For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக அண்ணாமலை பேட்டி: "இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது"

By BBC News தமிழ்
|
அண்ணாமலை
BBC
அண்ணாமலை

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பல்வேறு விவகாரங்கள் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசியிருந்தார். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனுக்கு அவர் அளித்த பேட்டியின் முதல் பகுதி வெள்ளிக்கிழமை (2021 டிசம்பர் 24) வெளியாகியிருந்த நிலையில், அந்தப் பேட்டியின் அடுத்த பகுதி இது.

திராவிடத்தை மறுக்கவில்லை என்றும், திராவிடம் பிளஸ் வேண்டும் என்று கேட்பதாகவும் அவர் கூறியது பேட்டியின் முதல் பகுதியில் இடம் பெற்றிருந்தது. இப்போது திராவிட இயக்கத்தின் முக்கியமான நிலைப்பாடுகளில் ஒன்றான இந்தி திணிப்பு எதிர்ப்பு குறித்து அண்ணாமலை என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்....

பேட்டியிலிருந்து:

கே. திராவிடம் பிளஸ் குறித்துப் பேசுகிறீர்கள். திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளாக, சமூக நீதி, இந்தி திணிப்பு எதிர்ப்பு, மாநில உரிமைகளுக்காக பாடுபடுவது போன்றவை இருக்கின்றன. நீங்கள் அதைத் தொடர்வீர்களா? இந்தி எதிர்ப்பெல்லாம் உங்களுக்கு உடன்பாடானதுதானா?

ப. அதில் சமரசமே கிடையாது. இந்தியை வலுக்கட்டாயமாகத் திணித்தால் பா.ஜ.க. கட்டாயம் எதிர்க்கும். அதில் சமரசமே கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாகத் திணித்தது யார்? சம்பந்தமே இல்லாமல் இதில் பா.ஜக. பெயரை இழுத்துவிடுகிறார்கள். முதல் கல்விக் கொள்கையில்தான் இந்தி திணிப்பு வருகிறது.

அதைக் கொண்டுவந்தது காங்கிரஸ். 1986ல் இரண்டாவது கல்விக் கொள்கையிலும் இந்தி கட்டாயம் என இருந்தது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் ஏன் இந்தி படிக்காமல் இருக்கிறீர்கள்? வேண்டுமானால் கூடுதல் ஆசிரியர்களைத் தருகிறோம் என்றார்கள். இந்தி திணிப்பு என்பது எங்கள் மீது வைக்கப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு. எங்கள் பக்கம் இதை விளக்கிச் சொல்ல ஆள் இல்லை என்பதால் அபாண்டமாகவே சென்று கொண்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=1dGzBWY_tNs

இப்போதுள்ள புதிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரை, கண்டிப்பாக தாய் மொழியில் படிக்க வேண்டும். எட்டாவது வரை தாய் மொழியில் படிப்பது ஒரு வாய்ப்பாகத் தரப்படுகிறது. மூன்று மொழி படியுங்கள், பிடித்த மொழியைப் படியுங்கள் என்கிறோம். இந்தி கட்டாயமல்ல, ஆனால், தமிழ் கட்டாயம். தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேர் மொழிவாரியாக சிறுபான்மையினராக இருக்கிறார்கள். கோயம்புத்தூர் பகுதியில் மலையாளமும் சென்னைப் பகுதியில் தெலுங்கும் ஓசூர் பக்கம் கன்னடமும் படிக்க வேண்டுமென விரும்புகிறார்கள். அதில் தவறில்லையே. இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொன்னால் நானும் எதிர்ப்பேன். அதுதான் பா.ஜ.க. ஆனால், காங்கிரஸ்தான் இந்தியைத் திணித்தது. எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் ஐந்தாம் வகுப்புவரை தமிழில் படிக்க வேண்டுமென்கிறோம். இது திராவிடக் கட்சிகளே செய்யாத சாதனை.

கே. தமிழ்நாட்டில் பல முறை தமிழ் படிப்பது கட்டாயம் என்று சட்டம் கொண்டுவரப்படு, எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன...

ப. தி.மு.க. பல முறை காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறது. பத்து வருடங்களாக அவர்கள் ஆட்சியில் பங்கேற்றிருந்தபோது மத்திய அமைச்சரவையில் இதைப் பற்றி பேசியிருக்கிறார்களா?

கே. புதிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து..

ப. அப்படி எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. சமஸ்கிருதத்தைத் திணிப்பதை நாங்களும் எதிர்ப்போம். படிக்கக்கூடிய 22 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று. தமிழ்நாட்டில் யாருக்கும் பிடிக்கவில்லையென்றால் படிக்கவே வேண்டாம்.

கே. ஒரு கட்டத்தில் மூன்று மொழி என பிற மொழிகளை படிக்க அனுமதிப்பது, பிறகு அந்த இடத்தை இந்தி எடுத்துக்கொள்ளும் என்பதுதானே கவலை...

ப. ஒரு கவலைக்கு எப்படி பதில் சொல்வது? இது நாடாளுமன்றத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயம். அதை எப்படி மாற்ற முடியும். மோதியே ஒரு குஜராத்திதானே. ஆனால், பா.ஜ.க. என்றாலே இந்தி கட்சி என நினைக்கிறார்கள். நானே பல மாநிலங்களில் பணியாற்ற வேண்டியிருக்கிறது என்பதால் இந்தியைக் கற்றுக்கொண்டேன். எல்லா விஷயங்களிலும் தமிழக நலன் சார்ந்தே நிற்கிறோம். முல்லைப் பெரியாறு விஷயத்திலும் மேகேதாட்டு விஷயத்திலும் தமிழகத்தின் பக்கமே நிற்போம். நாங்கள் எப்போது தமிழக நலனை விட்டுக்கொடுத்திருக்கிறோம்?

கே. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் விடுதலை விவகாரம் குறித்து பா.ஜ.க. என்ன கருதுகிறது..

ப. எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உணர்ச்சிகளை ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும். ராஜீவ் காந்தி, ஒரு முன்னாள் பிரதமர் தமிழ்நாட்டில் கொல்லப்படுகிறார். பிரதமராக இருந்தபோது அவர் எடுத்த சில முடிவுகளுக்காகக் கொல்லப்படுகிறார். இந்த வழக்கு தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ஐ. அதிகாரியால் விசாரிக்கப்பட்டு, உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வெளியாகிவிட்டது. இதற்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பே கிடையாது.

இதில் இந்தியர்களும் இருக்கிறார்கள். வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். இதற்கான சதி இந்தியாவுக்கு வெளியில் நடந்திருக்கிறது. ஆகவே, இந்திய அரசின் நிலைப்பாடு என்பது இந்தியாவுக்கான நிலைப்பாடுதான். தவறுசெய்தவர்கள் தண்டனைக் காலத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இது தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல.

ராஜீவ் காந்தி
Getty Images
ராஜீவ் காந்தி

பேரறிவாளன் எந்தத் தவறும் செய்யவில்லை, ஒரே ஒரு பேட்டரிதான் வாங்கிக் கொடுத்தார் என்கிறோம். ஆனால், அது போன்ற விஷயங்களை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். இதற்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பே இல்லை.

கே. நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. தமிழ்நாட்டில் பெரிதாக வளர நினைக்கும் பா.ஜ.க. ஏன் நீட்டிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறது?

ப. 2006 முதல் 11வரை தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்பட்டன. இதில் பல கல்லூரிகள் தி.மு.க. தலைவர்களுக்கு சொந்தமானவை. நீட் தேர்வைப் பொறுத்தவரை, இது சமூக ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு எதிரான தேர்வு அல்ல. நீட் தேர்வால் பாதிப்பு இருந்ததா என்பதை அறிய 2016, 17, 18ஆம் ஆண்டுகளின் புள்ளி விவரங்களை எடுத்துக்கொள்ளவே கூடாது. அதில் கேள்விகளில் பிரச்சனைகள் இருந்தன. 2019ல் 11ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. 2020ல் 12ஆம் வகுப்பு பாடத் திட்டமும் மாறியது. அதற்குப் பிறகு தமிழ்நாடு மற்ற எந்த மாநிலத்திற்கும் குறைந்ததல்ல. ஆந்திராவில் பரோட்டா மாஸ்டரின் குழந்தை நீட் தேர்வில் தேர்ச்சியடைகிறது. அதைவிட நம் குழந்தைகள் மோசமா?

இதில் சமூக ரீதியாக யாரும் பாதிக்கப்படவில்லை. முதல் முறையாக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வருகிறார்கள். ஏ.கே. ராஜன் கமிட்டியைப் பொறுத்தவரை, 2016, 17, 18 புள்ளிவிவரங்களில் பிரச்சனை இருக்குமெனத் தெரியும் அந்தப் புள்ளிவிவரத்தையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

நீட்டினால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படவேயில்லை. நன்கொடை வாங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள்தான் பாதிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களது கல்லூரிகளில் இடங்களை அதிகப்படுத்தித் தரச் சொல்லி கேட்கிறார்கள். எதற்காக என்று அவர்களிடம் கேட்டேன். சீட்டை விற்க முடியாத நிலையில் எப்படி கல்லூரியை நடத்துவது? இடங்களை அதிகரித்தால்தான் நடத்த முடியும் என்கிறார்கள்.

கே. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என்பதை யாரும் கேள்வி கேட்கவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு ஏன் நீட் தேர்வு என்றுதான் கேட்கிறார்கள்..

ப. 2015 முதல் 19வரை பிரச்சனை செய்ததே மாநில கல்வித் துறைதான். பாடத் திட்டத்தை மாற்றவே இல்லை. அப்படி இருக்கும்போது நீட் எழுதச் சொன்னால் எப்படி மாணவர்களால் எழுத முடியும். அதனால்தான் தனியார் பள்ளிகள் நாங்கள் சிறப்பாக பாடம் சொல்லித் தருகிறோம் என்றுகூறி மாணவர்களைச் சேர்த்தார்கள். ஆனால், 2020 - 21க்குப் பிறகு எந்த கோச்சிங் மையத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. பாடத் திட்டத்தை மாற்றி பிறகு பிரச்சனையே இல்லை.

நீட் தேர்வு
Getty Images
நீட் தேர்வு

கே. யூ டியூபரான மாரிதாஸ் கைதுசெய்யப்பட்டபோது அவருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருந்தீர்கள். கடந்த காலங்களில் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான கருத்துகளை, வெறுப்பை உமிழும் கருத்துகளைத் தெரிவித்துவந்தார். அவரை ஏன் நீங்கள் ஆதரிக்க வேண்டும்?

ப. மாரிதாஸ் மீது 124 என்ற பிரிவின் கீழ் தேசத் துரோக வழக்குத் தொடரப்பட்டது. தேசத் துரோக வழக்குத் தொடரும் அளவுக்கு தமிழ்நாட்டில் கருத்துரிமை இல்லையா? இதைவிட மோசமாக பலர் பேசியிருக்கிறார்கள். ஏன் ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்? நாம் உயர் நீதிமன்றத்தில் செய்த முயற்சி எல்லாமே, தேசத் துரோக வழக்கு வேண்டாம் என்றுதான். இது சட்டவிரோதமானது. குரல்வளையை நசுக்குவது போன்றது.

இரண்டாவதாக, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எங்கள் ஆட்கள் 24 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. 24 வழக்குகளிலும் உள்ளூர் தி.மு.க. நிர்வாகிதான் புகார்தாரர். அதை எப்படி ஏற்க முடியும்? புகார் கொடுக்கிறார்கள், ஆய்வாளர் கைதுசெய்கிறார். சிறைக்கு அனுப்புகிறார்கள். தமிழ்நாடு பெண் நிர்வாகிகளின் புகைப்படத்தைப் பயன்படுத்தி ஆபாசமாக வர்ணிக்கிறார்கள். அதிகபட்ச தண்டனை என்ன? கட்சியிலிருந்து நீக்குகிறார்கள். ஆணையரிடம் புகார் கொடுத்தால், குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிடுகிறது.

மாரிதாஸ் மீது ஏன் தேசத் துரோக வழக்குப் போட்டீர்கள் என்பதுதான் கேள்வி.

கே. அப்படியானால், அவர் மீது உள்ள பிற வழக்குகள்..

ப. அதை நீதிமன்றம் முடிவுசெய்யட்டும். நியூஸ் 18 வழக்கு, மேலப்பாளையம் வழக்குகளை நீதிமன்றம் முடிவுசெய்யட்டும். முன்பெல்லாம் இம்மாதிரி விவகாரங்களில் வழக்குத் தொடுக்கப்படும். நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இப்போதுதான் கைதுகள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன. இது போன்ற விவகாரங்களை காவல்துறை ஆய்வாளரோ, ரைட்டரோ முடிவுசெய்ய முடியுமா? 2017, 18ல் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து கைதுசெய்வதை எப்படி சரி எனச் சொல்ல முடியும்? நீங்கள் முதல் தகவல் அறிக்கையைப் பதிவுசெய்யுங்கள். அதை நீதிமன்றம் முடிவுசெய்யட்டும். அதற்காக அவர் சொல்லும் எல்லாக் கருத்துகளையும் ஏற்கிறீர்களா என்றால், இல்லை. பல விஷயங்களில் கருத்து முரண்பாடு உண்டு. யாரையும் தவறாகப் பேசக்கூடாது என்கிறோம். நம்மைத் திட்டிப் பேசினாலும் வலுவாக பதிலடி தர வேண்டும் ஆனால், நாகரீகமாக கொடுங்கள் என்கிறோம்.

அண்ணாமலை
Getty Images
அண்ணாமலை

கே. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பா.ஜ.கவுக்கும் ஊடகங்களுக்கும் இடையிலான உறவு உரசல் நிறைந்ததாக இருந்தது. அதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?

