'இங்க இருந்த படிக்கட்டு எங்கடா'.. அரசு பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு.. பயணிகள் திகில் பயணம்!
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இன்று காலை பொறையார் நோக்கி அரசு பேருந்து(வண்டி எண்: 27ஏ) ஒன்று புறப்பட்டு சென்றது. காலை நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது.

உடைந்து விழுந்த படிக்கட்டு
50 பயணிகள் செல்ல வேண்டிய பேருந்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிற்க கூட இடமில்லாமல் நெருக்கடியுடன் பயணம் செய்தனர். உள்ளே இடமில்லாததால் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். மயிலாடுதுறை பெரிய மாரியம்மன் கோயில் அருகே தரங்கம்பாடி சாலையில் சென்றபோது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென்று உடைந்து விழுந்தது.

மாணவர்கள் உயிர் பிழைத்தனர்
உடைந்து விழுந்த படிக்கட்டில் சில மாணவர்கள் நின்று பயணம் செய்து கொண்டிருந்தார். நல்லவேளையாக அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர்கள் கீழே இறங்கி எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். ஆனால் பேருந்து டிரைவருக்கு படிக்கட்டு உடைந்தது தெரியவில்லை. இதனால் அவர் தொடர்ந்து பேருந்தை ஒட்டிச்சென்றபோது மாணவர்கள் கூச்சலிட்டு பேருந்தை நிறுத்தினார்கள்.

அதிக பேருந்து வசதி இல்லை
கண்டக்டர் இறங்கி சென்று நடுரோட்டில் உடைந்து கிடந்த படிக்கட்டை எடுத்து பேருந்தில் போட்டவுடன் மீண்டும் பேருந்து புறப்பட்டு சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த பேருந்தில் அச்சத்துடனேயே பயணம் செய்தனர். காலை நேரத்தில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் அவர்களுக்கு ஏற்றபடி அதிக பேருந்து வசதி இல்லை.

மயிலாடுதுறை மட்டுமா?
இதனால் அவர்கள் வேறு வழியின்றி பேருந்தில் தொங்கியபடியே ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதால் அடிக்கடி கீழே விழுந்து விபத்துகளும் நடக்கிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக பேருந்தை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் சில மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை காலத்தில் பேருந்துக்குள் குடை பிடித்து செல்ல வேண்டிய நிலையில்தான் பேருந்துகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications