
டெல்லி: விமான பயணி ஒருவரை இண்டிகோ ஊழியர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு உள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் பயணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இண்டிகோ விமான ஊழியர்கள் பயணியைத் தாக்கி கீழே விழச் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில் ஊழியர்களின் முரட்டுத்தனத்தை பலரும் கண்டித்து பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்தப்பயணி ராஜூவ் கட்டியால் என்பதும், காலை விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றவர் என்பதும் தெரியவந்தது.டெல்லி விமானத்தை விட்டு இறங்கிய அவர் ஊழியர்களிடம் ஏதோ பேச, அதற்கு இரண்டு ஊழியர்கள் அவரைத் தாக்கி தரையில் விழ வைத்தனர்.
இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ,இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய விமான போக்குவரத்து இயக்ககத்திடம் இருந்து விளக்கமும் கேட்டு இருக்கிறார். இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. அதில் தங்களுக்கு வாடிக்கையாளர்களின் மாண்பும், மரியாதையும் மிக முக்கியம் என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான பயணி ராஜூவ் கட்டியாலிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரி இருக்கிறார் இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா கோஷ். இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் அஜிடேஷ் என்கிற இண்டிகோ விமான நிறுவன ஊழியர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். இப்படி பணியாளர்களால் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் அவப்பெயரைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!