இப்படியா சாவு வரணும்! அப்படியே விழுந்த மிடில் பெர்த்! கழுத்து எலும்பு உடைந்து ரயில் பயணி பலி
மலப்புரம்: ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் முறிந்து விழுந்ததில் கீழே இருந்த பெர்த்தில் படுத்திருந்த பயணிக்கு கழுத்து எலும்பு உடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மாரஞ்சேரி வடமுகில் பகுதியைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான் (62). இவர் தனது மனைவி, மகன்கள், சகோதரர்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மரத்திகா அலிகான் வேலை நிமித்தாக கடந்த வாரம் மலப்புரத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயிலில் பயணித்துள்ளார். பெர்த்தில் அலிகானுக்கு கீழே இருந்த இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
பயணத்தில் இவர் தனது இரவு உணவை முடித்துக் கொண்டு தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் (பெர்த்) படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இரவு நேரம் ரயில், தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்ற இடத்தை கடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மரத்திகா அலிகான் படுத்திருந்த இருக்கைக்கு மேல் இருந்த மிடில் பெர்த் உடைந்து அலிகான் மீது விழுந்தது.
இதில் அவருடைய கழுத்து எலும்புகள் உடைந்து நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அலிகானின் கை, கால்கள் செயலிழந்துவிட்டன. உடனடியாக அவரை மீட்ட ரயில்வே போலீஸார் வாரங்கல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள கிங்ஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு கழுத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் நேற்று இரவு அவருடைய பூர்வீக வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு இன்றைய தினம் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் ரயிலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ரயில்களில் மின்விசிறிகள், ஏசி இயங்காமை, மின் விளக்குகள் இயங்காமை, மூட்டை பூச்சி தொல்லை, கழிப்பறை தூய்மையின்மை, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும். இதுகுறித்து டிடிஆரிடம் கூறினாலும் ஒரு பயனும் இல்லை. அவர் கேட்டுவிட்டு அடுத்த பெட்டிக்கு சென்றுவிடுவார்.
அப்படியிருக்கும் போது ஒரு மிடில் பெர்த்தே அறுந்து கீழே விழுந்ததில் பயணி இறந்திருக்கிறார் என்றால் அந்த ரயிலின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே காசை கொடுத்து பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்வே துறை ஆவண செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications