சிபிஐ - வருமானவரித் துறை இடையே மீண்டும் மோதல்!! ஹவாலா வழக்கில் முன்னாள் சிபிஐ இயக்குநர் ஏ.பி.சிங்?

பிரபல இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி. அவர் சில மாதங்களுக்கு முன்பு லண்டன் சென்ற போது நட்சத்திர ஹோட்டல் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது லட்சக்கணக்கான பிரிட்டன் பவுண்டுகளை மொத்தமாக கொடுத்து ஹோட்டல் பேரத்தை முடித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மொயின் குரேஷியின் நடவடிக்கைகள் குறித்து இண்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு இங்கிலாந்து தகவல் அனுப்பியது. இதனால் மொயின் குரேஷியின் நடமாட்டங்கள் கண்காணிப்புக்குள்ளாகின.
உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் குரேஷிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. அவர் துபை, லண்டன் நகரங்களுக்கும் அடிக்கடி சென்று வந்துள்ளதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இறைச்சி ஏற்றுமதியாளர் என்ற பெயரில் ஹவாலா மோசடியில் அவர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகம் வலுத்தது.
இந்த நிலையில் டெல்லியில் குரோஷியின் அலுவலகம் அமைந்துள்ள இடமானது முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங்குக்கு சொந்தமானது என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அத்துடன் உத்தர்காண்ட் மாநிலத்தின் குரோஷியை தலைவராக கொண்ட கல்வி குழுமத்தின் துணைத் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங் இருந்ததும் தெரியவந்தது.
மேலும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடர்புடைய நிறுவனத்துக்கும் குரோஷிக்கும் தொடர்பிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குரோஷி, ஏ.பி.சிங் மற்றும் தற்போதைய சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஆகியோரது தொலைபேசி உரையாடல்களை வருமான வரித்துறை ஒட்டுகேட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் அண்மையில் ஏ.பி.சிங்குக்கு வருமான வரித்துறை நோட்டீஸும் அனுப்பியிருந்தது. ஆனால் சிபிஐ தரப்பினரோ இது வருமான வரித்துறையினரின் பழிவாங்கல் நடவடிக்கை என குற்றம்சாட்டுகின்றனர்.
பழிக்கு பழியா?
ஏனெனில் ஏற்கெனவே ஸ்டாக்குரு பங்குச் சந்தை மோசடி வழக்கில் வருமான வரித்துறை உதவி ஆணையராக இருந்த யோகேந்தர் மிட்டலை சிபிஐ கைது செய்திருந்தது.
அதேபோல் தயாநிதி மாறன் தொடர்புடைய ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலும் ஸ்டாக்குரு விவகாரத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இப்படி ஏற்கனவே சில வழக்குகளில் வருமான வரித்துறை அதிகாரிகளை சிபிஐ சேர்த்துவிட்டதாலே அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இப்போது வருமானவரித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் தொலைபேசி உரையாடல் விவரங்களை ஊடகங்களுக்கு எப்படி வருமான வரித்துறை கொடுக்கலாம்? என்பதும் சிபிஐ தரப்பினரின் கேள்வி.
இதனிடையே சிபிஐ முன்னாள் இயக்குநரான ஏ.பி.சிங் பதவி காலத்தில்தான் பிரதமர் மோடியின் வலது கரமான அமித்ஷாவை துளசிராம் பிரஜாபதி என்கவுன்ட்டர் சேர்க்கப்பட்டார் என்பதால் அதற்கு பழிவாங்கவே ஹவாலா மோசடி வழக்கில் சிங் சேர்க்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
