மாஜி மத்திய அமைச்சர் வீட்டுக்குள் வேலைக்கார பெண்ணின் கணவன் அடித்து கொலை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா வீட்டில் வேலைக்கார பெண்மணியின் கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான குமாரி செல்ஜாவின் வீடு டெல்லி சுனேரிபாக் பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் 42 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த நபர், குமாரி செல்ஜாவின் வீட்டு வேலைக்கார பெண்மணியின் கணவன் சஞ்சய் (42) என்று தெரியவந்தது.

செல்ஜாவின் வீட்டு வளாகத்திலேயே வேலைக்காரர்களுக்கான குடியிருப்பும் உள்ளது. இங்குதான் சஞ்சய் மற்றும் அவரது மனைவி வசித்து வந்தனர். இந்நிலையில், சஞ்சய் தலையில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மனைவிதான் இதை முதலில் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சஞ்சய் மைத்துனி ராக்கி நிருபர்களிடம் கூறியதாவது: சஞ்சய் தலையில் அடிபட்ட காயம் இருந்தது. ரத்த வெள்ளத்தின் நடுவேதான் உடல் கண்டெடுக்கப்பட்டது. இரும்பு கம்பியால் தலையில் அடித்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.
செல்ஜாவின் சமையல்காரர் அனில் என்பவருக்கும், சஞ்சய்க்கும் நடுவே தகராறு இருந்துவந்தது. குடியிருப்பை காலி செய்வது தொடர்பாக இருவருக்கும் அவ்வப்போது பெரும் தகராறு, வாக்குவாதம் வெடித்துள்ளது. அனில்தான், எனது அத்தானை கொலை செய்திருக்க வேண்டும். இவ்வாறு ராக்கி தெரிவித்தார்.
கொலை வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர், அனில் மட்டுமின்றி, சஞ்சய் மனைவி குடும்பத்தாரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் வீட்டுக்குள் கொலை நடந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
