For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டில் தொடரும் முதியோர் கொலைகள்: முதியோர் நிலை என்ன? அரசு செய்வது என்ன?

By BBC News தமிழ்
|
முதியோர் கொலைகள்
Getty Images
முதியோர் கொலைகள்

திருநெல்வேலியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரண்டு பெண்கள் தங்களது பாட்டியை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சேலத்தில் முதிய தம்பதியை அவர்களின் பேரன் கோபத்தில் வீட்டில் வைத்துப் பூட்டி தீ வைத்து கொளுத்தியதாக வெளியான புகார் தொடர்பாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய முதிய தம்பதியை அவர்களின் கார் ஓட்டுநர் பணம், நகைக்காக திட்டமிட்டு கொலை செய்து புதைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாகவும் புலன்விசாரணை நடந்துவருகிறது.

தமிழ்நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், முதியவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். முதியவர்களின்பாதுகாப்பு விவகாரங்களில் அரசு தீவிரமாக செயல்படவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. முதியோருக்கு சட்டரீதியாக கிடைக்கவேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறும் அரசுத் தரப்பு, விரைவில் முதியோர் பாதுகாப்பு கொள்கை இறுதி செய்யப்பட்டு முதியோருக்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று கூறுகிறது.

கௌரவம் பெற்றுத்தந்த முதியோர்உதவித்தொகை

கடலூரைச் சேர்ந்த 85 வயது கன்னியம்மாள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை பெற்றுவருகிறார். அரசு அளிக்கும் ரூ.1,000 உதவித்தொகை தனக்கு குடும்பத்தில் ஒரு கௌரவத்தை தருவதாக உணர்கிறார்.

''என்னுடைய மருந்துச் செலவை நானே பார்த்துக்கொள்ள முடியும். மகன்களிடம் கேட்கத்தேவையில்லை. என் பேர குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கித் தருவேன். என்னிடம் காசு இருப்பது எனக்கு மரியாதையைத் தருகிறது. உதவித்தொகை கிடைக்காத ஏழை முதியவர்களின் நிலை திண்டாட்டம்தான்.

பல குடும்பங்களில் உதவித்தொகை இருப்பதால்தான் வயதானவர்களை வீட்டில் வைத்திருக்கிறார்கள். படுக்கையில் இருக்கும் முதியவர்களின் நிலை மிகவும் மோசம். ஒரு சமயம் வரை குடும்பத்தினர் கவனிக்கிறார்கள், பின்னர் கவனிக்கமுடியவில்லை என ஒதுக்கிவிடுகிறார்கள், தொலைதூர கோயில்களில் விட்டுவிடுகிறார்கள் அல்லது கொலைகூட செய்கிறார்கள்,'' என்கிறார் கன்னியம்மாள்.

முதியோர் கொலைகள்
Getty Images
முதியோர் கொலைகள்

கன்னியம்மாளை போல ஒரு சில முதியவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகை அனைத்து முதியவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கை நெடுநாட்களாக இருந்துவருகிறது. பணம் இல்லாத முதியவர்கள், உடல்நலனும் குன்றிப்போனால் அவர்களின் நிலை மோசமாகிவிடுகிறது.

வெளிநாட்டு நிறுவனங்கள் வரும்வரை காத்திருப்போமா?

கிராமம் மற்றும் நகர்ப்புறம் என்ற வேறுபாடில்லாமல், முதியோரை கவனிப்பது என்பது குடும்ப பிரச்சனையாக இல்லாமல் சமூகப் பிரச்சனையாக உருமாறி நெடுநாட்கள் ஆகிவிட்டது என்கிறார் ஹெல்ப் ஏஜ் தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த முதியோர் நல ஆர்வலர் இளங்கோ ராஜரத்தினம்.

''பணம் படைத்த குடும்பங்கள் தனியார் நிறுவனங்கள் மூலமாக உதவியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். சில இடங்களில் உதவியாளர்களாக இருப்பவர்களே முதியவர்களை மோசமாக நடத்தும் சம்பவங்களும் நடக்கின்றன. இதைவிட, ஏழை குடும்பங்களில் முதியவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பெரும்பாலும்பெண்கள் தலையில் சுமத்தப்படுகிறது,''என்கிறார்.

தமிழ்நாடு முழுவதும் நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் அரசு மருத்துவமனைகளில் வந்து சேர்ந்தால் என்ன ஆகும்? என்று யோசித்துப் பாருங்கள் என்கிறார் இளங்கோ. ''அரசாங்கத்தின் வேலையை ஒவ்வொரு குடும்பங்களும் செய்துவருகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

வளர்ந்த நாடுகளில் அரசாங்கம் முதியவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்கிறது. குறைந்தபட்சம் நம் பகுதிகளில், முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் உதவியாளர் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் உளச்சல்களை போக்க முன்னெடுப்புகளை செய்யவேண்டிய நேரத்தில் இருக்கிறோம். இதனைத்தான் இந்த கொலை சம்பவங்கள் உணர்த்துகின்றன. முதியவர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணிதான் இவை,''என்கிறார் இளங்கோ.

மேலும், தற்போது, டேக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து துறையில் அரசின் தலையீடு இல்லாமல் போனதால் எப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு செயலியை வடிவமைத்து லாபம் எடுக்கிறார்களோ, முதியவர் நலனில் அவ்வாறான வெளிநாட்டு முதலீடு வருவதற்கு வெகுநாட்கள் எடுக்காது என்கிறார்.

old age
Getty Images
old age

''தற்போது தனியார் நிறுவனங்கள் பலவும் உதவியாளர்களை பணிக்கு எடுக்கின்றன. படுக்கையில் உள்ள முதியவர்களளை கவனிக்கும் உதவியாளருக்கு ரூ.25,000 குறைந்தபட்ச சம்பளமாக தரப்படுகிறது. நடக்ககூடிய முதியவர்களை கவனிக்கும் உதவியாளர்களுக்கு ரூ.20,000 தரப்படுகிறது. இதைத் தவிர, டிமென்ஷியா, அல்செய்மர்ஸ் உள்ளிட்ட மறதி பிரச்னைகளுடன் இருக்கும் முதியவர்களின் உதவியாளர்களுக்கு ரூ.30,000 வரை தர வசதியுள்ளவர்கள் தயாராக இருக்கிறார்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் வரும்வரை நாம் காத்திருப்போமா?''என்கிறார்.

60 வயதுக்கு பிறகு இன்சூரன்ஸ்

தமிழ்நாடு அரசு முதியவர்களின் நலன் குறித்த வரைவு கொள்கை ஒன்றை உருவாகியுள்ளது. அது திட்டங்களாக இன்னும் மாற்றப்படவில்லை. அந்த வரைவு கொள்கை தயாரிப்பில் ஈடுபட்ட நிபுணர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசினார். அவரது விருப்பத்தின்பெயரில் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. ''முதியவர் நலனில் முக்கியமானது அவர்களின் ஆரோக்கியம்தான். அவர்களின் உடல் நல பிரச்சனைகளுக்கு ஆகும் செலவுக்கு பல குடும்பங்கள் அஞ்சுகின்றன.

தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பலவும் முதியவர்களுக்கு எந்த சலுகையும் கொடுப்பதில்லை. செயல்பாட்டில் இருக்கும் அரசாங்கத்தின் இன்சூரன்ஸ் திட்டத்தில் கூட முதியவர்கள் கொண்டுவரப்படவில்லை. இந்த வரைவு கொள்கையில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்சூரன்ஸ் அளிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளோம். உடல் உபாதைகள் மற்றும் மறதி தொடர்பான வியாதிகள் பற்றியும் கணக்கில் கொண்டு இன்சூரன்ஸ் திட்டம் கொண்டவர வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்,''என்கிறார்.

''தனியாக வாழும் முதியோர்களுக்கு ரேஷன் கார்ட் கொடுப்பது, வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கு பராமரிப்பு செய்வது எப்படி என்பதை வரைவு கொள்கையில் உள்ளடக்கி இருக்கிறோம். பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இன்னும் வரைவு கொள்கையாவே உள்ளது. விரைவில் இது செயலாக்கம் பெறவேண்டும். அதனை செய்தால், தமிழ்நாடு முதியோர் நலனில் முன்னோடியாக திகழும்,''என்கிறார் அவர்.

அரசு தரப்பின் பதில்

முதியோர் கொலைகள்
Getty Images
முதியோர் கொலைகள்

முதியவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வரைவுக் கொள்கை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 17 அரசுத் துறைகளின் ஆலோசனைகளை பெற்று இறுதி வடிவம் பெறும் என்கிறார் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர். ''முதியவர்கள் மீதான தாக்குதல், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. வயோதிகர்கள் ஆரோகியத்தை மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு சுகாதார வசதிகளில் முன்னுரிமை கொடுப்பது பற்றி நிறைய விவாதித்துள்ளோம். விரைவில் வரைவுக் கொள்கை பற்றி தலைமை செயலாளருடன் சந்திப்பு நடைபெறும்,''என்கிறார் ஷம்பு கல்லோலிகர். மூத்த குடிமக்களுக்கான உரிமைகள் தொடர்பான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தும் வேலைகளை தீவிரமாக செய்கிறோம் என்கிறார் ஷம்பு கல்லோலிகர்.

https://www.youtube.com/watch?v=crYffNN5GDc

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
continuous murder of old age people in tamil nadu and What is the government going to do
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X