For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அனைவருக்குமான வளர்ச்சியே பாஜக அரசின் லட்சியம்.. கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு

Google Oneindia Tamil News

கொச்சி: அனைவருக்குமான வளர்ச்சியே பாஜக அரசின் லட்சியம் என்று கேரளாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி கேரளா வந்துள்ளார். கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் மாலை 4.30 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

கொச்சி விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜகவினர் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து அங்கிருந்து கார் மூலமாக நெடும்பசேரிக்கு சென்ற மோடி, அங்கு பாஜக ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

பூலித்தேவன் பிறந்த தினம்.. ”ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர்” பிரதமர் மோடி தமிழில் ட்வீட்! பூலித்தேவன் பிறந்த தினம்.. ”ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டவர்” பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

 மக்களுக்கான அரசு

மக்களுக்கான அரசு

தனது பேச்சை மலையாளத்தில் தொடங்கிய பிரதமர் மோடி, "ஓணம் பண்டிகை காலத்தில் கேரளா வந்திருப்பது உள்ளப்படியே மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அன்பு நிறைந்த கேரள மக்களுக்கு எனது மனம் கனிந்த ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அதன் பிறகு மோடி ஆங்கிலத்தில் பேசினார். அப்போது அவர், "இந்தியாவை ஒரு வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றும் முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். கடுமையான உழைப்பாளிகள் இருக்கும் மாநிலமான கேரளா, இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளிக்க வேண்டும். அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சியே லட்சியமாக கொண்டு மத்தியில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொருவரின் உழைப்பையும், நம்பிக்கையையும் அச்சாரமாக கொண்டு பாஜக அரசு இயங்கி வருகிறது. இது மக்களுக்கான அரசு. இது உங்களுக்கான அரசு" எனப் பேசினார்.

இந்த பொதுக்கூட்டம் முடிவடைந்ததும் மாலை 6 மணியளவில் ஆதி சங்கராச்சாரியார் பிறந்த இடமான கல்லடி கிராமத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, ஆதி சங்கர ஜென்மபூமியை பார்வையிடுகிறார்.

 போர்க்கப்பலை அர்ப்பணிக்கும் பிரதமர்

போர்க்கப்பலை அர்ப்பணிக்கும் பிரதமர்


அதன் பிறகு, நாளை காலை 9.30 மணிக்கு கொச்சி கடற்படைத் தளத்துக்கு செல்லும் மோடி, அங்கு முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, ரூ,1,950 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள கொச்சி மெட்ரோ ரயில்வேயின் இரண்டாம் கட்ட திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதையடுத்து, குருப்பந்தரா - கோட்டயம் - சிங்கவனம் ரயில்வே வழித்தடத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, எர்ணாகுளம் சந்திப்பு, எர்ணாகுளம் நகர் மற்றும் கொல்லம் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்புத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

 மங்களூர் பயணம்

மங்களூர் பயணம்

கேரளாவில் இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் மங்களூருக்கு செல்கிறார். அங்கு மங்களூர் துறைமுகத்தில் சரக்கு மற்றும் கண்டெய்னர்களை கையாளும் தளத்துக்கு அவர் அடிக்கல் நாட்டவுள்ளார். இவ்வாறு ரூ.3,800 கோடி மதிப்பிலான திட்டங்களை மங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கவுள்ளார். திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு கோல்ட்ஃபின்ச் மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொள்வார்கள் என கர்நாடகா பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்தா சோனாவல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.

 'ஆபரேஷன் சவுத்'

'ஆபரேஷன் சவுத்'


தென் மாநிலங்களை குறிவைத்து பாஜக சமீபகாலமாக காய்களை நகர்த்தி வருகிறது. 'ஆபரேஷன் சவுத்' என்ற பெயரில் இதற்கான திட்டத்தை பாஜக மேற்கொண்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி மேற்பார்வையில் இந்த திட்டம் செயல்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பது; அந்தந்த மாநிலங்களின் முன்னணி நடிகர்களை பாஜகவில் சேர்ப்பது என்பன போன்ற உத்திகள் ஆபரேஷன் சவுத்தில் கையாளப்படும் எனத் தெரிகிறது. இதன் ஒருபகுதியாகவே, தெலங்கானா மற்றும் ஆந்திராவுக்கு அமித் ஷா அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தெலங்கானாவில் இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆரை அவர் சந்தித்து பேசினார். ஜூனியர் என்டிஆரை முன்னிலைப்படுத்தி தெலங்கானாவில் பாஜகவை வலிமைப்படுத்த அமித் ஷா திட்டமிட்டிருப்பதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் இரண்டு நாள் சுற்றுப்பயணமும் ஆபரேஷன் சவுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

English summary
PM Narendra Modi arrived Kerala today evening and he says Development For All Is Principle Of BJP Government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X