வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டி.. திடீரென அறிவித்த காமெடி நடிகர்.. இப்படி ஒரு காரணமா?
அகமதாபாத்: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட இருப்பதாக பிரபல காமெடி நடிகரும் மிமிக்ரி கலைஞருமான ஷ்யாம் ரங்கீலா அறிவித்துள்ளார். போட்டியிடுவதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார்.
நாட்டின் 18வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் 2 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 3-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் மே 7 ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல், பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ஜூன் 01 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தல்: 7-ஆம் கட்ட தேர்தலில் தான் வாரணாசியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாரணாசியில் தொகுதியில் தற்போது பிரதமர் மோடி எம்பியாக உள்ளார். வரும் தேர்தலிலும், மோடியே இங்கே பாஜக சார்பாக போட்டியிட உள்ளார். இதனால், வாரணாசி சர்வதேச அளவில் கவனம் பெறும் தொகுதியாக உள்ளது.
மோடிக்கு எதிராக போட்டி: இந்த நிலையில், தான் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட போவதாக பிரபல நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான ஷ்யாம் ரங்கீலா அறிவித்துள்ளார். 28 வயதாகும் ஷ்யாம் ரங்கீலா அரசியல் தலைவர்களை போல மிமிக்ரி, நையாண்டி செய்து பலரது கவனத்தையும் பெற்றார். கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஷ்யாம் ரங்கீலா, அதன்பிறகு பாஜகவை எதிர்த்து நையாண்டி வீடியோக்களை போட்டு வந்தார்.
எதற்காக போட்டி?: ஒரு கட்டத்தில் ஷ்யாம் ரங்கீலாவின் நிகழ்ச்சிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ராஜஸ்தான் ஆம் ஆத்மியில் தன்னை இணைத்துக் கொண்ட ஷ்யாம் ரங்கீலா, தீவிரமாக அரசியல் களத்தில் இயங்கி வருகிறார். இந்த நிலையில் தான், நாடாளுமன்ற தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப்போவதாக ஷ்யாம் ரங்கீலா அறிவித்துள்ளார்.
நிலைமை மாறிவிட்டது: இது தொடர்பாக ஷ்யாம் ரங்கீலா கூறியதாவது:- சூரத் மற்றும் இந்தூர் போல் எதிர்த்து போட்டியிட வேட்பாளர்கள் இல்லாமல் பிரதமர் மோடி வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதற்காக அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக களமிறங்க உள்ளேன். 2014ல் பிரதமர் மோடியின் சீடனாக இருந்தேன். அப்போது, பிரதமருக்கு ஆதரவாகவும், ராகுல், கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் மிமிக்ரி வீடியோக்களையும் பதிவிட்டு வந்தேன்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நிலைமை தலைமைகீழாக மாறிவிட்டது. எனவே, இனி லோக்சபா தேர்தல்களில் பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன். வாராணசி சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்" என்றார்.












Click it and Unblock the Notifications