சட்டசபையில் எதிரொலித்தது பெங்களூர் பெண் மீதான பாலியல் தாக்குதல் விவகாரம்
பெங்களூர்: கல்லூரி மாணவியை கடத்தி காருக்குள் பாலியல் சித்திரவதை செய்யப்பட்ட பிரச்சினை கர்நாடக சட்டசபையில் எதிரொலித்தது. கட்சி வேறுபாடு மறந்து அனைத்து உறுப்பினர்களும் இந்த விவகாரத்தில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பெங்களூரில் கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் சித்திரவதைக்கு ஆளான செய்தி மீடியாக்களில் வெளியாகிய நிலையில், இன்று கர்நாடக சட்டசபை கூடியதும், பாஜகவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அமைச்சர் ஆர்.அசோக் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்.
சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டது
சபாநாாயகர் காக்கோடு திம்மப்பா அனுமதியளித்ததை தொடர்ந்து பேசிய அசோக், கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது என்று குற்றம்சாட்டியதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற காவல்துறை மறுத்துள்ளதையும் கண்டித்தார்.
பணம், ஜாதி
ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவும், முன்னாள் சபாநாயகரான ரமேஷ் பேசுகையில், காவல்துறையில் ஆள் தேர்வு நடப்பது பணத்தாலும், ஜாதியாலும் மட்டுமே. இந்த நிலை மாறாதவரை காவல்துறை சிறப்பாக செயல்படாது.
என்கவுண்டர் செய்யுங்கள்
கர்நாடகாவின் மானத்தையும், பெண்களின் கற்பையும் காப்பாற்ற வேண்டுமானால் காவல்துறையில் களையெடுப்பு நடைபெற வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யவும் போலீஸ் தயங்க கூடாது என்றார். கர்நாடகாவின் முன்னாள் உள்துறை அமைச்சர்கள் சிலரின் பாராட்டத்தக்க செயல்பாடுகளையும் இதற்கு உதாரணமாக ரமேஷ் கூறினார்.
போலீசாருக்கு அரசியல்வாதிகள் ஆதரவு
இதனிடையே பாஜகவின் முன்னாள் அமைச்சர்கள் ரவி, ஜீவராஜ் ஆகியோரும் கர்நாடக அரசு இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். புகார்களை பெற மறுக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அப்படியே அரசு நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், தங்களுக்கு வேண்டிய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை வைத்து நடவடிக்கையை தவிர்த்து விடுகிறார்கள். இதுபோன்ற 'காட்பாதர்கள்' இருக்கும் தைரியத்தில்தான் போலீசார் மெத்தனமாக உள்ளனர் என்றனர்.
போலீசார் குறட்டை
சபாநாயகர் காக்கோடு திம்மப்பாவும், உறுப்பினர்கள் கருத்தை ஆமோதித்தார். அரசியல்வாதிகள் சிபாரிசை பெற்றுக்கொண்டு பெங்களூர்தான் வேண்டும் என்று இடமாறுதலை கேட்டு பெற்று இங்கு வரும் போலீசார், அதன்பிறகு குறட்டை விட்டு தூங்கிக்கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட போலீசாருக்கு எதிராக மாநில அரசு திடமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
முளையில் கிள்ளி எறியுங்கள்
முதல்முறையாக குற்றம் செய்யும்போதே அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதன்பிறகு அவர்கள்தான் பெரிய ரவுடிகளாக மாறுவார்கள். அந்த ரவுடிகள் அரசியல்வாதிகளாக உருமாறுவார்கள். எனவே இதுபோன்ற குற்றவாளிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்போதுதான் சமூகம் அமைதியாக இருக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.