
ஆளும் கட்சி வேட்பாளர் தெறித்து ஓட்டம்.. பாஜக "தலையை" தாக்கிய காங்கிரஸ்? குஜராத் தேர்தலில் பரபரப்பு
காந்திநகர்: இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் தங்களது வேட்பாளர் பியூஸ் படேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
வன்ஸ்தா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள இவர் மீது காங்கிரஸ் சார்பில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் காவல்துறை உடனடியாக இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தேர்தலுக்கு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளும் கட்சி வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளை தொடங்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல்.. எத்தனை தொகுதிகளில் வாக்குப்பதிவு.. முழு பின்னணி

தாக்குதல்
நேற்றிரவு வன்ஸ்தா தொகுதியின் ஜாரி கிராமத்தில் மக்களை சந்தித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது பியூஸ் படேலின் காரை சிலர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில், காரில் பயணித்த பியூஸ் படேலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை காங்கிரஸ் குண்டர்கள்தான் நடத்தியுள்ளனர் என பாஜக குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக வன்ஸ்தா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் படேலின் ஆதரவாளர்கள்தான் தன்னை தாக்கியுள்ளதாக பியூஸ் படேல் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அந்த தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஆளும் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காங்கிரஸ்
வன்ஸ்தா தொகுதியை பொறுத்த அளவில் கடந்த இரண்டு தேர்தல்களில் அதாவது 2012ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ்தான் இங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆனந்த் குமார் படேலுக்கு இந்த முறையும் காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 2017ம் ஆண்டு இதேபோல 89 தொகுதிகளில் நடந்த முதல்கட்ட தேர்தலில் பாஜக 48 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் சுயேட்சை வேட்பாளர் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார். சௌராஷ்டிரா-கடச் மற்றும் மாநிலத்தின் தெற்கு பகுதி என மொத்தமாக 19 மாவட்டங்களில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு
இந்த 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 14,382 தொகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதேபோல இந்த முறை மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி ஆட்சியை 7வது முறையாக தக்க வைத்துக்கொள்வோம் என்று பாஜக நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏனெனில் படிதார் சமூக மக்களுக்கான போராட்டம், தாகூர் சமூக மக்களின் போராட்டம் போன்றவை கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை கொடுத்தது என்றும், ஆனால் 2017க்கு பிறகு இப்படியான போராட்டங்கள் ஏதும் நடக்கவில்லை எனவே காங்கிரஸ் தனது வாக்கு வங்கியை இழக்கும் என்று பாஜக கூறியுள்ளது.

தேர்தல்
2017ம் ஆண்டு தேர்தலை பொறுத்த அளவில், பாஜக வெற்றி பெற்றிருந்தாலும் பாஜகவுக்கும் காங்கிரசுக்குமான இடைவெளி என்பது வெறும் 10%தான். எனவே இந்த முறை எப்படியாவது ஆட்சியை முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இதற்காக வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டிருக்கிறது. வேலையின்மை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மதக் கலவரங்கள் என ஆளும் கட்சியின் தவறுகள் காங்கிரசுக்கு கைகொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல பாஜக இந்த தேர்தலில் ஒரேயொரு இஸ்லாமியரைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. எனவே சிறுபான்மையினர் வாக்குகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆம் ஆத்மி களத்தில் இருப்பதால் காங்கிரசுக்கு இந்த தேர்தல் சவாலாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.