For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: கவுண்டவுன் ஸ்டார்ட்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: 'கர்நாடக குற்றவியல் சட்டத்தின்படி விசாரணை முடிந்து 14 நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் ஏராளமான ஆவணங்கள் இருப்பதால் 14 நாட்களுக்குள் தீர்ப்பு அளிக்க இயலாது. எனவே, செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பை அளிப்பேன். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என்று கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி அதிரடியாக அறிவித்தார் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், உடனடியாக தீர்ப்பின் தேதி அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான்.

ஆனால், கடந்த 27, 28 தேதிகளில் நீதிமன்றத்தில் நடந்த விஷயங்கள்தான் நீதிபதியை எரிச்சலடையச் செய்து உடனடியாக தீர்ப்பு தேதியை அறிவிக்க வைத்தன என்று சொல்கிறார்கள்!.

தீர்ப்புக்கு வரும் முன் வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்.

சுப்ரமணியசுவாமி புகார்

சுப்ரமணியசுவாமி புகார்

ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.64 கோடி சொத்து சேர்த்ததாக கடந்த 1996ஆம் ஆண்டு ஜனதா கட்சி தலைவராக இருந்த சுப்ரமணியசுவாமி சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். அதையேற்று விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

48 வழக்குகள்

48 வழக்குகள்

இந்த வழக்கு உள்ளிட்ட அவர் மீதான 48 இதர வழக்குகளும், சென்னையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு 1997ம் ஆண்டு மாற்றப்பட்டன. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 1991 முதல் 96ம் ஆண்டு வரை, முதல்வராகப் பணியாற்றியபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக ஜெயலலிதா மீது குற்றம்சாட்டப்பட்டது.

நால்வர் மீதும் குற்றச்சாட்டு

நால்வர் மீதும் குற்றச்சாட்டு

இந்த வழக்கில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

2003ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பல காரணங்களால் வழக்கு விசாரணையில் ஜெயலலிதா நேரில் ஆஜராகவில்லை.

259 சாட்சியங்கள்

259 சாட்சியங்கள்

அரசு தரப்பில் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக விளக்கமளிக்க ஜெயலலிதா, நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நேரில் வாக்குமூலம்

நேரில் வாக்குமூலம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2011 ஆண்டு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

1300 கேள்விகள்

1300 கேள்விகள்

இந்த விசாரணையில், 1300க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அரசுத் தரப்பு இறுதி வாதம்

அரசுத் தரப்பு இறுதி வாதம்

அரசு வழக்கறிஞர் பவானிசிங் 259 சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் 15 நாட்களுக்கும் மேலாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சேர்த்துள்ள சொத்து விபரங்களை புள்ளி விபர ரீதியாக எடுத்துக்கூறி வாதிட்டார்.

42 நாட்கள் இறுதி வாதம்

42 நாட்கள் இறுதி வாதம்

இதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 42 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இறுதிவாதம் கடந்த 26ஆம் தேதி நிறைவடைந்தது.

வளர்ப்பு மகன் திருமணச் செலவு

வளர்ப்பு மகன் திருமணச் செலவு

இறுதியாக 26ஆம் தேதி வாதிட்ட அமித் தேசாய் 'தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருமண செலவை பெண் வீட்டார்தான் செய்வார்கள். சிவாஜி கணேசன் இந்தியாவில் பிரபலமான நடிகர். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படிப்பட்ட அவருடைய பேத்தியின் திருமணச் செலவை மாப்பிள்ளை வீட்டார் செலவு செய்ய விட்டிருப்பாரா? சிவாஜியின் பேத்தியைத்தான் என் மனுதாரர் சுதாகரன் திருமணம் செய்துள்ளார். சுதாகரன் திருமணச் செலவு முழுவதும் சிவாஜி குடும்பத்தினர்தான் செய்தார்கள். ஜெயலலிதா ஒரு ரூபாய்கூட செலவு செய்யவில்லை' என்றும் சொன்னார். ஆனால் வழக்கறிஞர் சொன்ன தகவல்கள் குறித்து குறுக்கு கேள்வி கேட்டபடி இருந்தார் நீதிபதி.

ஜெயலலிதாவின் பினாமி அல்ல

ஜெயலலிதாவின் பினாமி அல்ல

'சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேரும் ஒரு கம்பெனியில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அந்த கம்பெனியில் ஜெயலலிதா பினாமி என்று சொல்வது தவறு. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்டுள்ளது' என்று தனது இறுதி வாதத்தை முடித்தார். அதோடு ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வாதங்கள் முடிவடைந்துவிட்டது.

அவகாசம் கேட்டு கேட்டு...

அவகாசம் கேட்டு கேட்டு...

இந் நிலையில் ஜெயலலிதாவின் வழக்கறிஞரான குமார், இறுதியாக தனது வாதங்களை வைக்க இரண்டு மணிநேரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு நீதிபதி சம்மதித்திருந்தார். அதற்காக 27-ம் தேதி குறிக்கப்பட்டது, ஆனால் அன்று அவர் வரவில்லை.

வராத சீனியர்கள்

வராத சீனியர்கள்

இந் நிலையில் இந்த வழக்குக்கு தடைகோரும் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் வாதங்களை வைக்க ஜெயலலிதாவின் வழக்கறிஞர் சென்றுவிட்டார். 27-ம் தேதி காலையில் சிறப்பு நீதிமன்றம் வந்த நீதிபதி குன்ஹா, வழக்கறிஞர் குமாரை இறுதிவாதம் செய்ய அழைத்தார். ஆனால் அவர் வரவில்லை. உடனே, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை இறுதிவாதம் செய்ய அழைத்தார். அவரும் நீதிமன்றத்தில் இல்லை. பவானி சிங்கை அடுத்து இருக்கும் இன்னொரு அரசு வழக்கறிஞரான மராடியை அழைத்தார். 'என்னுடைய சீனியர் பவானிசிங் உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டதால் நாங்களும் வாதிட முடியாது என்றார்.

உயர் நீதிமன்றம் சென்றும் பயனில்லை..

உயர் நீதிமன்றம் சென்றும் பயனில்லை..

அதே சமயம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜாவித் ரஹீம் முன்னிலையில் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி, தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு, ஜெயலலிதா தரப்பில் கூட்டுசதி, கூட்டுசதி செய்யத் தூண்டியதாகக் கூறப்பட்ட வார்த்தையை நீக்க வலியுறுத்தி தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு வந்தன. உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜெயலலிதா தரப்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காத்திருந்த நீதிபதி

காத்திருந்த நீதிபதி

இந் நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா 'இரண்டு தரப்பு சீனியர்களும் வேறு நீதிமன்றத்திற்குப் போய்விட்டால், ஜூனியர்களை வைத்து வாதங்களை முடியுங்கள். அப்படி வாதங்களைத் தொடங்காவிட்டால் இரு தரப்பு இறுதிவாதங்கள் முடிந்துவிட்டதாகக் கருதி தீர்ப்புக்கு வழக்கை ஒத்திவைத்து விடுவேன் என்று எச்சரித்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் காத்திருந்த அவர், ‘அரசு தரப்பும், குற்றவாளிகள் தரப்பும் தங்களுடைய இறுதிவாதத்தை ஆகஸ்ட் 28ம் தேதியன்று கண்டிப்பாக முன்வைக்க வேண்டும்' என்றும் நீதிபதி கெடு விதித்தார்.

பரபரப்பாக கூடிய நீதிமன்றம்

பரபரப்பாக கூடிய நீதிமன்றம்

பரபரப்பான நிலையில் 28ம் தேதி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தனது இறுதி வாதங்களை ஆரம்பித்தார். ‘‘இந்த வழக்கு முழுக்க முழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டது என்பதை ஏற்கனவே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் தனிப்பட்ட சொத்து, அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாய் அனைத்தும் வருமானத்திற்கு அதிகமான சொத்து பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்ததிலும் தவறான கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கு பழிவாங்கும் நோக்கத்தில் தொடரப்பட்டுள்ளதால், குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்'' என்று வக்கீல் குமார் வாதிட்டார்.

வழக்கே போட முடியாது

வழக்கே போட முடியாது

உடனே குறுக்கிட்ட நீதிபதி, 'நீங்கள் செய்வது வாதமே கிடையாது. இதுவரை நீங்கள் வைத்த வாதங்களை தொகுத்துச் சொல்லுங்கள்' என்று கட்டளையிட்டார். இதையடுத்து 'வருமானத்துக்கு அதிகமாக 10 சதவிகிதத்துக்கு மேல் சம்பாதித்திருந்தால் மட்டும்தான் வழக்குப்போட முடியும். ஆனால், இந்த வழக்கில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகத்தான் சம்பாதித்துள்ளார்கள். எனவே இதில் வழக்கே போடமுடியாது' என்றார் குமார்.

சொத்துக்கள் பறிமுதல்

சொத்துக்கள் பறிமுதல்

அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பதிலாக அரசு வழக்கறிஞர் முருகேஷ் மராடி வாதங்களை தொகுத்து வாதிட்டார். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, 1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மூலம் வழக்கு விசாரணைக்கு வந்தது. தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகள் மீதான புகாரில் உண்மை இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேர்மையான விசாரணை

நேர்மையான விசாரணை

சொத்து சேர்த்துள்ளதற்கான ஆதாரங்கள் உரிய சாட்சி, ஆதாரங்களுடன் குற்றபத்திரிகையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதா தரப்பு சொல்வதை போல், இந்த வழக்கு அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடரப்பட்டதல்ல. நேர்மையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகள் தவறு செய்துள்ளதை உரிய ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளோம்.

உண்மையான வருமானமா?

உண்மையான வருமானமா?

'நமது எம்.ஜி.ஆர். மூலமாக 14 கோடி ரூபாயும் சூப்பர் டூப்பர் கம்பெனி மூலமாக 6 கோடி ரூபாயும் வந்ததாக கணக்கு காட்டி உள்ளார்கள். அது உண்மையான வருமானம் அல்ல. அதனை வருமானமாக கணக்கில் வைக்க முடியாது.

ரூ.14 கோடி வருமானம்

ரூ.14 கோடி வருமானம்

சொத்து குவிப்பு வழக்கில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு சந்தா மூலம் ரூ. 14 கோடி கிடைத்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், சந்தா பெற்றதற்காக ஆவணங்கள் அனைத்தும் ஓரிஜினலாக இல்லாமல் நகலாக இருந்தது. இது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ஓரிஜினல் ஆவணங்கள் காரில் எடுத்து சென்றபோது திருடு போய்விட்டதாக தெரிவித்தனர். ஆனால், நீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பு சாட்சியத்தின் போது ஓரிஜினல் சந்தா படிவங்கள் காட்டப்பட்டது. காணமால் போன சந்தா படிவம் எப்படி கிடைத்தது? உண்மையில் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகைக்கு ரூ. 14 கோடி சந்தா மூலம் வருவாய் கிடைக்கவில்லை.

சசிகலாவின் பின்னணி

சசிகலாவின் பின்னணி

சசிகலாவுக்கு 5 ஏக்கர் நிலம்தான் இருந்தது. அவரது கணவர் அரசு ஊழியராக இருந்துள்ளார். சுதாகரனுக்கு ஆண்டு வருமானமே வெறும் 40 ஆயிரம் ரூபாயும், இளவரசிக்கு ஆண்டு வருமானம் வெறும் 48 ஆயிரம் ரூபாயும்தான் இருந்துள்ளது. இவ்வளவு குறைவாக பொருளாதார நிலையில் உள்ளவர்கள் எப்படி பல கம்பெனிகளில் இயக்குனராகவும், பங்குதாரராகவும் இருந்து கோடிக்கணக்கில் எப்படி முதலீடு செய்ய முடியும்?

ஜெயலலிதாவின் ஏஜென்டுகள்

ஜெயலலிதாவின் ஏஜென்டுகள்

மேலும், அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கம்பெனிகள் வழக்கு காலத்திற்கு முன் தொடங்கப்பட்டிருந்தாலும், வழக்கு காலத்தில்தான் வங்கி கணக்கு தொடங்கி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது ஜெயலலிதாவின் ஏஜென்டுகளாக மற்ற மூன்று பேரும் செயல்பட்டுள்ளனர் என்பது உறுதியாகிறது. ஆகவே, ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிகம் சொத்து சேர்த்துள்ளது உண்மை என்பதால், குற்றவாளிக்கு ஊழல் தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் உரிய தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று வாதிட்டார் மராடி.

ஆவணங்கள் தாக்கல்

ஆவணங்கள் தாக்கல்

அதைத் தொடர்ந்து அரசு தரப்பில் 15 புத்தகங்கள் அடங்கிய ஆவணங்களை எழுத்து மூலமாக நீதிபதியிடம் அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் கொடுத்தார். பின்னர், ஜெயலலிதா தரப்பில் வக்கீல் பரணிகுமார், சசிகலா தரப்பில் வக்கீல் மணிசங்கர், சுதாகரன் தரப்பில் வக்கீல் ஜெயராமன், இளவரசி தரப்பில் வக்கீல் அசோகன் ஆகியோர் எழுத்து மூலமான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.அதைத் தொடர்ந்து தி.மு.க சார்பில் வக்கீல்கள் இராம.தாமரைசெல்வன், சரவணன், நடேசன் ஆகியோர் எழுத்துபூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்தனர்.

தேதி குறித்த நீதிபதி

தேதி குறித்த நீதிபதி

இந்த வாதங்களுக்குப் பின்னர், நீதிபதி குன்ஹா பேச ஆரம்பித்தார். அவர் கூறுகையில், '‘இவ்வழக்கு தொடர்பாக அரசு மற்றும் குற்றவாளிகள் தரப்பு வாதம் முழுமையாக முடிக்கப்பட்டது. மேலும், எழுத்து மூலமாக கொடுத்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிந்துள்ள நிலையில், கர்நாடக குற்றப்பிரிவு சட்ட விதியின்படி விசாரணை முடிந்த 14 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். இவ்வழக்கில் சாட்சிகள், எழுத்து பூர்வமான ஆதாரங்கள் அதிகம் உள்ளதால், கூடுதலாக ஒருவாரம் அவகாசம் எடுத்து கொண்டு செப்டம்பர் 20ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். தீர்ப்பு வழங்கும் நாளில் குற்றவாளிகள் நான்கு பேரும் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவர்களுக்கான போலீஸ் பாதுகாப்பு வழங்க மாநகர போலீசாருக்கு உத்தரவிடப்படும்'' என்று கூறிவிட்டு எழுந்தார். இதனையடுத்து கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

அதிர்ச்சியில் ஜெ தரப்பு

அதிர்ச்சியில் ஜெ தரப்பு

தீர்ப்புக்கு இவ்வளவு விரைவாக நாள் குறிக்கப்படும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

செப்டம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமையில் வருகிறது. தீர்ப்பு நாளில் நேரில் ஆஜராகவேண்டிய முதலமைச்சரின் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலேயே விடுமுறை நாளைத் தேர்வு செய்திருக்கிறார் நீதிபதி குன்ஹா என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

பத்து நாட்களுக்கு முன்பே

பத்து நாட்களுக்கு முன்பே

மேலும் உயர்நீதிமன்ற பதிவாளரிடம் 10 நாட்களுக்கு முன்பே தீர்ப்பு தேதி மற்றும் ஜெயலலிதாவின் பாதுகாப்பு குறித்து ஆலோசித்திருக்கிறார் குன்ஹா. விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் விடுமுறைக்கு முன்பாக தீர்ப்பு தேதியை அறிவித்தால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியுமா என்பது பற்றியும் பேசியிருக்கிறார். கர்நாடக முதல்வர் சித்தராமையா இது குறித்து தனது உள்துறை- சட்டத்துறை அமைச்சர்களிடம் ஆலோசித்து "செப்டம்பர் 15 முதல் 22-க்குள் எந்த தேதியாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு வழங்கமுடியும்' எனத் தெரிவிக்க, அதனையடுத்தே செப்டம்பர் 20 என முடிவு செய்தாராம் நீதிபதி.

சந்தித்த சட்ட அமைச்சர்

சந்தித்த சட்ட அமைச்சர்

தீர்ப்பு தேதியை பெங்களூர் நீதிபதி அறிவித்த அதேநாளில் தான், சென்னையில் முதல்வரை சந்தித்தார் மத்திய சட்ட அமைச்சரான ரவிசங்கர் பிரசாத். ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான ஜெயலலிதா தரப்பின் முறையீட்டு மனுக்களுக்கு வக்கீலாக ஆஜரானவர்தான் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதற்றத்தில் ஜெயலலிதா

பதற்றத்தில் ஜெயலலிதா

ஒருபுறம் நம்பிக்கையும் மறுபுறம் பதற்றமாகவும் இருக்கிறார் ஜெயலலிதா என்கிறார்கள் சீனியர் கட்சி நிர்வாகிகள். இது அவரது அரசியல் எதிர்காலத்தின் மீதான வழக்கு. எனவே பல்வேறு அதிகாரிகளை சந்தித்து வழக்கு தொடர்பாக சட்ட ஆலோசனை செய்வதாகவும் கூறப்படுகிறது.

தடை பெற முடியுமா?

தடை பெற முடியுமா?

கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதியே அப்போதைய நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்புரைக்கும் வகையில் தயாராகி வந்ததையும் அதன்பின் பல்வேறு சட்ட நடவடிக்கைகளால் அது மாறியதையும், சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட் வரை சென்று உத்தரவுகள் பெற்றிருப்பதையும் சுட்டிக்காட்டி, இப்போதும்கூட செப்டம்பர் 2ம் தேதி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் மனுவைக் கொண்டு, சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தேதிக்குத் தடை பெறமுடியும் என்றும் கூறுகின்றனர் ஒரு தரப்பினர்.

தீர்ப்பை எதிர்நோக்கி

தீர்ப்பை எதிர்நோக்கி

இத்தீர்ப்பை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பொதுமக்களும், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.மற்ற வழக்குகளைப் போலவே இதிலிருந்தும் ஜெயலலிதா, முதல்வராக நீடிப்பார் என அ.தி.மு.க தரப்பு நம்புகிறபோதும் தீர்ப்பு குறித்த பதட்டம் தெரிகிறது. முதல்வருக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்ற விவாதம், தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

English summary
The special CBI court hearing the disproportionate assets case against Tamil Nadu Chief Minister J Jayalalitha will pronounce its judgment on September 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X