For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முஸ்லிம்கள் பலதாரமணம் செய்வதை தடுக்க பொது சிவில் சட்டம் அவசியம்: குஜராத் ஹைகோர்ட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

காந்திநகர்: இந்தியாவிலுள்ள, இஸ்லாமிய சமூகங்களிடையே நிலவும் ஆண்கள் பலதார மணம் செய்யும் நடைமுறையை ஒழித்துவிட்டு, அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டியது அவசியம் என்று குஜராத் ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த இஸ்லாமிய நபர் ஒருவர் தனது முதல் மனைவியின் சம்மதம் இன்றி இரண்டாவது மனைவியாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து முதல் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நேற்று நீதிபதி பர்டிவாலா தீர்ப்பளித்தார்.

Gujarat HC : Stop Muslim polygamy

நீதிபதி தனது தீர்ப்பில் கூறியதாவது: இந்திய தண்டனை சட்டம் 494ன் படி, முதல் மனைவி ஒப்புதல் இன்றி, இரண்டாவது திருமணம் செய்வது பெரிய குற்றம். அதேநேரம், இஸ்லாமிய பர்சனல் சட்டப்படி, அதில் தவறு கிடையாது. அந்த ஆணுக்கு தண்டனை வழங்க முடியாது. எனவே, முதல் மனைவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

அதேநேரம், சில பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறேன். நவீன சிந்தனைகள் ஊற்றெடுக்கும் இந்த காலகட்டத்தில், ஆண்கள் பலதார மணம் செய்துகொள்ளும் போக்கு தடை செய்யப்பட வேண்டியது. எனவே, அனைத்து மத பிரிவினருக்கும் பொது குடிமை சட்டம் (uniform civil code) கொண்டுவரப்பட வேண்டியது அவசியம்.

மனைவியின் சம்மதம் இன்றியே, இன்னொரு பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்ய அனுமதிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கே எதிரானது. இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 4, ஆர்டிகிள் 44ன்கீழ், நாடு முழுவதிலுமுள்ள மக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டம் அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.

நாம் இந்த சட்டத்தை உதாசீனப்படுத்தி பல தார மணத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை. ஒரு நாட்டின் சட்டப்படி குற்றம் என்று வரையறுக்கப்பட்ட ஒரு செயல், ஒரு சமூகத்தினரால் செய்யப்படுவது கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.

திருக்குர்ஆனும் கூட, சுய நலத்துக்காக பலதார மணம் செய்ய தடை விதித்துள்ளது. அநாதை குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட சில காரணங்களுக்காகவே ஒரு ஆண் பலதார மணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. சுய நலத்துக்காகவும், உடல் இச்சைக்காகவும் பலதார மணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இப்போதெல்லாம் பெரும்பாலும், சுய நலத்துக்காகவே பலதார மணம் செய்யப்படுகிறது.

மவுல்விகளும், இஸ்லாமியர்களும், குர்ஆனுக்கு விரோதமாக நடந்துகொள்ள கூடாது என்று நினைத்தால், ஒரு தார மணத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இந்து மத சமூகங்களிடையே, பலதாரமணம் குற்றச்செயலாக மாற்றப்பட்டது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம். ஆனால், அப்போது முஸ்லிம்கள் பின்தங்கியிருந்ததால் அவர்களுக்கு அதில் விலக்கு தரப்பட்டது. ஆனால் மாறியுள்ள இந்த சமூக பொருளாதார சூழ்நிலையில், முஸ்லிம்கள் பலதாரமண கொள்கையை விட்டுவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

English summary
The Gujarat High Court has said that the Quran was being misinterpreted by Muslim men to have more than one wife and the provision of polygamy was being misused by them for "selfish reasons". Justice J B Pardiwala made these observations while pronouncing the order related to section 494 of IPC, which deals with punishment for having more than one wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X