"உ.பி-யில் நாங்க ரொம்ப பேச கூடாது.. மீறினால் "தேச துரோகம்"தான்.. யோகியையே அட்டாக் செய்த பாஜக எம்எல்ஏ
உபி பாஜக எம்எல்ஏ ராகேஷ் ரத்தோர் மாநில அரசை விமர்சித்துள்ளார்
கான்பூர்: "நாங்கள் எம்எல்ஏக்கள்.. அதிகம் பேசினால் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. நான் கொரோனா பற்றி பேசாமல் இருப்பதுதான் நல்லது" என்று உத்தரபிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ ஒருவரே இப்படி சொல்லி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
வடமாநிலங்களில் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.. இதில் உத்தரபிரதேசமும் ஒன்று.. தினம்தோறும் ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.. பலர் உயிரிழந்தும் வருகிறார்கள்.
ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, ஆஸ்பத்திரி தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, சுடுகாடு தட்டுப்பாடு என பல்வேறு பிரச்சனைகளில் உபி மக்கள் சிக்கி உள்ளனர்..

தட்டுப்பாடு
ஆனால், ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்று யாராவது குறை சொன்னால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், ஆளும் பாஜக அரசு போதிய சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்தாததால்தான், ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன..

மயானம்
மயானங்களில் சடலங்கள் நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் வீடியோக்களும், போட்டோக்களும் தினமும் வந்தவண்ணம் உள்ளன.. மரண எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக சடலங்களை கங்கையில் வீசப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக யோகி அரசுக்கு மனித உரிமை ஆணையமும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிலவரம்
இந்நிலையில், மாநிலத்தின் கொரோனா நிலை பற்றி பேசினால், தன் மீது தேசத்துரோகி முத்திரை குத்தப்படும் என்று பாஜக எம்எல்ஏவே செய்தியாளர்களிடம் சொல்லி உள்ளது மிகப்பெரிய பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் பகுதி பாஜக எம்எல்ஏ ராகேஷ் ரத்தோரி.. இவரிடம் செய்தியாளர்கள் தொகுதியில் கொரோனா நிலவரம் எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினர்..

சிறப்பு
அதற்கு எம்எல்ஏ, "எங்கள் நிலை எப்படி இருக்கு தெரியுமா, நாங்க எம்எல்ஏக்கள், நாங்க அதிகம் பேசினால், தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்... அதனால் நான் பேசாமல் இருக்கிறதுதான் நல்லது.. எல்லாம் சரியாக நடந்துட்டு இருக்கு.. இதைவிட வேறு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது.. நான் அரசாங்கம் இல்லை.. ஆனால் அரசாங்கம் சொல்வதை சரியானது என்றுதான் உங்க கிட்ட சொல்ல முடியும்" என்றார்.

பேட்டி
பாஜக எம்எல்ஏவின் இந்த பதில், உபி அரசியலையே அதிர வைத்து வருகிறது.. கடந்த வருடம் கொரோனா ஒழிய கையை தட்டியபோது, "கைதட்டுவதன் மூலம் கொரோனா வைரஸை நீங்க ஒழித்துவிடுவீர்களா" என்று கேட்டவரும் இதே எம்எல்ஏதான் என்பது குறிப்பிடத்தக்கது..!












Click it and Unblock the Notifications