கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: திரிணாமுல் காங். 101 வார்டுகளில் அபார வெற்றி; 33 இடங்களில் முன்னிலை!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 101 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் 33 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு மிக கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா மாநகராட்சி பதவி காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
மொத்தம் 144 வார்டுகளைக் கொண்ட கொல்கத்தா மாநகராட்சித் தேர்தல் வாக்குப் பதிவு டிசம்பர் 19-ந் தேதி பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. மொத்தம் 4,949 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 63.37% வாக்குகள் பதிவாகின.

திரிணாமுல் முன்னிலை
இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. இன்று மாலை நிலவரப்படி மொத்தம் 101 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர். மேலும் 33 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

பாஜகவுக்கு 5 வார்டுகள்
பாஜக ஒரு வார்டில் வென்றுள்ளது; 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது; காங்கிரஸ் கட்சி 2 வார்டுகளில் வென்றுள்ளது; இடதுசாரிகள் 2 வார்டுகளில் முன்னிலையில் உள்ளன.

மமதா ட்வீட்
இத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக மமதா பானர்ஜி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு அனைவரும் சேவையாற்றுவோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.

தொடரும் திரிணாமுல் காங். ஆதிக்கம்
மேற்கு வங்க மாநில சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலிலும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்று 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்தது. தற்போதைய கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸும் பாஜகவும் பரஸ்பரம் புகார்களை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications