குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடிய விவசாயிகள்! தடியடி நடத்திய ஹரியானா பாஜக அரசு!
சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஒரு குவிண்டால் விதைகளை அரசு ரூ.6,400க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. ஆனால் அரசு இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் வந்திருந்தது.
இந்நிலையில், கோரிக்கை தொடர்பாக பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இதை பரிசீலிப்பதாக அரசு கூறியிருந்தது. ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனையடுத்து ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று, ஹரியானவையும், பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர். இது மாநிலம் முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மட்டுமல்லாது கடுமையான போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது. இருப்பினும் இது தொடர்பாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல், அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், தடியடி நடத்தியும் கூட்டத்தை காவல்துறை கலைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த நடவடிக்கை குறித்து விவசாய சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து அவர்கள் கூறியதாவது,
"நாங்கள் இந்த விவசாயத்தை நம்பிதான் வாழ்ந்து வருகிறோம். சூரியகாந்திதான் இங்கு பணப்பயிர். ஆனால் இந்த பூவின் விதைகளை அரசு கொள்முதல் செய்ய மறுக்கிறது. அரசு கொள்முதல் செய்தால் ரூ.6,400க்கு வாங்க வேண்டும். ஆனால் கொள்முதல் செய்ய மறுப்பதால் தற்போது நாங்கள் தனியார் விற்பனை நிறுவனங்களை நோக்கி தள்ளப்படுகிறோம். தனியாரிடம் ஒரு குவிண்டால் வெறும் ரூ.4,000க்குதான் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
எனவேதான் நாங்கள் வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டோம். ஆனால் எங்கள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகளில் வயதானோர், இணை நோய் உள்ளவர்கள் என பலர் இருக்கின்றனர். இவர்கள் மீது இந்த அரசு இப்படி தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இதற்கு எதிராக எங்கள் போராட்டம் தொடரும்" என்று கூறியுள்ளனர்.
அதேபோல காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா இந்த சம்பவத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். "கட்டார் தலைமையிலான மாநில அரசு தடியடி அரசாக மாறியிருக்கிறது. குறைந்தபட்ச ஆதார விலை கேட்டால் தாக்கப்படுகிறார்கள். விவசாயிகள் மீது இந்த அரசு வெறுப்பை உமிழ்கிறது. இதனை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications