'பண வசூல் மோசடி': யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் கைது - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
கோயில் புனரமைப்பு என்ற பெயரில் நிதி வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக யூட்யூபர் கார்த்திக் கோபிநாத் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ' கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக பா.ஜ.கவின் சட்டக் குழு இருக்கும்' என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு மதுரகாளியம்மன் என்ற கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இங்குள்ள பெரியசாமி மலையில் துணைக் கோயில் எனக் கூறப்படும் பெரியசாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுடுமண்ணால் செய்யப்பட்ட செல்லியம்மன், பெரியசாமி, சஞ்சீவி ஆஞ்சநேயர், நீலியம்மன், சப்த கன்னிகள் உள்பட ஏராளமான சிலைகள் இருந்தன.
கடந்த 2015ஆம் ஆண்டில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், சுடுமண் சிற்பங்களை உடைத்துவிட்டனர். குறிப்பாக, பெரியசாமி மலையில் உள்ள 20 அடி உயரமுள்ள பெரியசாமி சிலை, செங்கமல சாமி சிலை, சூரப்பிள்ளையான் சிலை என பத்துக்கும் மேற்பட்ட சிலைகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
'மாற்று மதத்தினரால் சிலைகள் உடைக்கப்பட்டிருக்கலாம்' எனப் பேசப்பட்டு வந்த நிலையில், நாதன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அதேநேரம், பா.ஜ.க ஆதரவாளரும் 'இளையபாரதம்' என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் கார்த்திக் கோபிநாத் என்பவர், சிறுவாச்சூர் கோயிலை புனரமைக்க உள்ளதாக அறிவித்தார்.
- பழங்கால தமிழர்கள் கோயில் கோபுர கலசங்களில் தானியம் வைத்தது ஏன்?
- தமிழக கோயில்கள்: பண்பாட்டுப் பெருமிதத்தின் உச்சம்
- ஞானவாபி மசூதி: இந்த விவகாரம் சர்ச்சையாக மாறுவதை நீதிமன்றத்தால் தடுத்திருக்க முடியுமா?
இதற்காக செயலி ஒன்றின் மூலம் நிதி வசூலும் செய்துள்ளார். இந்த விவகாரத்தில், கார்த்திக் கோபிநாத் ஐம்பது லட்சத்துக்கும் மேல் மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது. தனது வங்கிக் கணக்கு மூலம் அவர் நிதி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் பியூஸ் மனுஷ், ஊடகங்களுக்குப் பேட்டியும் கொடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே, ' இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தனி நபர்கள் யாரும் வசூல் செய்ய முடியாது' என அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறியிருந்தார். மேலும், ' சிறுவாச்சூர் கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார்' எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தச் சர்ச்சைக்கு தனது யூட்யூப் சேனல் மூலமாகவே விளக்கம் அளித்த கார்த்திக் கோபிநாத், ''சிறுவாச்சூர் கோயிலை சேதப்படுத்தியது கிறிஸ்துவ அமைப்பினர் என நான் தவறாகத் தகவல் பரப்பியதாகக் கூறுகின்றனர். அவ்வாறு எந்த இடத்திலும் நான் கூறவில்லை. சுடுமண் சிலையை தனி நபர் ஒருவர் மூன்று முறை அடித்து நொறுக்கியுள்ளார். இதில் எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத்தான் கூறினேன். அதேபோல், எனது வங்கிக் கணக்கு மூலமாக பணத்தைப் பெறவில்லை. 'கோயில் புனரமைப்பு தொடர்பாக நான் செய்யக் கூடிய தேசியப் பணிக்கு உதவி செய்ய விரும்பினால் செய்யலாம்' எனக் கூறியிருந்தேன். ''
இதற்காக செயலி மூலம் நன்கொடை பெறப்பட்டது. அவற்றுக்கெல்லாம் முறையான கணக்கு, வழக்குகள் உள்ளன. எனது தனிப்பட்ட கணக்குக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டியதில்லை எனக் கூறிவிட்டேன். கோயில் புனரமைப்புக்கு இந்து சமய அறநிலையத்துறை எதாவது செய்துள்ளதா? இதற்காக 33 லட்ச ரூபாய்தான் சேகரிக்கப்பட்டது. ஆனால், 41 லட்ச ரூபாய் வரையில் தேவைப்பட்டது. எனக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் பரவாயில்லை. வதந்தி கிளப்பாமல் இருந்தால் போதும்'' என விளக்கம் அளித்துள்ளார்.
- மதுரா ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமிக்கும் ஷாஹி ஈத்கா மசூதிக்குமான ஒப்பந்தம் என்ன?
- 'உலகின் முதல் கோயில்': மனித வரலாற்றை மாற்றி எழுதும் 11,000 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டுமானம்
- மதுரை பேக்காமன் கோயிலில் பட்டியலினத்தவர் நுழைவு: நடந்தது என்ன?
தொடர்ந்து, கோயில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகளை சந்தித்துப் பேசியது தொடர்பான புகைப்படங்களையும் பட்டியலிட்டு, ''இந்த நிதியை கொடுப்பதற்கு ஆணையரிடம் அனுமதி கேட்டுள்ளோம். அவரும், 'இதனை கவனிக்கச் சொல்கிறேன்' என உறுதியளித்துள்ளார். திருப்பணி கமிட்டியில் உள்ள முக்கிய நபர்களிடம் கலந்து பேசி, இந்தத் தொகையை எவ்வாறு கொண்டு செல்வது என விவாதித்தோம். திருப்பணி கமிட்டிக்கு எனத் தனியாக வங்கிக் கணக்கு இல்லை. கடந்த டிசம்பர் மாதமே அறநிலையத்துறையின் அனுமதியைக் கேட்டோம். அங்குள்ள நான்கு கோயில்களை சீரமைக்க வேண்டும். பெரிய கோயிலில் மட்டும் கவனம் செலுத்தினோம். ஊர் பெரியவர்களை எல்லாம் வரவழைத்து ஸ்தபதியை ஏற்பாடு செய்யும் பணிகளும் நடந்தன. அறநிலையத்துறை எந்தப் பணிகளையும் செய்யவில்லை. இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் சிலர் அவதூறு பரப்புகின்றனர்'' எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் மீது சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ் கொடுத்த மோசடிப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, நிதி வசூல் செய்து மோசடி செய்ததாகக் கூறி கார்த்திக் கோபிநாத்தை ஆவடி குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
https://twitter.com/annamalai_k/status/1531107448148267009
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'பொய்யான குற்றச்சாட்டுகளின்கீழ் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தங்களுக்கு எதிரான குரல்களை தி.மு.க அரசு ஒடுக்க நினைக்கிறது. கார்த்திக் கோபிநாத்தின் தந்தையிடம் பேசினேன். இந்த விவகாரத்தில் பா.ஜ.கவின் சட்டக் குழுவினர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஆதரவாக இருப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
















Click it and Unblock the Notifications