ஜார்க்கண்ட் பரபரப்பு- முதல்வர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகல்? மனைவியை முதல்வராக்குகிறாரா?
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாகவும் மனைவியை முதல்வராக்க போவதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜேஎம்எம் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை திடீரென ஹேமந்த் சோரன் கூட்டியதால் இந்த பரபரப்பு அதிகரித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியில் இருந்து வருகிறார். சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மொத்தம் 7 முறை சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை. இந்த 7 சம்மன்களையும் ஹேமந்த் சோரன் நிராகரித்துவிட்டார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையால் தாம் கைது செய்யப்படலாம் என்கிற அச்சத்தில் ஹேமந்த் சோரன் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்தப் பின்னணியில் ஜார்க்கண்ட் மாநிலம் காண்டே தொகுதி எம்.எல்.ஏ. சர்ஃபராஸ் அகமது தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமா உடனே ஏற்கபட்டு காண்டே தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது. ஹேமந்த் சோரனின் கைது அச்சம், காண்டே தொகுதி எம்.எல்.ஏ. ராஜினாமா இரண்டையும் இணைத்து பாஜக அதிரடியான ஒரு தகவலை வெளியிட்டது.
ஹேமந்த் சோரன் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மனைவி கல்பனாவை முதல்வராக்கப் போகிறார் என கூறியது பாஜக.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று ஹேமந்த் சோரனுக்கு மிக நெருக்கமானவர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் இன்று திடீரென ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார் ஹேமந்த் சோரன். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள், ஹேமந்த் சோரன் முதல்வராக நீடிக்க வேண்டும் என ஒருமனதாக வலியுறுத்தினோம் என தெரிவித்துள்ளனர். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications