இந்திரா காந்தியை படுகொலை செய்தவரின் மகன் லோக்சபா தேர்தலில் போட்டி! பஞ்சாபில் அனல் பறக்கும் களம்
சண்டிகர்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்தவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன், வரும் லோக்சபா தேர்தலில் பஞ்சாபிலிருந்து போட்டியிடுகிறார்.
நாடு முழுவதும் 18வது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 16ஆம் தேதி தேர்தல் தேதியை அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 22 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

பஞ்சாப் மாநிலத்தை பொறுத்த அளவில், மொத்தமுள்ள 13 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமக ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஃபரித்கோட் தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் ஏற்கெனவே, ஃபதேகர் சாஹிப் மற்றும் பதிண்டா தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார். ஆனால், எதிலும் வெற்றிப்பெறவில்லை.
இந்திரா காந்தியை கொன்றதற்காக இவரது தந்தை குறித்து வெளியில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டாலும், சரப்ஜித் சிங் கல்சாவின் குடும்பம் பாரம்பரிய அரசியல் குடும்பமாக உள்ளூரில் அறியப்பட்டிருக்கிறது. இவரது தாயார் பிமல் கவுர் மற்றும் அவரது தாத்தா சுச்சா சிங் ஆகியோர் கடந்த 1989ல் ரோபார் மற்றும் பதிண்டாவில் இருந்து எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். எனவே, இந்த பின்னணியில் சரப்ஜித் சிங் தற்போது தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
ஃபரித்கோட் என்பது தனித்தொகுதியாகும். இங்கு ஆம் ஆத்மி vs காங்கிரஸ் vs பாஜக vs சிரோன்மணி அகாளி தளம் vs சிரோன்மணி அகாளி தளம் அமிர்தசரஸ் என 5 முணை போட்டி நிலவுகிறது. எனவே சுயேட்சையாக களமிறங்கும் சரப்ஜித் சிங்குக்கு வெற்றி வாய்ப்பு எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
டெல்லியின் முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது பஞ்சாபில் புகைச்சலை உண்டாக்கியிருப்பதால், இந்த முறை ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள்தான் அங்கு வெற்றி வாகையை சூடுவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழலில் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றவர்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் தேர்தலில் களமிறங்கி இருப்பது கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications