For Daily Alerts
குட்டை பாவாடை, காதல் மிரட்டல், டென்னிஸ் சங்கத்துடன் மோதல்... "சானியா மிர்சாவின் சர்ச்சைகள்"
ஹைதராபாத்: பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை தெலுங்கானா தூதராக அறிவித்து மட்டுமே சர்ச்சையாகவில்லை.. இதுவரை ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் சானியா.
தெலுங்கானா புதிய மாநிலத்தின் தூதராக சானியா மிர்சா அறிவிக்கப்பட்டார். இதற்கு அம்மாநில பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக்கை திருமணம் செய்து அந்நாட்டு மருமகளாகிவிட்டார் என்பதாலேயே அவரை தெலுங்கானா தூதரக நியமிக்கக் கூடாது என்று பாஜக கூறியது.

'சானியாவின் சர்ச்சைகள்'
இப்படி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது ஒன்றும் சானியா மிர்சாவுக்கு புதியது அல்ல.. இதுவரை அவர் சிக்கிய சர்ச்சைகளின் தொகுப்பு:
- சானியா மிர்சா இஸ்லாமியர். அவர் டென்னிஸ் விளையாடும் போது அணியும் குட்டை பாவாடை இஸ்லாத்துக்கு எதிரானது என்று குரல் கிளம்பியது. இஸ்லாம் பெண்களுக்கு டென்னிஸ் விளையாட்டு ஏற்புடையதாக இருக்காது என்றும் கூறப்பட்டது.
- 2006ஆம் ஆண்டு சானியா மிர்சா ஷூ விளம்பரம் ஒன்றில் நடித்தார். அதில் கையில் கிடாரை பிடித்த போஸ் கொடுக்க அவரது கால் வைத்துள்ள இடத்தில் இந்திய தேசியக் கொடியின் மூவண்ணம் இடம்பெற்றிருந்தது. இதனால் தேசியக் கொடியை சானியா மிர்சா அவமதித்தார் என்று சர்ச்சை வெடித்து வழக்கும் போடப்பட்டது.
- ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவருக்கு மானிய விலையிலான அரிசி, சர்க்கரை வாங்குவதற்கு வெள்ளை நிற ரேசன் கார்டு வழங்கப்பட்டது. அந்த ரேசன் கார்டில் சானியா மிர்சாவின் பெயர் ஒட்டப்பட்டு வழங்கப்பட்டிருந்தது ஒரு சர்ச்சையை கிளப்பியது.
- சானியா மிர்சாவுக்கு 2009ஆம் ஆண்டு முகமது ஷோரப் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. அந்த நிலையில் முகமது அஷ்ரப் என்ற இளைஞர் சானியாவின் வீட்டுக்குப் போய் தான் சானியாவை காதலிக்கிறேன் என்று கலாட்டா செய்தார். பின்னர் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்து வர சானியாவின் தந்தை போலீசுக்கு போய் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
- அதே நேரத்தில் 2010ஆம் ஆண்டு திடீரென முகமது ஷோரப்புடன் நடைபெற இருந்த சானியா மிர்சாவின் திருமணம் ரத்தானது. ஆனால் இந்த திருமணம் ஏன் ரத்தானது என்பது பற்றியெல்லாம் விரிவாக சானியா அப்போது தெரிவிக்கவில்லை.
- 2012ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது ஆண்கள் இரட்டையரில் பூபதி, போபண்ணா ஆகியோர் லியாண்டர் பயாஸுடன் இணைந்து விளையாட மறுத்தனர். இதனால் ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் போட்டியில் பயஸுடன் இணைந்து சானியா விளையாட டென்னிஸ் சங்கம் உத்தரவிட்டது. இதில் டென்னிஸ் சங்கத்தை கடுமையாக சாடினார் சானியா.
- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்து கொள்ள அது ஒரு பரபரப்பாக பேசப்பட்டது.
- இறுதியாக தெலுங்கானா தூதராக சானியா மிர்சா நியமிக்கப்பட இப்போது பாரதிய ஜனதாவின் தெலுங்கானா தலைவர் லக்ஸ்மன் சானியாவை பாகிஸ்தானின் மருமகள் என்று முத்திரை குத்தி சர்ச்சை சங்கமத்தில் இணைத்துவிட்டார்.
- இதற்கு பதிலளிக்கும் வகையில் சாகும் வரையில் நான் இந்தியராகவே சாவேன் என்று பதிலடி கொடுத்து அனைவரது எதிர்ப்பையும் சமாளித்தார் சானியா மிர்சா