மேகேதாட்டு: “காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட விட மாட்டோம்” – தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்
(இன்றைய நாளில் இலங்கை, இந்தியாவில் உள்ள ஊடகங்கள், இணையதங்கள் வெளிவந்த முக்கிய தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட விடமாட்டோம், காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு தொடர்ந்து போராடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அதுகுறித்த செய்தியின்படி, மேகேதாட்டு அணை திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் கூறியிருப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்துள்ள முதல்வர், இது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்த, அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் குழு விரைவில் டெல்லி செல்லும் என்றும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "காவிரிப் பிரச்னை, தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதில், திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும். தமிழகத்தின் உரிமையை நிச்சயம் நிலைநாட்டுவோம்.
பிரதமர் மோடியை நேரில் சந்தித்தபோதுகூட, இது தொடர்பாக வலியுறுத்தி உள்ளேன். மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது என்பதும், மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்பதும் தமிழக அரசின் இறுதியான நிலைப்பாடு.
இந்நிலையில், மேகேதாட்டு அணை கட்டும் திட்டம் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தஞ்சாவூரில் கூறியிருப்பது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
- குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளரை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளால் முடியுமா?
- அமைதியாகத் தொடங்கிய போராட்டம் இலங்கை அரசையே உலுக்கியது எப்படி?
- சென்னையிலும் அக்னிபத் போராட்டம்: தலைமைச் செயலகம் முன் போராடியது ஏன்?
இப்படி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறதா?
உச்ச நீதிமன்றத்தில் ஒரு விவகாரம் வழக்காக இருக்கும்போது, அதை விவாதிக்கும் அதிகாரம் ஆணையத்துக்கு இல்லை. அது தெரிந்தும், இதுகுறித்து விவாதிப்போம் என்று ஆணையத் தலைவர் சொல்வது சட்டவிரோதமானது.
இந்த விவகாரத்தில் தமிழக மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை மத்திய அரசுக்கு உணர்த்துவதற்காக, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர்கள் குழு டெல்லிக்குச் சென்று, மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து, இது தொடர்பாக வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்குழுவினர் டெல்லி சென்று, மத்திய அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. விரைவில் இக்குழு டெல்லிக்குச் செல்லும்," என்று தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
இலங்கை நெருக்கடி: "மக்களின் வலியைப் புரிந்துகொள்ளாத அரசு முடிவுக்கு வர வேண்டும்"
வரிசையில் நின்று அவதிப்படும் மக்களின் வலியையும்வேதனைகளையும் புரிந்து கொள்ளாத ஆட்சியாளர்களின் பயணத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அதுகுறித்த செய்தியில், "வீட்டில் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் சார்பாகவும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கல்வியை இழந்து எதிர்காலம் குறித்து விரக்தியடைந்துள்ள இளைய தலைமுறையின் பெயரில் இந்நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்பட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நாட்டைச் சேர்ந்த இருபது லட்சம் வெளிநாட்டு வாழ் மக்களுக்கு அழுத்தம், ஏமாற்றம் மற்றும் துன்பங்களை உரிமையாக்கிய இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம், தங்களுடைய திறமையற்ற தன்மை, இயலாமை என்பனவற்றையே மீண்டும், மீண்டும் நிரூபிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (ஜூன் 18) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"அக்னிபத் திட்டம் ஆழமான அர்த்தம் கொண்டது"
மத்திய அரசின் அக்னிபத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ள நேரத்தில், நடிகை கங்கனா ரணாவத், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோதியை பாராட்டியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுகுறித்த செய்தியில், "மத்திய அரசின் அக்னிபத் திட்டம் நாடு முழுக்க அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது. இதைத் திரும்பப் பெறக்கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது," என்று குறிப்பிடப்படுள்ளது.
மேலும், இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோதியை நடிகை கங்கனா ரணாவத் பாராட்டியுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, கங்கனா ரணாவத், "இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சியைக் கட்டாயமாக்கியுள்ளது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளைக் கற்றுக்கொள்ளவும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது என்றால் என்னவென்பது குறித்து அறியவும் சில ஆண்டுகளுக்கு ஒவ்வொருவரும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
அந்த வகையில் அக்னிபத் திட்டம், தொழில் வாழ்க்கையைக் கட்டமைப்பதைவிட ஆழமான அர்த்தம் கொண்டது," என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்