For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பிரச்சார பீரங்கியிலிருந்து பிரதமர் பக்குவத்தை நோக்கி மோடி.." இது கண்ணீர் சொல்லும் கதை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரச்சார களத்தில் ஆலமரம் போல காட்சியளித்த நரேந்திரமோடி, பிரதமர் பதவியை ஏற்க தயாரானதும் வளைந்து கொடுக்கும் நாணலாக மாறிவிட்டதை அவரது நடவடிக்கைகள் காண்பிக்கின்றன. மோடியின் நாடாளுமன்ற உணர்ச்சிமிகு உரையை அரசியல் விமர்சகர்கள் நல்ல துவக்கத்தின் அறிகுறியாக பார்க்கிறார்கள்.

பிரச்சாரத்தில் காரம்

பிரச்சாரத்தில் காரம்

ஏழு மாதங்களுக்கு முன்பு நரேந்திரமோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஜக தேர்ந்தெடுத்தது முதல், நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று மோடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 25 மாநிலங்களில், மூன்று லட்சம் கிலோமீட்டர் தூரம் அவர் பயணம் செய்து 437 பொதுக்கூட்டங்களில் பேசியுள்ளார். மக்களின் அருகில் நின்று பேசுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் 3டி முறையில் 544 இடங்களில் மோடியின் பிரச்சாரம் ஒளிபரப்பப்பட்டது. அவரது பிரச்சாரத்தில் வேறு எந்த தலைவரையும் விட கூடுதலாக காரம் அதிகம் இருந்தது.

காங்கிரசை காய்ச்சினார்

காங்கிரசை காய்ச்சினார்

பிரச்சாரத்தின்போது நேரு குடும்பத்தைதான் போட்டு காய்ச்சி எடுத்துவிட்டார் மோடி. "நான் டீ தான் விற்றேன், நாட்டை விற்கவில்லை" என்று காங்கிரசில் ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் ஊழல்களுக்கு நேரடியாக தாக்குதல் தொடுத்தார் மோடி. நேரு, ராஜிவ்காந்தி இவர்களுக்கு மட்டும்தான் காங்கிரசில் முன்னுரிமை கொடுப்பார்கள். வேறு குடும்பத்தில் இருந்து வந்த நரசிம்மராவ் போன்ற முன்னாள் பிரதமர்களை நினைவில் இருந்தே அழித்துவிட்டார்கள் என்று ஆந்திராக்காரர்களுக்கு காங்கிரஸ் மீது ஆத்திரம் ஏற்படுத்தினார் மோடி. காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் வாருங்கள் என அரைகூவல் விடுத்தார்.

சோனியா, ராகுல் எஸ்கேப்..

சோனியா, ராகுல் எஸ்கேப்..

இவரது பேச்சுக்களையும், ஏச்சுக்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டதால், மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்து மோடியை நேருக்கு நேர் சந்திக்க சோனியாவும், ராகுலும் தயங்குகிறார்கள். இதனால் அந்த பதவியை முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத்துக்கு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

மோடியின் மாற்றம்

மோடியின் மாற்றம்

எதிர்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்த மோடியிடம் இப்போது, அப்படியொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக மோடியை தேர்ந்தெடுத்தனர். அதன்பிறகு உரையாற்றிய மோடி 'சென்டிமென்ட் செம்மலாக' மாறிப்போனார். "பாஜக எனது தாயை போன்றது, தாய்க்கு மகன் சேவை செய்வதற்கு நன்றியை பரிசாக பெறத்தேவையில்லை" என்று அவர் கூறுகையில், கண்களில் கண்ணீர் வந்தது. தண்ணீர் குடித்துவிட்டுதான் பேச்சை தொடர வேண்டிய நிலையில், மோடி அப்போது உணர்ச்சி பிழம்பாய் இருந்தார். வாக்கு சேகரிக்கும்போது, இதுபோல அழுதிருந்தால் மக்களை கவர மோடி வித்தை காட்டுகிறார் என்று கேலியாக கூறிவிட முடியும். ஆனால் பொது இடங்களில் ஒருமுறை கூட இதுவரை அழுது பார்த்திராத நிலையில், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் யாரையும் கவர அழ தேவையில்லை என்று நம்பலாம்.

ஜனநாயக கோயிலுக்கு மரியாதை

ஜனநாயக கோயிலுக்கு மரியாதை

மோடியின் ஒவ்வொரு செயல்பாடும் மிகவும் உள் அர்த்தம் பொதிந்ததாக உள்ளது என்கிறார் கட்டுரையாளர் சுவபன் தாஸ்குப்தா. நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நுழைந்தபோது, அதன் படிக்கட்டில் மண்டியிட்டு வணங்கிவிட்டு உள்ளே சென்றார் மோடி. நாடாளுமன்றம் மீதான மரியாதையை மக்கள் மனதிலும், கட்சிகள் மனதிலும் ஒருசேர விதைப்பதில் இது பெரும் பங்காற்றியுள்ளது.

இவ்வளோ விஷயம் இருக்கா..?

இவ்வளோ விஷயம் இருக்கா..?

கடந்த பத்தாண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்ற கூட்டங்களில் கூச்சலும், குழப்பமும்தான் மிஞ்சியது. 'ஜனநாயகத்தின் கோயில்' என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற, சட்டமன்றங்கள் மீதான மரியாதை மக்கள் மத்தியில் குறைந்துவந்தது. நாடாளுமன்றத்தின் அத்தியாவசியம் கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் மோடியின் 'மண்டியிட்ட வணக்கம்' முதலில் விந்தையாக தெரிந்தாலும், பிறகு ஏன் அவ்வாறு செய்தார் என்று யோசித்து பார்த்து, நாடாளுமன்ற முக்கியத்துவத்தை இளம் தலைமுறை உணர வாய்ப்பளித்தது. "இனிமேல் கூச்சல், குழப்பம் செய்ய கூடாதுப்பா.. நாடாளுமன்றத்தில் நல்ல பிள்ளையா இருக்கனும்" என்ற சமிக்ஞையை எம்.பிக்களுக்கும் மறைமுகமாக மோடி காண்பித்துவிட்டார்.

பாஜ உள்குத்து

பாஜ உள்குத்து

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கும், அவரது கோஷ்டிக்கும், மோடியை பிரதமராக்க விருப்பமில்லை. பெரும்பான்மை பலத்தை பாஜக பெறாவிட்டால், "அத்வானியை பிரதமராக்கினால் நாங்கள் ஆதரவு தருவோம்" என்று கூற ஐக்கிய ஜனதாதளம், பிஜு ஜனதாதளம் போன்ற அத்வானிக்கு நெருக்கமான கட்சிகள் தயாராக இருந்தன. ஆனால் அவர்கள் விரும்பியபடி நடக்காமல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்துவிட்டது. இதனால் கட்சிக்குள் அத்வானி கோஷ்டி கோபத்தில் ஏதேனும் உள்ளடி வேலைகளில் ஈடுபடக்கூடும் என்று மோடி சந்தேகிக்கிறார். எனவே கட்சியை தாயுடன் ஒப்பிட்டு பேசி, "நான் கட்சிக்கு விரோதமாக செயல்படாமல் நீங்கள் சொல்லியபடியே கேட்பேன்" என்று மறைமுகமாக உணர்த்திய மோடி, அத்வானி மனதையும் சேர்த்து கரைத்துவிட்டாார். அத்வானியை டம்மியாக்கிவிட்டு, முரளி மனோகர் ஜோஷியிடமிருந்து வாரணாசியை 'கைப்பற்றிய' மோடி மீது கட்சிக்குள் சிலரிடம் இருந்த கசப்புணர்வு இதன் மூலம் தீர்ந்தது.

மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம்

மாநில கட்சிகளுக்கு முக்கியத்துவம்

ஒரு சீட்டு வாங்காவிட்டாலும் விஜயகாந்த்தை அன்போடு ஆரத்தழுவியது, ஜெயலலிதாவுக்கு போன்போட்டு நன்றி தெரிவித்தது, ரங்கசாமியை எளிமையின் இலக்கணமாக புகழ்வது, சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு உழைப்பின் சிகரங்கள் ரேஞ்சுக்கு ஏற்றிவைப்பது என மாநில கட்சிகள் ஒன்றுவிடாமல் ரவுண்டு கட்டி வளைத்துப்போட்டுவிட்டார் மோடி. நாட்டின் பிரதமராக இருந்தாலும், மாநில அரசுகளின் ஒத்துழைப்பின்றி நினைத்ததை சாதிக்க முடியாது என்பதை உணர்ந்த பக்குவம் மோடியின், மாநிலவாரி அரவணைப்பில் நன்குதெரிகிறது. வருங்கால கூட்டணிக்கும் இது அச்சாரம் போடுகிறது.

