
ஜம்முவில் டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பீர் விற்பனை அபச்சாரமாம்..ஆளுநருக்கு எதிராக வரிந்துகட்டும் பாஜக
ஜம்மு: ஜம்மு நகரத்தில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பீர் விற்பனை செய்வதற்கு ஆளுநர் அனுமதித்துள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் 3 ஆண்டுகளுக்கு முன்பு தனி மாநிலமாக இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ம் நடைமுறையில் இருந்தது.

ஆனால் மத்திய பாஜக அரசு 2019-ம் ஆண்டு 370-வது பிரிவை ரத்து செய்தது; ஜம்மு காஷ்மீர் மாநிலம் என்பதை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது, ஜம்மு காஷ்மீர் என ஒரு தனி யூனியன் பிரதேசமாகவும் லடாக் என மற்றொரு தனி யூனியன் பிரதேசமாகவும் பிரித்தது மத்திய அரசு.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரையில் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ், பாஜக மற்றும் சில மாநில கட்சிகள் உள்ளன. இந்த வரிசையில் மாஜி காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான குலாம்நபி ஆசாத், தனி கட்சி தொடங்கி இருக்கிறார். குலாம்நபி ஆசாத் கட்சி, பாஜகவுடன் இணைந்து தேர்தல் களத்தை எதிர்கொள்ள இருக்கிறது.
தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், பீர் மதுபானத்தை அனைத்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீர் விற்பனை தொடர்பாக பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு மாநில பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அம்மாநில பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான கவீந்தர் குப்தா இது தொடர்பாக கூறியதாவது: ஜம்மு நகரம் என்பது கோவில்களை கொண்ட புனித நகரமாகும். டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது. டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் பீர் மதுவிற்பனைக்கு ஆளுநர் அனுமதி அளித்துள்ளதை கடுமையாக எதிர்க்கிறோம். இந்த உத்தரவை மாநில ஆளுநர் திரும்பப் பெற வேண்டும். இந்து மக்களின் உணர்வுகளுக்கு மாநில அரசு மதிப்பளிப்பது கட்டாயம். ஆகையால் ஆளுநர் தனது முடிவை மாற்ற வேண்டும். இவ்வாறு கவீந்தர் குப்தா கூறினார். மாநில ஆளுநருக்கு எதிராக பாஜகவே போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.