டெல்லி முதல்வர் வேட்பாளர்கள்: கிரண்பேடி, கெஜ்ரிவால் சொத்து மதிப்பு தெரியுமா?
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் கிரண்பேடிக்கு ரூ.12 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.2 கோடி சொத்து உள்ளதாகவும் அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்களில் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளிடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது.
ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் செல்வாக்கு இருப்பதால் முன்னாள் பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடியை பாஜக களத்தில் இறக்கி உள்ளது. இவர் ஏற்கனவே கெஜ்ரிவாலுடன் இணைந்து காங்கிரஸ் ஆட்சியின்போது ஊழல் எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டார்.
ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்த அவர் அதனுடன் தன்னிடமுள்ள சொத்துப்பட்டியலையும் தாக்கல் செய்துள்ளார்.

ரூ. 2 கோடி சொத்து
அந்த பட்டியலில், தனக்கு சுமார் ரூ.2 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். லோக்சபா தேர்தலின் போது ரூ.2.14 கோடி சொத்து உள்ளது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

கார் இல்லை
மேலும் அவர், தன்னிடம் கார் ஏதுமில்லை. வங்கியில் உள்ள டெபாசிட் ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.2.28 லட்சமாக குறைந்துவிட்டது என கூறியுள்ளார். கெஜ்ரிவாலின் பெயரில் டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள கவுசாம்பி நகரில் ரூ.56 லட்சம் மதிப்பில் பிளாட் உள்ளது. அவரது மனைவி பெயரில், கூர்கான் நகரில் ரூ. 1கோடி மதிப்புள்ள பிளாட் உள்ளது. மேலும் அசையா சொத்துக்கள் ரூ.37 லட்சம் மதிப்பில் உள்ளது.

மனைவிக்கு கடன்
எம்.எல்.ஏ., என்ற வகையில் மாதம் தோறும், ரூ.35 ஆயிரம் சம்பளம் பெறுகிறார். மனைவி பெயரில் ரூ.41 லட்சம் கடன் உள்ளது. கெஜ்ரிவால் மற்றும் அவரது மனைவி பெயரில், ரூ.9 லட்சம் மதிப்பில் தங்கமும், ரூ.50 ஆயிரம் மதிப்பில் வெள்ளிப்பொருட்களும் உள்ளன. கெஜ்ரிவால் வைத்திருந்த மாருதி வேகன் ஆர் கார் பரிசாக வழங்கப்பட்டது என கூறியுள்ளார்.

10 வழக்குகள்
லோக்சபா தேர்தலின் போது தன் மீது 8 வழக்குகள் இருந்ததாக குறிப்பிட்டிருந்த கெஜ்ரிவால் தற்போது தன் மீது 10வழக்குகள் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

கிரண் பேடி சொத்து மதிப்பு
பாஜகமுதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, தன்னிடம் 5 கிராம் தங்கம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் தன்னிடம் ரூ.12 கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

5 கிராம் தங்கம்
தன்னிடம் உள்ள அசையும் சொத்துகளாக 5 கிராம் தங்க நகை உள்பட 3 கோடியே 14 லட்சத்து 2 ஆயிரத்து 677 ரூபாய் மதிப்பிலான பொருட்களும், அசையா சொத்துகளாக டெல்லியின் உதய் பார்க் பகுதியில் உள்ள துவாரகா அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.6.05 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று வீடுகளும், புனே மற்றும் குர்கான் பகுதிகளில் ஒரு கோடியே 85 லட்சம் மதிப்பிலான விவசாய நிலங்களும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மாருதி கார்
மேலும், ஒரு மாருதி-800 கார், தனது கணவரின் பெயரில் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் 28.50 லட்சம் மதிப்பிலான விவசாய நிலம், தனது கையிருப்பு ரொக்கம் ரூ. 55,750 மற்றும் கணவரின் கையிருப்பு ரொக்கம் ரூ.15,500 எனவும் கூறப்பட்டுள்ளது.

நிரந்தர வைப்புநிதி
வங்கிகளில் நிரந்தர வைப்பு நிதியாக தனது பெயரில் 2.10 கோடி ரூபாய் மற்றும் 4 வங்கிகளின் சேமிப்பு கணக்குகளில் 25 லட்சத்து 43 ஆயிரத்து 852 ரூபாயும் உள்ளது. கடந்த 2013-14 நிதியாண்டில் தனது மொத்த வருமானம் 67 லட்சத்து 15 ஆயிரத்து 464 ரூபாய். கணவரின் வருமானம் வருமான வரி உச்சவரம்புக்கு மிகைப்படாத தொகை என்பதால் இந்த கணக்கில் அது குறிப்பிடப்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளார் கிரண் பேடி.












Click it and Unblock the Notifications