காங்கிரசும் நல்ல கட்சிதான்..

காங்கிரசும் நல்ல கட்சிதான்..

காங்கிரஸ் கட்சியையும் மோடி தூற்றவில்லை. நம்மூராக இருந்தால் ஆட்சிக்கு வந்தபிறகுதான் தோற்ற கட்சியை துவைத்து எடுப்பார்கள். ஆனால் மோடியோ, "காங்கிரஸ் அரசு மக்களுக்காக எதையுமே செய்யவில்லை என்று நான் கருதவில்லை. சில நல்ல திட்டங்களையும் கொண்டு வந்துள்ளார்கள். நாடு பெற்ற வளர்ச்சியில் ஆட்சி செய்த அனைவருக்கும் பங்கு உள்ளது" என்று பங்குபிரித்து கொடுத்துவிட்டார். இதன் மூலம், எதிர்க்கட்சிகளையும், எதிர்க்க கூடாது என்று அரசியல் சாணக்கியத்தனத்தை அவரது பேச்சு காண்பித்துவிட்டது.

பாராட்டு

பாராட்டு

மக்களிடம் பிரச்சாரத்தின்போது எப்படி பேச வேண்டும், ஆட்சி நடத்த தேவையான ஒத்துழைப்பை பெற எப்படி பேச வேண்டும் என்று பாகுபடுத்தி வைத்துள்ளார் மோடி. இப்படியெல்லாம் அரவணைக்காமல் ஐந்தாண்டுகளுக்கும் என் ஆட்சி.. என் இஷ்டம் என்பதுபோல நடந்து கொள்ள மோடிக்கு துணிச்சலும் உள்ளது, தேவையான பலமும் உள்ளது. ஆனால் மோடியின் நெகிழ்ச்சித்தன்மை விமர்சகர்களால் பாராட்டப்படுகிறது. "தன்னை ஒரு சர்வாதிகாரி போல சிலர் பார்ப்பதை அவர் விரும்பவில்லை, தனக்கும் உணர்ச்சிகள் உள்ளன என்பதை காண்பிப்பதை போல மோடியின் பேச்சு இருந்தது" என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். முதன்முதலாக நாகாலாந்து மாநில எம்.பி ஒருவருக்கு இதுபோன்ற முக்கிய நிகழ்ச்சியில் பேச வாய்ப்பளித்ததும் மோடியின் ஏற்பாடுதானாம். இதனால் வடகிழக்கு மாநிலங்கள் இந்தியாவைவிட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையை மாற்ற, மோடி நினைக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஜெய் கிசான்

ஜெய் கிசான்

"நாடாளுமன்ற மைய மண்டபத்தின் பெரும்பகுதி பேச்சு ஏழை மக்கள் குறித்துதான் இருந்தது. 1971ம் ஆண்டு இந்திராகாந்தி முழங்கிய 'கரிபீ கட்டாவோ' கோஷத்தை மோடி நினைவுபடுத்தினார். பேச்சின் எந்த ஒரு பகுதியிலும், பெரும் தொழிலதிபர்கள் குறித்து அவர் குறிப்பிடவில்லை என்பது பாராட்டத்தக்கது. ஏழைகள் மீதான மோடியின் அக்கறை நடிப்பாக தெரியவில்லை" என்ற மூத்த பத்திரிகையாளர் குமார் கேத்கர் கூற்றை புறந்தள்ளிவிட முடியாது.

English summary
There is little doubt that Prime Minister-designate Narendra Modi gave a considerably mellow speech at the Central Hall in Parliament in comparison to the combative posture he adopted till recently in many political rallies. Missing were the verbal assaults on his political opponents — today's speech was a clear indication of Modi the statesman and Modi the emotionally vulnerable individual.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X