24 ஆண்டு ஆட்சி! குஜராத் சட்டசபை தேர்தலில் மீண்டும் வெல்ல முடியுமா பாஜக? மோடி முன்பாக 10 சவால்கள்
காந்தி நகர்: நீண்ட இழுபறிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்யும் பாஜகவின் முன்பு 10 முக்கிய சவால்கள் உள்ளன. இதனை கடந்து பாஜக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு பூபேந்திர படேல் முதல்வராக உள்ளார். தற்போதைய குஜராத் சட்டசபையின் காலம் என்பது 2023 பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் தேதியை அறிவித்தார்.

குஜராத் சட்டசபை தேர்தல்
அதன்படி குஜராத் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியும், 2வது கட்ட தேர்தல் டிசம்பர் மாதம் 5 ம் தேதியும் நடக்கும். மொத்தம் 182 தொகுதிகள் உள்ள நிலையில் 89 தொகுதிகளில் முதல் கட்டமாகவும், 93 தொகுதிகளுக்கு 2ம் கட்டமாகவும் ஓட்டுப்பதிவு நடக்கும். முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ம் தேதியும் தொடங்கும். ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடக்கும். அன்றைய தினம் இமாச்சல பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் ஒன்றாக வெளியாகும் என்றார்.

மும்முனை போட்டி
இதனால் குஜராத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோரின் சொந்தமாநிலம் என்பதால் பாஜகவை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். அதேபோல் மீண்டும் குஜராத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. அதோடு பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்த மகிழ்ச்சியில் குஜராத் தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் குதித்துள்ளது. ஏற்கனவே பலகட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்த ஆம்ஆத்மி கட்சி தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை இன்று அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.

பாஜகவுக்கு உள்ள 10 நெருக்கடி
இந்நிலையில் தான் குஜராத்தில் ஆட்சியை மீண்டும் ஆட்சியை பிடிப்பது என்பது பாஜகவுக்கு அவ்வளவு எளிதானது இல்லை என கூறப்படுகிறது. கடந்த 24 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. 1998 முதல் 2022 வரை தொடர்ந்து பாஜகவே ஆட்சியில் உள்ளது. இதில் அதிகபட்சமாக பிரதமர் நரேந்திர மோடி 2001 முதல் 2014 வரை முதல்வராக இருந்தார். குஜராத்தில் பாஜகவுக்கு உள்ள சவால்கள் என்ன என்பது பற்றிய 10 முக்கிய விஷயங்கள் வருமாறு:

1-3 விஷயம் என்ன?
முதலாவதாக பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகளை குஜராத் அரசு நன்னடத்தை அடிப்படையில் சிறையில் இருந்து விடுவித்தது. இது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குஜராத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இரண்டாவதாக 1998 முதல் தற்போது வரை பாஜக தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சி செய்து வருகிறது. இதனால் இயல்பாக மக்கள் மத்தியில் பாஜக மீது எதிர்ப்பு அலை வீசலாம் என கூறப்படுகிறது. மூன்றாவதாக நாட்டில் பணவீக்கம், வேலையில்லா திடண்டாட்டம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கலாம் என கூறப்படுகிறது.

4 வயது பாயிண்ட் என்ன?
4வது பாயிண்டாக மோர்பி பால விபத்து உள்ளது. அக்டோபர் 30ம் தேதி மோர்பி நகரில் புனரமைப்புக்கு பிறகு திறக்கப்பட்ட 4 நாளில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பரிதாபமாக இறந்தனர். இதில் மாநில அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். கடிகார நிறுவனத்துக்கு கேபிள் பாலம் புனரமைப்பு பணியை ஒப்பந்தம் செய்ததே விபத்துக்கு காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர். இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

5, 6, 7 வது காரணங்கள் என்ன?
5வதாக அரசு பணிகளுக்கான தேர்வின்போது அடிக்கடி கேள்வித்தாள் கசிவதும், ஆட்சேர்ப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதும் பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனால் இளைஞர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி வரும் நிலையில் இது வரும் தேர்தலில் எதிரொலிக்கலாம். 6வதாக மாநிலத்தில் தொலைதூர கிராமங்களில் இன்னும் கூட அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. பள்ளிக்கூடம், சாலை வசதிகள், சுகாதார வசதிகள் இல்லாமல் பல கிராமங்கள் உள்ள நிலையில் ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. இதுவும் பாஜகவுக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது. 7வதாக விவசாயிகள் பிரச்சனை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பெய்த மழையால் பலஏக்கர் பயிர்கள் சேதமடைந்தன. இதற்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதுவும் சட்டசபை தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

8, 9, 10வது காரணங்கள் என்ன?
8வதாக குஜராத் என்பது ஒரு காலத்தில் தரமான சாலைகளுக்கு பெயர் பெற்றது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. பழைய சாலைகளும் புனரமைக்கப்படவில்லை. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 9வது மின்கட்டண பிரச்சனையை கூறலாம். இந்தியாவில் அதிக மின்கட்டணம் வசூலிக்கும் மாநிலமாக குஜராத் உள்ளது. இதற்கிடையே தான் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனால் மக்கள் பாஜகவை தவிர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 10வதாக மாநிலத்தில் பல்வேறு திட்டங்களுக்காக விவசாயிகள் உள்பட பலரது நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அகமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டம், வதோதரா - மும்பை இடையேயான விரைவுச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு மனநிலை என்பது பாஜகவுக்கு குஜராத்தில் சவாலை ஏற்படுத்தலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் மோடியின் செல்வாக்கு
இருப்பினும் கூட பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உள்ளனர். பிரதமர் மோடி 2001 முதல் 2014 வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் முதல்வராக இருந்தார். அதன்பிறகு தற்பாது வரை பிரதமராக உள்ளார். இன்னும் கூட குஜராத்தில் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளர்கள் உள்ளனர். மோடிக்கு பிறகு 3 முதல்வர்கள் வந்தாலும் கூட நரேந்திர மோடிக்கு என குஜராத்தில் தனி செல்வாக்கு உள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

அமித்ஷாவின் வியூகம்
அதோடு அரசியல் சாணக்கியர் என பெயர் பெற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் தேர்தலில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 3 நாட்கள் தொடர்ந்து குஜராத்தில் தங்கும் அமித்ஷா வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகத்தை மேற்கொண்டு வருகிறார். குஜராத் அவரது சொந்த மாநிலம் என்பதால் மக்களின் மனநிலை, தேர்தலில் ஓட்டுக்கை கவரும் வித்தைகளை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார். இது பாஜகவுக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. அதோடு தற்போது குஜராத்தில் ஆம்ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி என மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம்ஆத்மி என்பது காங்கிரஸ் கட்சியின் ஓட்டுக்களை கவரும் எனவும் அது நிச்சயம் பாஜகவின் வெற்றியை உறுதி செய்யலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மோடி-அமித்ஷாவுக்கு அக்னிபரீட்சை
இப்படியாக குஜராத் களநிலவரம் இருந்தாலும் கூட இது நிச்சயம் பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமித்ஷாவுக்கு அக்னிபரீட்சையாக தான் இருக்கும். ஏனென்றால் குஜராத் தேர்தல் முடிவுக்கு பிறகு ஒன்றரை ஆண்டுகளில் 2024 நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது. இதனால் குஜராத் தேர்தல் விவகாரம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம். அதாவது குஜராத்தில் பாஜக ஆட்சியை இழந்தால் அது தேசிய அளவில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாலம். பிரதமர் மோடி மீதான அதிருப்தியால் தான் குஜராத்தில் பாஜக ஆட்சியை இழந்தது என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்வதோடு, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த திட்டமிடலாம் என்பதால் இது நிச்சயம் பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமித்ஷாவுக்கு அக்னிபரீட்சையாக தான் உள்ளது. இருப்பினும் இத்தகைய சவால்களை தாண்டி மீண்டும் குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்குமா? இல்லையா? என்பதை அறிய தேர்தல் முடிவு வெளியாக உள்ள டிசம்பர் 8 ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications