For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்யாணத்திற்கு ரூ.2.50 லட்சம் சொன்னீங்களே, அப்போ காது குத்துக்கு எவ்வளவு?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: திருமண வீடுக்காரர்கள் வங்கியிலிருந்து ரூ.2.50 லட்சம் வரை எடுத்துக்கொள்ள பெரிய மனது செய்து அனுமதி கொடுத்துவிட்டது மத்திய அரசு.

ஒருபக்கம், ரெட்டிகள் ரூ.500 கோடியில் திருமணம் நடத்திக்கொள்ளும் நாட்டில், எஞ்சியவர்களுக்கு அனுமதித்துள்ளதோ ரூ.2.50 லட்சம்தான். இதற்குள் கல்யாணத்தை முடித்துவிட்டு கரையேறிவிட வேண்டியதுதான். பந்தியில் பாயசம் பத்தவில்லை என சண்டை போடுவோர் இதை அறிந்து இனியாவது அனுசரணை செய்துகொள்ளுங்கள்.

Banks can permit to withdrawal money for these reasons too

கல்யாணத்திற்கு வரம்பு நிச்சயித்த அரசுக்கு காது குத்து விழா நடத்துவோர் என்ன துரோகம் செய்தனரோ தெரியவில்லை. கையோடு அதையும் அறிவித்திருந்தால் புண்ணியமாக போயிருக்கும்.

காது குத்து விழாவுக்கு கிடா வெட்டுவது, சமையல் என பல செலவுகள் இருக்கின்றன. இதை மத்திய அரசுக்கு யார்தான் புரிய வைப்பதோ அந்த கருப்பண்ண சாமிக்குதான் வெளிச்சம்.

மெஹந்தி பூசி, தாண்டியா ஆட்டமாடும் வட மாநில பண்டிகைதான், திருமணம் என அறிந்து வைத்துள்ள மத்திய அரசுக்கு, தென் இந்தியர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் பற்றி யாராவது எடுத்துக்கூறி, அதற்கும் கொஞ்சம் கருணை காட்ட சொன்னால் நலம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள் (!).

உதாரணத்திற்கு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேர்த்திக்கடனான முடி காணிக்கை செலுத்துவோர் பஸ்சில் பயணிக்கவும், தரிசனம் சென்று திரும்பவும் ஓரளவுக்கு செலவாகும். அதையும் கூட இனி மத்திய அரசே நிர்ணயித்துவிடலாம்.

இது சபரிமலை சீசன். இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க செல்லும் சாமிமார்களுக்கு, அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் உண்டு. சாமிமார்கள் இனி சக்திகாந்ததாஸ் எப்போது பேட்டியளிப்பார் என பார்த்துக்கொண்டு காசை பத்திரப்படுத்திக்கொள்வது நல்லது.

திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கும் உச்ச வரம்பு நிர்ணயித்தால் கிளம்பும்போதே அவர்களும் உரிய பணத்தை எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு பிக்னிக் போவோர் முதல் ஹனிமூன் போவோர் வரை எவ்வளவு பணம் கொண்டு செல்லலாம். அதில் 1 ரூபாய் சில்லரை எவ்வளவு, 5 ரூபாய் சில்லரை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதையும் கறாராக கணக்கு போட்டு சொல்லலாம் மத்திய அரசு.

குறிப்பாக, குற்றாலத்தில் குளியல் போட இவ்வளவு பணம் கொண்டு செல்லலாம் என்பதை கூட ஒரு குத்து மதிப்பாக கூறிவிடலாம். சீகைக்காய், மசாஜ் சென்டர் செலவுகளை கருணை கூரலாம் மத்திய அரசு.

அதற்குள் அசந்துவிட்டால் எப்படி.?, நாளைக்கு மதியமும் சக்திகாந்த தாஸ் பேட்டியளிப்பார். இன்று ரூம் போட்டு அதிகாரிகள் கொடுத்த ஐடியாக்களை அப்போது அவர் நம்மிடம் பகிர்வார். இதைவிட டாப் ஐடியாக்கள் எல்லாம் அப்போது வெளியாக வாய்ப்புள்ளது. ஏனெனில், மெத்தப் படித்தவர்கள் அல்லவா!

English summary
Bank has allowed up to Rs 2.5 lakh cash withdrawal from bank account of a bride or groom or their parents for a marriage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X