ப. உண்மையாகவே சுய பரிசோதனை செய்துபார்க்கும்போது, இந்த விவாத நிகழ்ச்சிகளில்தான் பாதி பிரச்சனை வருகிறது. ஊடகங்கள் நமக்கு எதிரான கருத்தைச் சொல்வதாக நாம் நினைக்கிறோம். அப்படியானால், அந்தக் கருத்தை அமைதியாக மறுத்துப் பேசுங்கள். அதற்கென ஒரு சண்டை போட வேண்டிய அவசியமில்லை. மிக வன்மம் தோய்ந்த வார்த்தைகளை ஒரு தொகுப்பாளர் மீது பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.

இரண்டாவதாக, நாம் விஷயங்களைச் சொல்லும்போது இன்னும் சிறப்பாக, கவனமாக பேச வேண்டுமென கட்சிக்குள் பேசியிருக்கிறோம். திராவிடம், ஹிந்தி இதைப் பற்றியெல்லாம் பேசும்போது யாருக்கும் எதிராக இல்லாமல், இதுதான் விஷயமெனப் பேசுவோம் என்று சொல்லியிருக்கிறோம். நாம் தீவிரமாக பேசுகிறோம் என்று செல்லும்போது, நாம் சொல்லும் கருத்துகளில் தெளிவில்லாமல் போகிறது. பா.ஜ.க. இந்திக்கு எதிராக இருக்கிறதா? ஆம், பா.ஜ.க. இந்தி திணிப்புக்கு எதிராகத்தான் இருக்கிறது. ஆனால், ஒரு வாய்ப்பாக அதைக் கொடுக்கும்போது எதிர்த்தால், போய் விளக்கிச் சொல்லுவோம். இதையெல்லாம் சரி செய்துகொண்டிருக்கிறோம்.

கே. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தைப் பற்றிப் பேசும்போது, அதன் முழுப் பாடலையும் பயன்படுத்த வேண்டுமென்கிறீர்கள். அதில் சில மொழிகள் குறித்த எதிர்மறையான கருத்துகளும் உள்ளன. அவையும் வேண்டுமென்கிறீர்களா?

ப. தெலுங்கு, கன்னடம், துளு போன்ற மொழிகளும் தமிழில் இருந்துதான் வந்தன என்ற வரிகள் உள்ளன. அதை நீக்கி குறுகிய மனம் கொண்டவர்களாக நம்மைக் காட்ட வேண்டாம் என்கிறோம். அதுதான் நான் சொல்ல வருவது. நாம்தான் எல்லாவற்றுக்கும் தாய்மொழி. அதைச் சொல்லுங்கள். அதிலென்ன தவறு.

பிரதமர்
Getty Images
பிரதமர்

கே. ஆரியம் போல உலக வழக்கொழிந்து என்ற வரியும் சரிதானா?

ப. மனோன்மணீயம் பிள்ளைக்கு மரியாதை செய்வதாக இருந்தால், அந்தப் பாடலின் மையம் சிதையாமல் இருக்க வேண்டும். நமக்கும் ஆரியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் அதன் பாதுகாவலராகப் பேசவில்லை. நான் இந்த ஊரில் பிறந்து, இந்த ஊரில் வளர்ந்து, இந்த மண்ணில் அரசியல் செய்யும், தமிழ்நாட்டின் பெருமையைப் பேசக்கூடிய ஒரு அரசியல்வாதி. ஆரியத்தைப் பற்றி பிரச்சனை இருந்தால் நீக்கி விடுங்கள்; ஆனால், தமிழைப் பெருமைப் படுத்தக்கூடிய வரிகளை ஏன் நீக்குகிறீர்கள் என்பதுதான் என் கேள்வி.

கே. ஜனவரி மாதம் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகிறார். அப்போது நடக்கும் நிகழ்வில் முதல்வரும் பங்கேற்கிறார். அரசியல் கணக்குகள் மாறும் வாய்ப்புகள் உண்டா?

ப. மாநில முதல்வர் ஒரு நிகழ்வுக்கு அழைக்கும்போது அதற்கு கௌரவம் கொடுத்து வருகிறார். அவ்வளவுதான். அதை ஒரு அரசு நிகழ்ச்சியாகத்தான் பார்க்கிறோம். அரசியலில் பா.ஜ.கவும் தி.மு.கவும் எதிர் எதிர் துருவமாக மாறிவிட்டன. எல்லா விஷயங்களிலும் எதிர் எதிர் நிலைப்பாடுகளைத்தான் எடுக்கிறோம். இம்மாதிரி சூழலில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதற்கான சூழல் ஏதும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. வாய்ப்பே இல்லை. ஆனால், மத்திய அரசுடன் பேசி, போராடி மாநிலத்திற்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்வோம் என்பதுதான் என் நிலைப்பாடு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Tamilnadu BJP President Annamalai says about Hindi imposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X