், இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என்று ராணுவ முன்னாள் தலைவரான ஃபஸ்லூர் ரஹ்மான் முகமது யூனுஸுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்துக்கு ராணுவ ஒத்துழைப்பு பெறும் வகையில் சீனாவிடம் உதவி கேட்க வேண்டும் என்றும், சீனாவுடன் கூட்டு ராணுவ அமைப்பு குறித்து விவாதிக்கத் தொடங்க வேண்டும் என்றும் அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications